'மம்மூட்டியிடம் இருக்கும் அதே குணம்'- விஜய் சேதுபதி வெற்றிக்கு காரணம் என்ன?

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடகர், பாடலாசிரியர், சின்னத்திரை நடிகர், சின்னத்திரை தொகுப்பாளர் என பன்முகதன்மை கொண்ட கலைஞரான விஜய்சேதுபதிக்கு இன்று பிறந்தநாள்.

தமிழில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, புதுப்பேட்டை, லீ, வெண்ணிலாகபடிகுழு, வர்ணம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர், சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். அவரின் வித்தியாசமான கதைத் தேர்வு, மக்களைக் கவரும் மாறுபட்ட நடிப்பு, படங்களின் வெற்றி காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழைத் தாண்டி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என அவரின் திரைப்பயணம் விரிகிறது.

ராஜபாளையத்தில் பிறந்து, சென்னையில் படித்து, துபையில் பணியாற்றிவிட்டு மீண்டும் கலை ஆர்வம் காரணமாக சென்னை வந்து வாய்ப்புகள் தேடி அலைந்து, போராட்டங்களை சந்தித்து இன்றைக்கு 60வது படத்தை தொடப்போகும் விஜய்சேதுபதியின் சக்சஸ் ஸ்டோரி என்ன அவரின் தனித்துவம் எது என்று அவருடன் பணியாற்றிய, அவரை வைத்து படங்கள் இயக்கிய திரை பிரபலங்களிடம் பிபிசிக்காக பேசினோம். அவர்களும் ஆர்வமாக சொன்ன விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

"மம்மூட்டியிடம் இருக்கும் குணம்"

விஜய் சேதுபதி பற்றிப் பேசிய இயக்குனர் சீனுராமசாமி, "விஜய்சேதுபதி வெற்றிக்கு முக்கியமான காரணமாக, நான் நினைப்பது நிதானம்தான். தான் புரிந்து கொண்டு, கற்றுக்கொண்ட நடிப்பை நிதானமாக கையாண்டார். அதற்கேற்ப படங்களை தேர்ந்தெடுத்து படிப்படியாக முன்னேறினார். என்னுடைய தென்மேற்கு பருவக்காற்று படத்துக்காக அவர் வந்தபோது, அந்த படத்தின் திரைக்கதை புத்தகத்தை அவர் கையில் கொடுத்தேன். 'இந்த படைப்பில் நடிக்கப்போற நீங்க இதை படித்துவிட்டு ரசிகனாக கருத்தை சொல்லுங்க. இதுல எதுவெல்லாம் தெரியும். எதில் சிக்கல், எது புரியலை என என்னிடம் சொல்லுங்கள்' என்றேன். அவர் முன்பே வசனங்களை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். திரைக்கதை மீது ஆர்வம் வர வேண்டும் என்பதற்காக அதை செய்தேன். அவரும் உடனே ஆர்வமாக படிக்க ஆரம்பித்துவிட்டு தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். தன்னை அந்த கேரக்டருக்காக தயார் படுத்திக்கொண்டார்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "மலையாள சினிமாவின் பிரபல எழுத்தாளரான மறைந்த லோகிதாஸ் மீது மம்மூட்டி ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தார். ஒருநாள் அவர் திரைக்கதையை யதேச்சையாக படித்து பார்க்க, அவர் திறமை மீது நம்பிக்கை வைத்து படம் கொடுத்தார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அங்கே மம்மூட்டி உள்ளிட்ட பல கலைஞர்கள் படப்பிடிப்புக்கு செல்லும் முன்பு திரைக்கதையை முழுமையாக வாசித்துவிட்டு, அதற்கேற்ப தங்களை தயார் படித்துக்கொள்வார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன். விஜய்சேதுபதியிடம் அந்த குணம் அப்போதே இருந்தது. வாழ்வில், சினிமாவில் தான் பெற்ற அனுபவங்கள் அடிப்படையில் பண்பட்ட நடிகராக மாறியிருக்கிறார். சிலர் உயரத்துக்கு சென்றதும் பழசை மறந்துவிடுவார்கள். ஏணியை எட்டி உதைப்பார்கள். நான் அவரை வைத்து படம் இயக்கி நாளாகிவிட்டது. ஆனாலும் அதே அன்போடு இருக்கிறார். இப்போது பெரிய ஹீரோவாக மாறினாலும் முன்பை விட, என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவராக இருக்கிறார்'' என்று சிலாக்கிறார்.

"சினிமாவில் சம்பாதிப்பதை அதற்கே திருப்பி கொடுக்கிறார்"

விஜய் சேதுபதி போலவே தேசியவிருது பெற்ற நடிகர் தம்பி ராமையா பிபிசியிடம் பேசுகையில் ''என் மகன் உமாபதி நடித்த திருமணம் பட நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். எனக்கும் அவருக்கும் அதிக பழக்கம் இல்லை. அந்தப் படத்தை இயக்கிய சேரன் இயக்கத்திலும் அவர் நடிக்கவில்லை. நானும் அவருடன் நடித்தது இல்லை. ஆனாலும், ஒரு கலைஞனுக்கு உதவ வேண்டும், ஒரு கலைஞனின் மகன் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தார். இப்படிப்பட்ட கலைஞர்கள் சினிமாவில் குறைவு" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "விஜய் சேதுபதி சினிமாவில் சம்பாதித்த பணத்தை மீண்டும் சினிமாவில் முதலீடு செய்கிறார். படங்கள் தயாரிக்கிறார். நண்பர்களுக்கு உதவுகிறார். அந்தவகையில் அவர் வழக்கமான சினிமா கலைஞரும் இல்லை. வழக்கமான ஹீரோவும் இல்லை. அதை விட உயர்ந்தவர், அந்த பண்பு அவரை உயர்த்துகிறது" என்று தனக்கே உரிய உணர்ச்சிகர குரலுடன் கூறினார்.

வர்ணம் படத்தில் நடந்த சம்பவம்

விஜய்சேதுபதியை வைத்து 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சீதக்காதி' படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் இன்னும் விரிவாக பேசினார். ''விஜய்சேதுபதி சின்ன ரோலில் நடித்த வர்ணம் படத்தின் திரைக்கதை ஆசிரியர்களுள் நானும் ஒருவன். படப்பிடிப்பு தளத்துக்கு நான் போகவில்லை. அந்த படத்தில் '96' இயக்குனர் பிரேம் குமார், 'ஏஸ்' பட இயக்குனர் ஆறுமுககுமார் உள்ளிட்ட பலர் உதவியாளர்களாக பணியாற்றினார்கள். அவர்கள் விஜய்சேதுபதி நடிப்பை அப்போதே குறிப்பிட்டு பேசினார்கள். 'அவர் நடித்தபோது நாங்க கைதட்டி பாராட்டினோம்' என்றார்கள். 'சின்ன ரோலுக்கு கூட இவ்வளவு சின்சியராக நடிப்பது யார்? அவரை பார்க்கணும்' என்று நினைத்தேன்.

பின்னர் அவரை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஆடிசனுக்கு கூப்பிட்டேன். சரியான நேரத்துக்கு வந்தார், டெடிகேசனாக இருந்தார். அவரைத் தேர்வு செய்தேன். அந்தப் படத்தில் எந்த தொந்தரவும் கொடுக்காமல் சிறப்பாக நடித்தார். குறிப்பாக, 'ஒருமுறைதான் இந்த சீனில் நடிக்க முடியும். அதை முடிந்தவரை சிறப்பாக செய்யணும்' என்று ஒவ்வொரு முறையும் நினைத்து நடித்தார். ஸ்கிரிப்டை தாண்டி தன்னால் முடிந்த அளவுக்கு கூடுதலாக எதையாவது செய்யவேண்டும் என்று முயற்சிப்பார்" என்று கூறினார் பாலாஜி தரணிதரன்.

மேலும் பேசிய பாலாஜி தரணிதரன், "அவர் இயல்பான மனிதர். எல்லாவற்றையும் நன்றாக ரசிப்பார், சிரிப்பார். நண்பர்கள் யாரையும் விட்டுக்கொடுக்கமாட்டார். அவர்களுக்காக பேசுவார், அக்கறையாக விசாரிப்பார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் தொடங்கி இன்று ஜவான் அளவுக்கு பெரிய இடத்துக்கு போய் இருக்கிறார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பார். அதை சரியாக பயன்படுத்துவார். அவர் கமர்ஷியல் படம் மட்டுமல்ல, சீதக்காதி மாதிரியான படங்களையும் செய்வார். அவருக்குள் ஒரு கலைஞன் இருக்கிறார். அதனால் மாறுபட்ட கதைகள், கேரக்டர் பண்ண விரும்புகிறார்.

இப்படிப்பட்ட மாறுபட்ட படங்களில் பெரிய சம்பளம் கிடையாது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு வெறும் ஒரு லட்சம்தான் சம்பளம் கொடுத்தோம். சீதக்காதியில் நிறைய குறைத்துக்கொண்டார். அதனால்தான் அந்தப் படத்தை எங்களால் எடுக்க முடிந்தது. பல படங்களில் சம்பள விஷயத்தில் தியாகம் செய்கிறார். அதனால் வழக்கமான ஹீரோவை தாண்டி அவர் சூப்பர் ஹீரோவாக இருக்கிறார்' என்று சிரிக்கிறார்.

"குறும்பட காலம் தொட்டே நட்பு"

ஆரம்ப காலம் முதல் விஜய்சேதுபதியின் நண்பராக படத்திலும், நிஜ வாழ்க்கையிலும் இருப்பவர் ரமேஷ் திலக். அவர் பிபிசியிடம் பேசுகையில் ''அவருக்கும், எனக்கும் 15 ஆண்டுகளுக்கு மேல் நட்பு. அதை நட்பு என சொல்வதை விட சகோதர பாசம் என சொல்வேன். இருவருமே குறும்படங்களில் நடித்த காலத்தில் இருந்தே பழக்கம். சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருந்தோம். அவ்வப்போது 'டேய், அந்த கம்பெனியில வாய்ப்பு கிடைக்கும் போய் பாரு. அந்த இயக்குனர் படம் பண்ணப்போறாரு, போய் பேசு' என ஆலோசனை கொடுப்பார்.

நாங்கள் இருவரும் இணைந்து சூதுகவ்வும் படத்தில் நடித்தோம் . 12.12.12 தேதியில் அந்தப் படம் தொடங்கியது. மறு ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. எங்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அன்றைக்கு என்னை எப்படி நடத்தினாரோ, அதேபோல்தான் இன்றைக்கும் பாசமாக நடத்துகிறார்" என்று கூறினார்.

"அவரிடம் பல தனித்தன்மை உண்டு. குறிப்பாக, இந்த சீனில் நீங்க ஏன் இங்கே சும்மா நிற்கிறீர்கள். இப்படி பேசுங்க, இதை செய்யுங்க என பக்கத்தில் நிற்கும் நடிகர்களுக்கு உற்சாகம் கொடுப்பார். சில சமயம் தன் டயலாக்கை பிரித்து பேச சொல்வார். அவர்களுக்கு புது சீன் கொடுக்க வைப்பார். இதை அவருடன் நடித்த அனைத்து நடிகர்களும் மறக்காமல் சொல்வார்கள். அவருடன் வெளியூர் செல்வது ஜாலியான அனுபவம். அவர் சாப்பாட்டு பிரியர் ரோடு கடை, சின்ன ஓட்டல் என எல்லா இடத்திலும் ருசியாக சாப்பிடுவார். நம்மையும் சாப்பிட வைத்து அழகு பார்ப்பார். இந்த உணவுடன், இதை மிக்ஸ் பண்ணி சாப்பிடு, சூப்பராக இருக்கும் என டிப்ஸ் கொடுப்பார்.

இன்றைக்கு தமிழ் தவிர, மற்ற மொழிகளிலும் அவர் நடித்து, வெற்றி பெற்றுள்ளார். அதற்கு காரணம் அவரின் பொறுமை, சகிப்புதன்மை, காத்திருப்புனு பல விஷயங்களை சொல்லலாம். இந்த படம் போனால் , அடுத்து வரும் என நம்பிக்கையுடன் பல படங்களை இழந்தார். அவர் நினைத்தது மாதிரி அடுத்து நல்ல படங்கள் வந்தது, அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று பாசத்துடன் கூறினார் ரமேஷ் திலக்.

"இயல்பாகப் பழகுபவர்"

விஜய்சேதுபதி நடித்த 50வது படம், 100 கோடி ரூபாயை வசூலித்த மகாராஜா. அதை இயக்கிய நித்திலன் சாமிநாதன் கூறுகையில் ''அவரின் பெரிய பிளஸ் அண்டர்ஸ்டாண்டிங்தான். ஒருவரை பார்த்து, ஒரு ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு மிகச்சரியாக முடிவெடுப்பார். இந்த சீனை இப்படி பண்ணினால் நல்லா இருக்கும். இந்த டயலாக்கை இப்படி பேசினால் செட்டாகும் என நினைப்பார்.

அவர் இயல்பான மனிதர். நிஜத்திலும் நடிக்கமாட்டார். கேமரா முன்னாலும் தேவையில்லாமல் நடிக்கமாட்டார். இந்த கேரக்டருக்கு, இந்த சூழ்நிலைக்கு இவ்வளவு நடிப்பு போதும் என முடிவெடுத்துவிடுவார். அவரிடம் நம் கருத்தை தைரியமாக சொல்லலாம். 'அவரும் இப்படி மாற்றலாமா? இப்படி செய்யலாமா' என கேட்பார். செட்டில் ஈகோ, பதற்றம், டென்ஷன் இருக்காது.

மகாராஜா மாதிரியான கதை ஹிட்டாகும். இந்த மெசேஜ் போய் சேரும் என நம்பினார். அதனால், நடிக்க ஓகே சொன்னார். அந்த நடிப்பு, திரைக்கதை பிடித்ததால் ஆர்வமாக நடித்தார். அவர் நினைத்தது நடந்தது, மகாராஜா வெற்றிக்குபின்னரும் அவர் மாறவில்லை. அமெரிக்காவிற்கு நாங்க சென்றபோது ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அப்போது சில பெண்கள் நீங்க மகராஜா ஹீரோதானே என்று பேச்சு கொடுத்தார்கள். அப்போது இவர்தான் படத்தின் இயக்குநர், இவர்தான் வெற்றிக்கு காரணம் என்று என்னை அறிமுகப்படுத்தினார். அன்றைக்கு எனக்கு பிறந்தநாளும் கூட. அவரின் அன்பை, அந்த வார்த்தையை மறக்க மாட்டேன்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

எஸ்.பி. ஜனநாதனை காப்பாற்றப் போராடினார்

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த லாபம், புறம்போக்கு என்கிற பொதுவுடமை படங்களின் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசுகையில், ''விஜய்சேதுபதியிடம் இயக்குனர் சீன் சொல்லும்போது உன்னிப்பாக உள்வாங்கிக்கொள்வார். பின்னர் தனது கருத்துகளை இயக்குனரிடம் சொல்வார் அல்லது சில சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வார். ஒரு சீனை எடுக்கும்போது தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களை அழைத்து பேசுவார். அவர்களின் டயலாக்கை கேட்பார். அதில் மாற்றம் செய்யலாமா? அதற்கேற்ப தன் நடிப்பை, டயலாக்கை செம்மை படுத்தலாமா என நினைப்பார். மற்ற நடிகர்களும் நன்றாக நடிக்க வேண்டும், அப்போதுதான் ஒட்டு மொத்தமாக அந்த சீன் நல்லா வரும் என்பார்" என்று கூறினார்.

மேலும், "எஸ்.பி.ஜனநாதன் மீது விஜய்சேதுபதிக்கு அவ்வளவு பிரியம், மரியாதை. உலக சினிமாவை மட்டுமல்ல, பொதுவுடமை கருத்துகள் உள்ளிட்ட பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டார். ஜனா சார் மருத்துவமனையில் உயிருக்கு போராடியபோது அவரை எப்படியாவது பிழைக்க வைக்கவேண்டும் என்று போராடினார். ஒரு கட்டத்தில் டாக்டர்கள் கை விரித்த நிலையிலும் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்கட்டும். அவரை மீட்கவேண்டும் என்று மன்றாடினார். அது நடக்கவில்லை.

ஜனா சார் இருந்திருந்தால் விஜய்சேதுபதி மூலமாக அவர் இன்னும் பல நல்ல படங்களை கொடுத்து இருப்பார். விஜய்சேதுபதியும் ஒரு விதத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவர். அதனால் அவரிடம் இருந்து மாறுபட்ட, வித்தியாசமான கதைகள் வந்தன. அப்படிப்பட்ட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவார். பலரின் தேவைகளை கேட்டு உதவி செய்தார்.'' என்று தனது அனுபவங்களை சொல்கிறார்.

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராக விஜய்சேதுபதி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. "குற்றச்சாட்டுகள் வந்தாலும், அந்த நிகழ்ச்சி அவர் கையில் இல்லை. அவர் அந்த நிகழ்ச்சி இயக்குனர், ஒருங்கிணைப்பாளர் சொல்வதை செய்கிறார். சினிமாவில் அவர் கருத்தை, நிலைப்பாட்டை சொல்ல முடியும். முற்றிலும் வணிகமயமான அந்த நிகழ்ச்சியில் அது சாத்தியமில்லை. சினிமாவில் அவர் முகம் வேறு, சின்னத்திரையில் அவர் நிலை வேறு" என்கிறார்கள் அந்த நிகழ்ச்சியை பற்றி நன்கு அறிந்தவர்கள்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு