You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பொன்னியின் செல்வன்': "எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனோ, அருண்மொழி வர்மனோ அல்ல, அவரது கதாபாத்திரமே வேறு!"- இயக்குநர் அஜய் பிரதீப்!
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சினிமாவில் அவரது கனவு படமான 'பொன்னியின் செல்வன்' குறித்தான அறிவிப்பு எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.
'பொன்னியின் செல்வன்': எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று புதினம் 'பொன்னியின் செல்வன்'. இந்த நாவலை திரைத்துறையில் படமாக கொண்டு வர ஆசைப்பட்டவர்களில் நடிகர் எம்.ஜி.ஆர். முக்கியமானவர்.
'பொன்னியின் செல்வன்' கதையை தானே இயக்கி வந்தியத்தேவனாகவும், அருண் மொழிவர்மனாகவும் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. பின் நாடக வடிவமாகவும் 'பொன்னியின் செல்வன்' அரங்கேறியது.
இயக்குநர் மணிரத்தினம் தற்போது 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். ரஹ்மான் இசையில் கார்த்தி, 'ஜெயம்' ரவி, ஐஷ்வர்யாராய் பச்சன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இதன் முதல் பாகம் இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செளந்தர்யா ரஜினிகாந்தும் வெப் சீரிஸாக 'பொன்னியின் செல்வன்' கதையை எடுத்து வருகிறார்.
*எம்.ஜி.ஆர். நடிக்கும் 'பொன்னியின் செல்வன்'
இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்', அஜய் பிரதீப் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளது. இது குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.
வந்தியத்தேவனாகவும், அருண் மொழிவர்மனாகவும் இந்த அறிவிப்பு குறித்து வெளியான போஸ்டரில் எம்.ஜி.ஆர். இருக்கிறார்.
இந்த படம் குறித்தும், எம்.ஜி.ஆர்.ரின் கதாப்பாத்திரம் குறித்தும் படத்தின் இயக்குநர் அஜய் பிரதீப்பிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன், "கடந்த 2000வது வருடத்தில் இருந்து கிட்டத்தட்ட 22 வருடங்களாக 'பொன்னியின் செல்வன்' கதையை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். அதற்காகதான் இன்று எம்.ஜி.ஆர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை அவருக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் அர்ப்பணம் செய்திருக்கிறேன்.
'பொன்னியின் செல்வன்' கதையை எம்.ஜி.ஆர். ரசித்து படித்து முடித்த பிறகு கதைக்கான உரிமையை அவர் வாங்கி படம் எடுக்க நினைத்தார். அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன் என இரண்டு கதாப்பாத்திரங்களிலும் அவர் நடிக்க நினைத்தார். அருண்மொழி வர்மனுடைய அக்காதான் குந்தவை. குந்தவையை வந்தியத்தேவன் திருமணம் செய்ய வேண்டும். இதனால் அவரால் இந்த இரண்டு கதாப்பாத்திரங்களையும் செய்ய இயலவில்லை. அதனால் படம் தாமதமாகி பிறகு அவருக்கும் இடையில் விபத்து ஏற்பட்டது.
பின்பு அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன் எதாவது ஒன்று செய்யலாம் என மாறி மாறி யோசித்து இறுதியில் அவரால் செய்ய முடியாமல் போயிற்று. அதன் பிறகு மகேந்திரனுடன் முயற்சி செய்தார். அதுவும் கை கூடாமல் போக அடுத்து பாரதிராஜா, கமல்ஹாசன், ஸ்ரீதேவி இவர்கள் கூட்டணியில் இளையராஜா இசையில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பேனரில் படம் செய்ய உறுதி செய்து விட்டார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதன் பிறகு இந்த கதையை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என உரிமையை நாட்டுடைமையாக்கினார்".
*'பொன்னியின் செல்வன்' கதையை தற்போது நீங்கள் எடுக்க என்ன காரணம்? உங்களை பற்றி சொல்லுங்கள்?
"'ஜெனோவா' படத்தில் எம்.ஜி.ஆர்ரின் கதாநாயகியாக நடித்த ஓமனாவின் மகன் நான். சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆர். அவரை முன் மாதிரியாக கொண்டுதான் நான் வளர்ந்தேன். அடிப்படையில் நான் ஒரு கேமரா மேன். ஒளிப்பதிவாளர் கே.எல். பிரசாத்திடம் உதவியாளராக பணி புரிந்த நான் விளம்பர படங்கள், அரசு ஆவணங்களில் பணி புரிந்துள்ளேன். என் சிறுவயதிலேயே 'பொன்னியின் செல்வன்' கதையை நீதான் எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். தெரிவித்துள்ளார். அதன் முயற்சிதான் இது".
போஸ்டரில் எம்.ஜி.ஆர். விரும்பிய வந்தியத்தேவன், அருண்மொழிவர்மன் கதாப்பாத்திரங்களில் இருந்தார். படத்திலும் அவருக்கு அதே கதாப்பாத்திரங்கள் தானா?
"நிச்சயம் இல்லை. அந்த கதாப்பாத்திரங்களுக்கு பாடல், சண்டை காட்சிகள் எல்லாம் இருக்கும். எம்.ஜி.ஆர். விரும்பியதற்காக அவரது பிறந்த நாளில் இந்த போஸ்டர் வெளியிட்டோம்.
நான் எடுக்கும் 'பொன்னியின் செல்வன்' கதையில் எம்.ஜி.ஆர். சோழ சாம்ராஜ்யத்தின் உயிர்நாடியான முக்கியமான கதாப்பாத்திரத்தில் படத்தில் கிட்டத்தட்ட 22-24 நிமிடங்களுக்கு தோன்றுவார். அந்த காட்சிகளை சிறப்பு மோஷன் கேப்சரில் உருவாக்கியுள்ளோம்".
'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக்குவதே சவால் எனும்போது, இணைய தொடராகவும் எடுக்க நினைத்தது ஏன்?
"கொரோனா பரவல் தீவிரத்தை பொறுத்து இந்த மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெப்சீரிஸூக்கான படப்பிடிப்பு தொடங்கி விடுவோம். முதலில் நான்கு எபிசோடுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 12 சீசன்களில் 153 எபிசோட்டுகள் இருக்கும். வெப் சீரிஸ் தனியாகவும் படம் தனியாகவும் எடுக்கவுள்ளோம். படம் இரண்டு வருடங்களில் மூன்று பாகங்களாக வெளியாகும். சின்ன பழுவேட்டையர், பெரிய பழுவேட்டையர் இப்படி சில கதாப்பாத்திரங்களில் வெப் சீரிஸ், படம் இரண்டிற்கும் பொதுவாக நடிகர்கள் நடிப்பார்கள். கதாநாயகர்கள் இரண்டிலும் மாறுவார்கள்.
இன்னொரு பக்கம் இயக்குநர் மணிரத்தினம் 'பொன்னியின் செல்வன்' எடுத்து வருகிறார். எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர் அவர். அவர் படம் வெளியாகும் போது நாமும் போட்டியாக இறக்க முடியாதல்லவா? அது மட்டுமல்லாமல் இது இணைய தொடராக எடுக்க மிகவும் சரியான கதை".
செளந்தர்யா ரஜினிகாந்தந்தும் 'பொன்னியின் செல்வன்' கதையை இணைய தொடராக எடுக்கிறாரே என்ற கேள்விக்கு, "இந்த கதையை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். மக்களுக்கு எது பிடிக்கிறதோ அது ஓடும். இந்தியில் மூன்று 'பகத்சிங்' வெளியாகி மூன்றுமே வெற்றி பெற்றது. அதுபோல மூன்று 'பொன்னியின் செல்வன்' வெளியாகட்டும், வெற்றி பெறட்டும்" என்கிறார்.
இளையராஜா எப்படி இசையமைப்பாளராக உள்ளே வந்தார்?
"இந்த கதையை இளையராஜாவிடம் எடுத்து சென்ற போது 'ஏற்கனவே மணி சார் செய்து கொண்டிருக்கும் போது நான் என்னப்பா தனியாக செய்ய?' என்று கேட்டார். 'என் வேலையை முதலில் பாருங்கள்' என்று சொல்லி அவரிடம் என் திரைக்கதையை கொடுத்தேன். அவரும் கதையில் ஈடுபாடு காட்ட ஆரம்பிக்க '46 வருடங்களுக்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டியது' என்றேன். அவரும் மகிழ்ச்சியாக, 'ஆமாம், இந்த படம் செய்யாமல் வேறு எந்த படம் செய்ய போகிறேன்' என ஒத்து கொண்டார். இன்று மாலை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட இருக்கிறோம்" என்கிறார் இயக்குநர் அஜய் பிரதீப்.
பிற செய்திகள்:
- 'அன்பே, பெருமைப்படுகிறேன்' - விராட் கோலிக்காக அனுஷ்காவின் உணர்ச்சிப் பூர்வமான பதிவு
- உத்தரப்பிரதேச தேர்தல், இந்துத்துவத்துக்கு சமூக நீதி விடுக்கும் சவாலா?
- சகோதரியை மணந்த மன்னர்கள் - எகிப்து, கிளியோபாட்ரா பற்றி அறியப்படாத தகவல்கள்
- ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு; தடுப்பூசி போடாததால் விரைவில் வெளியேற்றம்
- பிக்பாஸ் 5: ராஜூ, பிரியங்கா, பாவனி - இந்த சீசன் வெற்றியாளர் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்