You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்டை நாட்டு மதச்சிறுபான்மையினர் குறித்து இந்தியா கூறுவது உண்மையா?
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்த குடியேறிகளில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டத்தின்படி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறித்துவர்கள் தாங்கள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நாட்டில் இருந்து வந்ததாக நிரூபித்தால் அவர்கள் இந்தியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த மூன்று நாடுகளிலும் உள்ள மதவழிச் சிறுபான்மையினர் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கொடுமைக்கு உள்ளாவதாகவும், அவர்கள் எண்ணிக்கை குறைவதாகவும் இந்திய அரசு வாதிடுகிறது.
பிற சிறுபான்மை பிரிவினருக்கு குடியுரிமை வழங்காது என்பதால் இந்த சட்டம் பாகுபாடானது என்று விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில், உண்மையில் இந்த மூன்று அண்டை நாடுகளிலும் உள்ள முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் நிலைமை என்ன?
முஸ்லிம் அல்லாதவர்கள் எவ்வளவு பேர்?
1951க்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்கள் அல்லாதவர்களின் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார்.
1947ல் நடந்த இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறி பாகிஸ்தான் சென்ற பிறகு, முஸ்லிம் அல்லாதவர்கள் பாகிஸ்தானில் இருந்து பெருமளவில் வெளியேறிய பிறகு இது நடந்ததாக கூறப்படுகிறது.
1951ல் 23 சதவீதமாக இருந்த பாகிஸ்தானின் சிறுபான்மை மக்கள் தொகை, சிறுபான்மையினருக்கு நேரும் கொடுமைகள் காரணமாக அடுத்த பல பத்தாண்டுகளில் பெருமளவில் சுருங்கிவிட்டதாக அமித்ஷா கூறுகிறார். ஆனால், தற்போது பாகிஸ்தானாகவும், வங்கதேசமாகவும் (முந்தைய கிழக்கு பாகிஸ்தான்) இருக்கிற இரு நாட்டின் மக்கள் தொகை தரவுகளையும் அவர் தவறாக சேர்த்துக்கூறுவதாகத் தெரிவதால் இந்த புள்ளிவிவரம் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
முந்தைய மேற்கு பாகிஸ்தானாக இருந்த, இப்போதைய பாகிஸ்தான் நாட்டின் இந்து மக்கள் தொகை 1951ல் 1.5 முதல் 2 சதவீதம் வரை இருந்தது என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் காட்டுகிறது. இந்த சதவீதம் குறிப்பிடுகிற அளவு மாறவில்லை என்பதையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஆனால், இன்றைய வங்கதேசத்தில் 1951ல் இருந்த மக்கள் தொகையில் முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கை 22 அல்லது 23 சதவீதம் ஆகும். இது 2011ல் 8 சதவீதமாக குறைந்துவிட்டது.
எனவே வங்கதேசத்தின் முஸ்லிம் அல்லாதவர்கள் சதவீதம் பெருத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் இந்த சதவீதம் குறைவாகவும், அதே நேரத்தில் மாறாமலும் உள்ளது.
பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள் போன்ற சிறுபான்மை மதத்தவர்களும் உண்டு. 1970ல் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்ட அகமதியாக்களும் உண்டு. சுமார் 40 லட்சம் அகமதியாக்கள் அந்த நாட்டில் உள்ளனர். இவர்கள்தான் பாகிஸ்தானின் பெரிய மதச்சிறுபான்மைக் குழு. ஆப்கானிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள், பஹாய்கள், கிறிஸ்துவர்கள் போன்ற முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் 0.3 சதவீதம் உள்ளனர்.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறைக்காக அளிக்கப்பட்ட அறிக்கைப்படி 2018ம் ஆண்டு சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மொத்தம் 700 பேர்தான் அங்கு நடக்கும் மோதல்கள் காரணமாக குடும்பங்களாக அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
முஸ்லிம் அல்லாதவர்களின் சட்டபூர்வ நிலை என்ன?
"பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச அரசமைப்புச் சட்டங்கள் குறிப்பிட்டு ஒரு அரசு மதத்தை சொல்கின்றன. இதனால், இந்த நாடுகளில் இந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிறிஸ்துவ மதங்களை சேர்ந்த பலர் மதத்தின் அடிப்படையில் கொடுமைகளை அனுபவிக்கின்றனர்" என்று கூறுகிறது இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா.
பாகிஸ்தானின் அரச மதம் இஸ்லாம்தான். ஆப்கானிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடுதான். வங்கதேசத்தில் சூழ்நிலை சிக்கலானது. 1971ம் ஆண்டு அந்த நாடு ஒரு மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்துடன்தான் தனி நாடாக உருவானது. ஆனால், 1988ல் இஸ்லாம் அதிகாரபூர்வ அரச மதமாக ஆக்கப்பட்டது.
அதன் பிறகு அதை எதிர்த்து நீண்ட சட்டப் போராட்டம் நடந்தது. ஆனால், 2016ல் இஸ்லாம் வங்கதேசத்தின் அரச மதமாகத் தொடரவேண்டும் என்று வங்கதேச உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், இந்த மூன்று நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களுமே முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உரிமைகள் உள்ளது என்றும், தங்கள் மதங்களை அவர்கள் பின்பற்றலாம் என்றும் கூறும் பிரிவுகளைக் கொண்டுள்ளன.
பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் தனி நபர்களாக இந்துக்கள் முக்கியப் பதவிகளுக்கு வந்துள்ளனர். குறிப்பாக இரண்டு நாடுகளிலுமே இந்துக்கள் தலைமை நீதிபதிகளாக ஆகியுள்ளனர்.
சிறுபான்மையினருக்கு பாகுபாடுகள் காட்டப்படுகின்றனவா?
நடைமுறையில் முஸ்லிம் அல்லாதவர்கள் பாகுபாட்டையும், கொடுமையையும் எதிர்கொள்கிறார்கள்.
பாகிஸ்தானின் இறை நிந்தனை சட்டங்கள் தெளிவற்ற முறையில் வடிவமைக்கப்பட்டு போலீசாலும், நீதித்துறையாலும் தான் தோன்றித்தனமாக செயல்படுத்தப்படுகின்றன. இப்படி செயல்படுத்துவது மத சிறுபான்மையினரை கொடுமைப்படுத்தும், துன்புறுத்தும் வகையில் உள்ளது என்று மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.
தாங்கள் சமூக, மத பாகுபாட்டுக்கு உள்ளானதாக, சமீப ஆண்டுகளில் இந்தியாவுக்கு குடி பெயர்ந்த பாகிஸ்தான் இந்துக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஒரு முக்கியப் பிரச்சனையாக அவர்கள் குறிப்பிட்டது சிந்து மாகாணத்தில் இந்து பெண் பிள்ளைகள் குறிவைப்பக்கப்படுவதான்.
முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்தால் மத விரோதிகளாக கருதப்படும் அகமதியாக்களும் பாகுபாட்டை சந்திக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், இவர்களுக்கு இந்தியாவின் இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இடம் தரவில்லை.
ஆனால், 2018 வரையில் பெரும்பாலான மதநிந்தனை வழக்குகள் பிற முஸ்லிம்களுக்கும், அகமதியாக்களுக்கும் எதிராகவே தொடரப்பட்டுள்ளன. கிறிஸ்துவர்களுக்கோ, இந்துக்களுக்கோ எதிராக அல்ல.
வங்கதேசத்தில் பல ஆண்டுகளாக இந்து மக்கள் தொகை விகிதம் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. வசதியாக வாழும் இந்துக்களின் வீடுகளும், வணிகங்களும் குறிவைக்கப்படுகின்றன. பல நேரங்களில் அவர்கள் அவற்றை விட்டு ஓடும்படி செய்வதற்காக இப்படி செய்யப்படுகிறது. இதன் மூலம் நிலம், சொத்து ஆகியவை அபகரிக்கப்படுகின்றன. மத தீவிரவாதிகளும் இந்துக்களை குறிவைக்கின்றனர்.
சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவது குறித்த இந்தியாவின் கருத்தை வங்கதேச அரசு மறுக்கிறது. "இந்த நாட்டில் சிறுபான்மையினர் கொடுமை செய்யப்படுவதாக ஒரு உதாரணம் கூட இல்லை" என்று வெளியுறவு அமைச்சர் அப்துல் மொனெம் பிபிசியிடம் தெரிவித்தார்.
2016 -2019 இடையே இந்தியாவில் அகதிகளின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஐ.நா. புள்ளிவிவரம் காட்டுகிறது. ஆனால், ஐ.நா. அகதிகள் அமைப்பிடம் பதிவு செய்துகொள்ளப்பட்டவர்களின் புள்ளிவிவரப்படி திபெத்தில் இருந்தும், இலங்கையில் இருந்தும் வந்த அகதிகள் எண்ணிக்கையே அதிகம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: