பிக்பாஸ் 5: ராஜூ, பிரியங்கா, பாவனி - இந்த சீசன் வெற்றியாளர் யார்?

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் இறுதி நிகழ்வு இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கிறது.

ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் இறுதி கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்களாக முன்னேறி இருக்கின்றனர். வழக்கமாக பிக்பாஸ் தமிழின் ஒவ்வொரு சீசனும் ஜூலையில் தொடங்கும்.

ஆனால், கொரோனா பரவல் தீவிரம் காரணமாக கடந்த நான்காவது சீசனை போலவே இந்த ஐந்தாவது பிக்பாஸ் சீசனும் தாமதமாக கடந்த வருடம் அக்டோபர் முதல் வாரத்திலேயே தொடங்கியது. இசைவாணி, ராஜூ, மதுமிதா, அபிஷேக், நமீதா, பிரியங்கா, அபிநய், பாவனி, சின்ன பொண்ணு, நாடியா, வருண், அக்‌ஷரா, சுருதி, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ் சீசனில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவராக நமீதா களம் இறக்கப்பட்டார்.

ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற நேரிட்டது.

இந்த சீசனில் நமீதா திடீரென வெளியேறியது, அக்‌ஷரா மீதான தங்க கடத்தல் வழக்கு வெளியே பேசு பொருளானது, நாடக் கலைஞரான தாமரைச்செல்வி இறுதி வரைக்கும் வந்தது, வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக சஞ்சீவ், அமீர் உள்ளே வந்தது கடைசி நேரத்தில் பிரியங்காவிற்கு உடல் நிலை சரியில்லாமல் வெளியேறியது என பல நிகழ்வுகள் இந்த சீசனில் சுவாரஸ்யமானதாக பார்க்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவி பிரபலங்களே அதிகம் இருப்பார்கள் என்ற வழக்கமான விதிமுறைகள் தாண்டி இந்த சீசனில் நிறைய புதுமுகங்களை தொலைக்காட்சி தரப்பு அறிமுகப்படுத்தினார்கள். மேலும் ஐந்தாவது சீசன் என்பதால் வீடு முழுக்க 5 என்ற பல இடங்களிலும் இருக்கும்படியாக பசுமையான தீம்மில் வீட்டை அமைத்தது, நீச்சல் குளத்தை ஜெயிலாக மாற்றியது, கழிவறைகளுக்கு இரண்டு பக்கம் வழி என நிறைய மாற்றங்களை செய்திருந்தார்கள்.

மொத்தம் 105 நாட்கள் நடந்த இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் தனது இறுதி கட்டத்தை இன்று எட்டியிருக்கிறது. ராஜூ இந்த சீசன் வெற்றியாளர், பிரியங்கா இரண்டாம் இடம், பாவனி மூன்றாம் இடம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானாலும் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோரில் யார் இந்த சீசனின் வெற்றியாளர் என்பதை இன்று மாலை ஒளிபரப்பாகும் நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். வெற்றிக்கோப்பையுடன் குறிப்பிட்ட பரிசுத் தொகையும் வெற்றியாளருக்கு தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: