You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியுரிமை மசோதா: இலங்கை மலையக தமிழர்கள் ஏமாற்றம்
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பு கவலைக்குரிய விடயம் என இலங்கை தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோப்பி, தேயிலை, இறப்பர் போன்ற பயிர் செய்கைகளுக்காக 1844ஆம் ஆண்டு காலப் பகுதியில் அழைத்து வரப்பட்டவர்களே இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள்.
அந்த காலப் பகுதிக்கு முன்னரும் இந்தியாவிலிருந்து பெரும்பாலான தமிழர்கள் இலங்கை நோக்கி வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், கூலித் தொழிலாளர்களாக இந்த காலப் பகுதியிலேயே தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் மலையகப் பகுதிகளில் லயின் குடியிருப்புக்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சுமார் 150 வருடங்களாக இலங்கையில் தேயிலை, இறப்பர் போன்ற தொழில்களில் ஈடுபட்ட இவர்களினால், இலங்கையின் ஏற்றுமதித்துறை மிகவும் அபிவிருத்தி அடைந்த நிலைக்கு முன்னோக்கி நகர்ந்தது.
அதன்பின்னர் 1948ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இந்திய வம்சாவளித் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசாங்கத்தால் நாடற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினால் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை அடுத்து, இந்தியாவின் தலையீட்டில் சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கை ஊடாக ஒரு தொகுதி இந்திய வம்சாவளித் தமிழர்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதுடன், ஏனைய ஒரு தொகுதி மக்களை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், 1979ஆம் ஆண்டு அரசிலமைப்பின் ஊடாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இன கலவரத்தின் போதும் தமது பாதுகாப்பு கருதி பெருமளவான இந்திய வம்சாவளித் தமிழர்கள், இந்தியாவை நோக்கி சென்றிருந்தனர்.
அதுமாத்திரமன்றி, மலையக பகுதிகளில் ஏற்பட்ட இன கலவரங்களின் போது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கி இந்திய வம்சாவளித் தமிழர்கள் சென்ற நிலையில், அங்கு தொடர்ந்த யுத்தம் காரணமாகவும் பெருமளவிலான இந்திய வம்சாவளித் தமிழர்கள் இந்தியாவை நோக்கி சென்றிருந்தனர்.
இவ்வாறு கூலித் தொழிலுக்காக வருகைத் தந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள், இன்றும் பல்வேறு நலன்சார் விடயங்களுக்காக இந்தியாவின் உதவித் திட்டங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை தமிழர்களை புறக்கணிக்கும் வகையில் இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை மசோதாவினால் (சட்டமூலம்) ஏமாற்றம் அடைந்துள்ளதாக பல துறைசார்ந்தவர்களும் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் மலையக ஊடகவியலாளரான கந்தையா தனபாலசிங்கத்திடம் (ஆர்.ஜே.தனா) பிபிசி தமிழ் வினவியது.
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள், குடியுரிமை பறிக்கப்பட்ட சம்பவங்களினால் இந்தியாவிற்கு மீண்டும் தமிழர்கள் சென்று வாழ்ந்து வருகின்ற நிலையில் இந்திய அரசாங்கத்தினால் இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்டமையானது கவலைக்குரிய விடயம் என அவர் தெரிவிக்கின்றார்.
வன்முறைகளின் போது பாதுகாப்பு கருதி மலையகத்திலிருந்து இந்தியா நோக்கி சென்ற தமிழர்களுக்கு இந்த மசோதா (சட்டமூலம்) ஏமாற்றத்தை தந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவிலிருந்து சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைத்தந்த இந்திய வம்சாவளி மக்கள் குறித்து, இந்தியா இதுவரை உரிய கரிசனை கொள்ளாமையும் வருத்தமளிப்பதாக அவர் கூறுகின்றார்.
காலத்திற்கு காலம் கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், சம்பள பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும், அது தொடர்பில் இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கொண்ட கரிசனையைக் கூட, இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீது இந்தியா காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தமிழ்நாட்டு அரசாங்கம், இந்தியாவிலிருந்து வருகைத் தந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கந்தையா தனபாலசிங்கம் கூறுகின்றார்.
இந்திய குடியுரிமை மசோதா (சட்டமூலம்) தொடர்பில் இந்திய வம்சாவளித் தமிழரான செங்கீற்று பத்திரிகையின் ஆசிரியர் பொன்னுசாமி பிரபாகரனிடம் பிபிசி தமிழ் வினவியது.
''இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அரசாங்கமர் ஒரு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. உண்மையில் இந்திய குடியுரிமை சட்டத்தில் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டிய தேவையுள்ளது என்பது யதார்த்தப்பூர்வமான உண்மை. அதேவேளை, சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சில சாசனங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டு வரப்பட்ட சில சாசனங்களை தெற்காசிய நாடுகள் உரிய வகையில் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் இலங்கையில் குடியேற்றப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து அனுப்பப்பட்டிருந்தனர். ஒரு தொகுதியினர் அங்கேயும், மற்றுமொரு தொகுதியினர் இலங்கையிலும் இருக்கின்றனர். இன்றைக்கு இலங்கையில் இருக்கின்ற மலையக தமிழர்கள், நிரந்தரமாக இலங்கை பிரஜைகள் ஆக்கிட்டாலும் கூட, இந்தியாவில் சொத்துக்கள், உறவுகள், பாரம்பரியங்கள், கலாசாரங்கள் இன்றும் மிக நெருக்கமானதாகவே இருக்கின்றது.
இந்த நிலையில், இந்திய குடியுரிமை சட்டம் மலையக மக்களை ஒதுக்கி வைக்குமாக இருந்தால், அவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குவார்கள். இந்தியாவிலுள்ள அவர்களின் பாரம்பரிய சொத்துக்கள் இழக்கப்படுவதுடன், இரட்டை குடியுரிமை பெறுவதற்கான சந்தர்ப்பமும் இழக்கப்படும். யுத்தம் மற்றும் அதற்கு முன்னதாக காலப் பகுதியில் புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழ்ந்து வரும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவார்களானால், அது வரலாற்று தவறாக பதிவாகும். குடியுரிமை மசோதாவை கொண்டு வந்த இந்திய அரசு அந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கை மாத்திரமன்றி, தெற்காசியாவில் வாழ்கின்ற இந்திய பூர்வீக குடியுரிமை கொண்டவர்களை இணைத்துக்கொள்ளும் வகையில் இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொண்டால் மாத்திரமே நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் இது அமையும்" என பொன்னுசாமி பிரபாகரன் கூறினார்.
இந்திய குடியுரிமை மசோதா (சட்டமூலம்) தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த யூ தொலைக்காட்சியின் அலைவரிசை பிரதானி ஏ.எல்.இர்பானிடம் பிபிசி தமிழ் வினவியது.
இன ரீதியில் தமிழர்களையும், மத ரீதியில் இஸ்லாமியர்களையும் பிரிக்கும் மசோதாவாகவே தான் இதனை அவதானிப்பதாக ஏ.எல்.இர்பான் தெரிவிக்கின்றார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் அண்டைய நாடுகளாக கணக்கிட்டப்பட்டு, அங்கிருந்து வந்த 6 மாதத்தவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்க முடியுமாக இருந்தால், ஏன் அங்கு வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அல்லது இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்ற கேள்வி எழுவதாக அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை அண்டைய நாடுகளாக கருதுகின்ற இந்தியா, மியன்மார் மற்றும் இலங்கையை ஏன் அந்த பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை என்ற கேள்வியை அவர் எழுப்புகின்றார்.
அத்துடன், யுத்தக் காலத்தில் புலம்பெயர்ந்த இந்தியாவிற்கு சென்ற அகதிகளுக்கு, அகதி அந்தஸ்த்தை கொடுக்காது, சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்ற பெயரையே இந்த குடியுரிமை மசோதாவின் ஊடாக இந்தியா வழங்கியுள்ளதாக ஏ.எல்.இர்பான் குறிப்பிடுகின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: