You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, பிபிசி செய்தியாளர், கொழும்பு
குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் - பெரும்பாலும் தனது கணவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன.
இலங்கையின் பிரபல சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பயங்கரவாத எதிர்ப்புக் குற்றச்சாட்டின் கீழ் சுமார் 20 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் மத நல்லிணக்கத்திற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஹிஸ்புல்லா இளம் இஸ்லாமிய சிறுவர்களிடம் கிறித்துவ சமூகத்திற்கு எதிராகத் தூண்டும் வகையில் பேச்சு கொடுத்ததாக, அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, ஏப்ரல் 2021-இல் குற்றம் சாட்டப்படுவதற்கும் முன்பே ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தார். இன்னமும் சிறையில் தான் இருக்கிறார். அவருடைய வழக்கு விசாரணை இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
அவருடைய மனைவி இந்தக் குற்றச்சாட்டை உறுதியாக மறுக்கிறார்.
"அவர் வெளிப்படையாகப் பேசுபவர். இஸ்லாமிய உரிமைகள் மற்றும் பொதுவாக சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். தனது கணவர் மீதான குற்றச்சாட்டுகள், "இனவெறிக்கு எதிராக, பாகுபாட்டிற்கு எதிராகப் பேச விரும்பும் எவருக்கும் ஒரு செய்தியைச் சொல்கிறது," என்று மாரம் கலீஃபா கூறுகிறார்.
ஹிஸ்புல்லா முதன்முதலில் உள்ளூர் இஸ்லாமியவாத நபர்களால் 2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். சொகுசு நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டதில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.
ஆரம்பத்தில், அவர் குண்டு வீசியவர்களில் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், பிரபல மசாலா வியாபாரியான குண்டு வீசியவரின் தந்தைக்காக, சொத்துத் தகராறு குறித்த இரண்டு சிவில் வழக்குகளில் மட்டுமே அவர் ஆஜரானதை சுட்டிக்காட்டி பிறகு அரசுத் தரப்பு அந்தக் குற்றச்சாட்டுகளைக் கைவிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அளவிலான மனித உரிமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்பு, கடந்த ஆண்டு அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் ஹிஸ்புல்லாவை, "மனசாட்சியின் கைதி," என்று அழைத்தது.
ஹிஸ்புல்லாவின் கைது, சமீப ஆண்டுகளாக சிறுபான்மை சமூகத்தைத் துன்புறுத்தியதன் ஒரு பகுதியே என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். இலங்கையின் 2.2 கோடி மக்கள்தொகையில் பெரும்பான்மையாக சிங்கள பௌத்தர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள இலங்கையில் இனப் பாகுபாடுகள் ஆழமாக இருக்கின்றன.
ஏனைய சிறுபான்மை தமிழ் சமூகத்தினருக்கான தனித் தாயகம் கோரிப் போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சுமார் முப்பது ஆண்டுக்காலப் போரின்போது இஸ்லாமியர்கள் அரசின் கூட்டாளிகளாக இருந்தனர்.
ஆனால், 2009-ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் யுத்தம் முடிவடைந்த பின்னர், பெரும்பான்மை சிங்களர்களில் ஒரு பிரிவினரின் அணுகுமுறை மாறியதாக இஸ்லாமிய தலைவர்கள் கூறுகின்றனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரும் சிங்கள இனக் குழுக்களால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் இடம்பெற்றுள்ளதாக உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு ஒரு முக்கியமான தருணம். தாக்குதல்கள் நடந்து சில வாரங்களுக்குப் பிறகு, இஸ்லாமியர்களின் சொத்துகளும் பள்ளிவாசல்களும் சிங்களக் குழுக்களால் சேதப்படுத்தப்பட்டன. வெறுப்புப் பேச்சுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இஸ்லாமிய சமூகத்தை சாத்தான்களாகச் சித்தரித்து, இஸ்லாமிய கடைகளைப் புறக்கணிக்க சிங்கள கடும்போக்காளர்கள் அழைப்பு விடுத்தனர்.
தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் முயற்சிகளுக்குப் பாதுகாப்பு செயலாளராக தலைமை தாங்கிய தற்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, தேசப் பாதுகாப்பை முன்னிறுத்திப் பிரசாரம் செய்து, சிங்கள பௌத்த தேசியவாதிகளின் பலமான ஆதரவுடன் 2019ஆம் ஆண்டு நவம்பரில் பதவிக்கு வந்தார்.
அவருடைய மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஓராண்டுக்குப் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், ராஜபக்ஷக்கள் அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை உறுதியாக வலுப்படுத்திக் கொண்டனர்.
"இஸ்லாமிய தீவிரவாதிகளால் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, வாக்குத் தளத்தைத் தக்கவைத்துக்கொள்ள அரசுக்கு இது ஒரு துருப்புச் சீட்டு," என்று இலங்கை இஸ்லாமிய கவுன்சிலின் ஹில்மி அஹமத் பிபிசியிடம் தெரிவித்தார்.
தொற்றுநோய்களின் போது, சிறுபான்மை இஸ்லாமிய மற்றும் கிறித்துவ சமூகங்களைச் சேர்ந்த கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசு முதலில் அனுமதிக்கவில்லை. பல உடல்கள் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டன. ஆனால், வல்லுநர்கள் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
உடல்களை எரிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. அப்போது அதிகாரிகள், புதைகுழிகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக வாதிட்டனர்.
சிறுபான்மையினர் மற்றும் உரிமைக் குழுக்கள் குரல் எழுப்பிய பிறகு, கடந்த ஆண்டு இலங்கையின் கிழக்குப் பகுதியில் கோவிட் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய அரசு ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கியது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக பர்தா அணிவதையும் மற்ற அனைத்து வகையான முகமூடிகளையும் தடை செய்யும் திட்டத்தைக் கடந்த ஆண்டு அரசு கொண்டு வந்தது. அமைச்சர் ஒருவர், "இது சமீபத்தில் தோன்றிய மத தீவிரவாதத்தின் அடையாளம்," என்றார்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மதப் பள்ளிகளை மூடும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது தேசிய கல்விக் கொள்கையை மீறுவதாக அரசு கூறியது.
போருக்குப் பிறகான காலப்பகுதியில் இஸ்லாமியர்கள் புதிய எதிரியாக மாறியுள்ளனர் என மனித உரிமை வழக்கறிஞர் பவானி ஃபொன்சேகா கூறியுள்ளார்.
"இஸ்லாமிய சமூகம் தாக்குதலுக்கு உள்ளான பல சம்பவங்களை நாங்கள் பார்த்துள்ளோம். அந்தச் சமூகம் முற்றுகைக்கு உட்பட்டுள்ளது என்று நான் கூறுவேன்," என்று அவர் கூறினார்.
ஆனால், அவர்கள் இஸ்லாமிய சமூகத்தை அநியாயமாக நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை அரசு நிராகரிக்கிறது.
இலங்கை தகவல் துறையின் பொது இயக்குநர் நாயகம் மொஹான் சமரநாயக்க பிபிசியிடம், "எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட, பாரபட்சமான கொள்கை இல்லை. ஆனால் சிங்களவர்கள் உட்பட அனைத்து சமூகங்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் இருக்கலாம் என்ற உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேன்," என்றார்.
மதரஸாக்களை மூடும் திட்டம் குறித்து கேட்டதற்கு, "ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில், இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற சில கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
அனைத்து சமூகங்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சமீபத்திய முயற்சிகளால் அரசின் நடவடிக்கை சில சர்ச்சைகளைத் தூண்டியுள்ளது. கடந்த நவம்பரில் அதிபர் ராஜபக்ஷவால் சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக நியமிக்கப்பட்ட, "ஒரு நாடு, ஒரே சட்டத்திற்கான பணிக்குழு," சிறுபான்மை சமூகங்களை இலக்காகக்க் கொண்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சிறுபான்மையினர் மற்றும் சில பெரும்பான்மை சிங்களர்களுக்கான திருமணம் மற்றும் வாரிசுரிமை தொடர்பான சிறப்புச் சட்டங்களைப் பார்த்து, ஒரே மாதிரியான விதிகளை பரிந்துரைக்குமாறு பணிக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரோவை நியமித்தது சிறுபான்மையினர் இடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மதவெறி மற்றும் இஸ்லாமிய விரோதப் பேச்சுகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு.
பிபிசியிடம் பேசிய துறவி, சட்ட சீர்திருத்தங்கள் நீண்ட காலமாகத் தாமதமாகிவிட்டதாகக் கூறினார். நாடு எதிர்நோக்கும் முக்கியப் பிரச்னைகளை மட்டுமே தான் எழுப்புவதாகவும் அவர் கூறினார்.
"இந்த நாட்டில் மத பிரச்னைகளை உருவாக்கும் நோக்கில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. வாஹாபிசம், சலாபிசம் போன்றவற்றை ஊக்குவிக்கும் இஸ்லாமிய குழுக்கள் உள்ளன. மேலும், அவர்கள் இந்த நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்." என்று கூறினார்.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் இலங்கை ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கடந்த ஆண்டில் 30% வரை அதிகரித்தது, சிங்கள பௌத்தர்கள் மத்தியிலும் அரசின் செல்வாக்கை இழக்கச் செய்துள்ளது.
இஸ்லாமிய தலைவர்கள் மத்தியில், தற்போதைய நிதி நெருக்கடி அவர்களுடைய சமூகத்தின் கவனத்தைத் தற்போதைக்கு மாற்றியதாக ஓர் உணர்வு உள்ளது. ஆனால், பௌத்த தேசியவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் போதுதான் மேலும் பிரச்னைகளைத் தடுக்கமுடியும் என்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்