You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெரியார் பெயரை நீக்கிய நெடுஞ்சாலைத் துறை; தமிழகத்தில் வலுக்கும் கண்டனக்குரல்கள்
சென்னையில் ஈ.வெ.ரா. பெரியார் சாலையின் பெயரை மாநில நெடுஞ்சாலைத் துறை மாற்றியதற்கு கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. மேலும், திராவிடர் விடுதலை கழகத்தினர், அந்த பெயர்ப் பலகைகளை அழித்து வருகின்றனர்.
சென்னையின் நீண்ட சாலைகளில் ஒன்று ஈ.வெ.ரா. பெரியார் சாலை. பாரீஸ் பகுதியில் துவங்கும் இந்தச் சாலை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், பெரியார் திடல், கீழ்ப்பாக்கம் வழியாக பூந்தமல்லி வரை செல்கிறது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சாலையானது, பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, 1979ல் ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு அருகே புதிய பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. அதில் ஈ.வே.ரா. பெரியார் சாலை என்பதற்குப் பதிலாக, Grand Western Trunk Road எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பெயர் மாற்றம் இன்று கவனம் பெற்றதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தப் பெயர் மாற்றத்திற்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?
எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க" என்று குறிப்பிட்டிருந்தார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, "ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் வகுத்த வியூகத்தின்படி, தில்லி எஜமான் மோதி பிறப்பித்த ஆணையை, அடிமை எடப்பாடி நிறைவேற்றி இருக்கிறார். தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார்" என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலையில் அந்தப் பகுதிக்கு வந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், "கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு" என்பதை கறுப்பு பெயின்ட் ஊற்றி அழித்தனர்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, "பெயரை மாற்றிய தகவல் நேற்று இரவுதான் தெரிய வந்தது. இன்று பிற்பகல் அங்கே சென்று எல்லாவற்றையும் அழித்து விட்டோம். தமிழக அரசு தானாக முன்வந்து பெயரை முன்பிருந்தபடி மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து அழிப்போம்" என்று கூறினார்.
பிற செய்திகள்:
- தமிழக தேர்தல்: 3 ரகசிய அறிக்கைகள்! அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி
- பாலியல் கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் மனக் குமுறல்
- காது கேட்காது, ஆனால் சைகை புரியும் - ஆச்சரியப்படுத்தும் மேய்ப்பு நாய்
- மேற்கு வங்க தேர்தல்: மமதா பானர்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை
- தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: எச்சரிக்கும் மாநில அரசு
- யூரி ககாரின்: மனிதன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்று 60 ஆண்டுகள் நிறைவு - மெய்சிலிர்க்கும் தருணங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: