இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்குத் தடை வருகிறது

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்கு இனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும். விரைவில் இந்த ஆணை அமலுக்கு வரும் என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்த ஆடை, நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு நேரடியாகவே அச்சுறுத்தலாக அமைகிறது என்று கூறுகிறார் சரத் வீரசேகர.

"தமது சிறு வயதில் தான் பழகிய முஸ்லிம் நண்பர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், புர்கா என்ற ஆடையை அணியவில்லை" என அவர் குறிப்பிடுகிறார்.

புர்கா சமீப காலத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு ஆடை என்கிறார் அவர்.

இந்த புர்கா ஒரு மதவாதத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆடையாகவே காணப்படுகின்றது என்றும், இதனைக் கட்டாயம் தடை செய்வதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

அதேபோன்று, மதரசா பாடசாலைகளை தடை செய்யும் வகையிலான நடவடிக்கைகளை தான் எதிர்வரும் ஓரிரு நாள்களில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

மதராசாக்களுக்குத் தடை வரும்

இலங்கையில் ஆயிரக்கணக்கான மதரசா பாடசாலைகள் உள்ளன என்றும், அவை அனைத்தும் நாட்டின் கல்விக் கொள்கைக்கு அப்பாற் சென்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கையிலுள்ள 5 வயது முதல் 16 வயது வரையான பிள்ளைகள் அனைவரும், தேசிய கல்வி கொள்கைக்கு அமையவே, கல்வி கற்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

அதைவிடுத்து, ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப, பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.

இந்தநிலையில், இலங்கையில் இயங்கும் மதரசா பாடசாலைகளை விரைவில் தடை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தேசிய தௌஹித் ஜமாஆத் என்னும் அமைப்பே, இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலை அடுத்து தற்காலிகமாக புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு இலங்கையில் புர்கா ஆடை, மதரசா பாடசாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த பின்னணியில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் மிக வேகமாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, புர்கா ஆடைக்கான தடை விதிக்கும் அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, அமைச்சர் தெரிவிக்கிறார்.

அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத் தலைவர் ஹில்மி அகமது, புர்காவில் இருக்கும் நபர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டால், "அடையாளம் காண்பதற்காக, முகத்தை மூடிய துணியை அகற்றுவதற்கு யாருக்கும் ஆட்சேபனை இருக்காது" என்று கூறினார்.

எந்த மதமாக இருந்தாலும் தங்கள் முகத்தை மூடுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்று கூறிய அவர், "இதை உரிமை என்ற அடிப்படையில் இருந்து பார்க்கவேண்டும். மத அடிப்படையில் இருந்து பார்க்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.

மதராசா விவகாரம் பற்றி கேட்டதற்கு, பெரும்பாலான மதராசாக்கள் அரசிடம் பதிவு செய்துகொண்டிருக்கின்றன. "விதிமுறைகளைப் பின்பற்றாத மதராசாக்கள் ஒரு 5 சதவீதம் இருக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்" என்று தெரிவிக்கிறார் ஹில்மி அகமது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :