You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"மலையக மக்களுக்கு ரூ. 1,000 சம்பளம் தராவிட்டால் நடவடிக்கை" - முடிவுக்கு வந்த 6 வருட போராட்டம்
இலங்கை மலையக பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் 6 வருட சம்பள போராட்டம் புதன்கிழமை (மார்ச் 10) நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பல வருடங்களாக தமது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வந்த மலையக மக்களுக்கு 1,000 ரூபா சம்பளம் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக மார்ச் 5ஆம் தேதியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், மலையக மக்களுக்கான சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும், வரவு செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவுமாக நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் 5ம் தேதி முதல் இந்த சம்பளத் தொகையை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேயிலை, ரப்பர் ஆகிய தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கே இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், இதுவரை கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே நிர்ணயிக்கப்பட்டது.
கூட்டு ஒப்பந்தத்தின் படி, 1000 ரூபா சம்பளத்தை வழங்க கம்பனிகள் நிராகரித்து வந்த நிலையில், இந்த பிரச்னைக்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சின் ஊடாக, சம்பள நிர்ணய சபையை நாடியிருந்தன.
இந்த நிலையில், சம்பள நிர்ணய சபையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு கம்பனிகள் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், வாக்கெடுப்பின் மூலம் மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்க இணக்கம் எட்டப்பட்டது.
எனினும், இந்த 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு கம்பனிகள் இன்றும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம், 300 நாட்கள் வருடத்திற்கு வேலை வழங்கப்பட வேண்டும்.
சம்பள நிர்ணய சபையினால், சம்பளத்தை மாத்திரமே நிர்ணயிக்க முடியும் என்பதுடன், வேலை நாட்களை அவர்களினால் நிர்ணயிக்க முடியாது.
இவ்வாறான நிலையில், தற்போது வேலை நாட்களை தீர்மானிப்பதில் பிரச்சினை எழுந்துள்ளதாக அறிய முடிகின்றது.
சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை எதிர்த்து, சுமார் 180திற்கும் அதிகமான எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இந்த அனைத்து எதிர்ப்ப மனுக்களிலும் ஒரே விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தமையினால், தாம் அந்த அனைத்து எதிர்ப்பு மனுக்களையும் நிராகரித்ததாக அவர் கூறினார்.
அரசாங்கத்தினால் எட்டப்பட்டுள்ள தீர்மானத்தை கட்டாயம் கம்பனிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
பெருந்தோட்ட கம்பனிகள் மாத்திரமன்றி, சிறுத்தோட்ட உரிமையாளர்களும், தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை, எவரேனும் ஒருவர் மீறுவாராயின், அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இயலுமை தமக்கு காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற தீர்மானம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு செலவுத்திட்டத்திலும் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, அமைச்சரவையிலும் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன், கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வேலை நாட்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும், அவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தினால் அது அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான நிலையில், கம்பனிகள் மற்றும் சிறுத்தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை கட்டாயம் வழங்க வேண்டும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
- 2 நொடிக்கு ஒரு மின்சார ஸ்கூட்டர்: தமிழகத்தில் அமையும் ஓலாவின் உலகின் மிகப் பெரிய தொழிற்சாலை
- காங்கோ தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு?
- மண்ணையே உரமாக, பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தி சாதிக்கும் தெலங்கானா இயற்கை விவசாயி
- ஹாரி - மேகன் பேட்டி: இன ரீதியிலான குற்றச்சாட்டு குறித்து பக்கிங்காம் அரண்மனை விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்