You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு
இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள்ளது.
குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்
1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் - ஈ - அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா
6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா
7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா
8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா
9. அல்கய்தா அமைப்பு
10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்
11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு
ஆகியவை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.
நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்யக் கூடாதவை
தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அல்லது அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அல்லது அதன் சார்பில் செயலாற்றுகின்ற வேறேதேனும் அமைப்பின்,
(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது.
(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது.
(இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது,
(ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.
(உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது.
(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது.
(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது.
(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.
(ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது.
(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,
(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது.
(ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது
(ஃ) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது.
எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வினைகள்
இது இவ்வாறிருக்க, தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளான சிலோன் தௌஹீத் ஜமாஅத் மற்றும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியவை, தாம் தடைசெய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தன.
எவ்வாறாயினும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் தடைசெய்யப்பட்டால், நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தமது சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அந்த இயக்கம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது.
மேலும் ஈஸ்டர் தினத் தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, எவ்வித நியாயமான ஆதாரங்களுமின்றி தமது இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமென அடையாளப்படுத்தி இருப்பதையிட்டு தாம் விசனமடைவதாகவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தாம் ஒரு தடவையேனும் அழைக்கப்படவில்லை என்றும், இது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதியின் நியமங்களுக்கு முரணானதாகும் எனவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறிப்பிட்டிருந்தது.
அதேவேளை தம்மீதான தடையை, இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: