You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாரி - மேகன் பேட்டி: இன ரீதியிலான குற்றச்சாட்டு குறித்து பக்கிங்காம் அரண்மனை விளக்கம்
பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டிஷ் இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹாரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்தின் மீது முன்வைத்த இன ரீதியிலான குற்றச்சாட்டு "கவலை அளிப்பதாகவும்" மற்றும் "அது மிகவும் தீவிரமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும்" பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அவர்களின் நினைவு கூரல்கள் மாறுபடலாம்" ஆனால் இந்த விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நேர்காணலின்போது, "ஆர்ச்சிக்கு ஏன் இளவசர் பட்டம் கிடைக்கவில்லை. அது இன ரீதியிலானதா, நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?" என ஓப்ரா கேட்டபோது, "உண்மையான பதிலை தெரிவிக்கிறேன்" என்று கூறிய மேகன், "அது நான் கர்ப்பமாக இருந்த மாதங்கள். அப்போதே எனது பிள்ளைக்கு பாதுகாப்பு கிடைக்காது, பட்டம் கிடைக்காது என்று நாங்கள் பேசத் தொடங்கியிருந்தோம். பிறப்பிலேயே மகனின் கருப்பு நிறம் பற்றிய கவலைகளும் பேச்சுகளும் எழுந்தன," என மேகன் கூறியபோது, "யார் என்ன பேசினார்கள்" என ஓப்ரா கேள்வி எழுப்பினார்.
ஆனால் அதற்கு நேரடி பதிலை அளிக்க மறுத்த மேகன், "அது அவர்களுக்கு மிகவும் பாதிப்பை தரலாம். அரச குடும்பத்திடம் இருந்து ஹாரிக்கும் அவர் மூலமாக எனக்கும் வந்த பதில்கள் அவை. பகுதி, பகுதியாக நடந்த அந்த உரையாடல்களை கேட்பது மிகவும் கடுமையானதாக இருக்கும்" என்று கூறினார்.
இந்த நிலையில், சஸ்ஸெக்ஸ் கோமகன் ஹாரி மற்றும் அவரது மனைவியும் கோமகளுமான மேகன் மார்க்கல் ஆகியோர் "எப்போதுமே மிகவும் நேசிக்கப்படும் குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாரி மற்றும் மேகனின் நேர்காணலுக்கு பிறகு பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இடையே நடந்த கூட்டங்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
முன்னதாக, தங்களது மகனின் தோல் நிறம் குறித்த கேள்வியை அரசி எலிசபெத் அல்லது இளவரசர், எடின்பெர்க் கோமகன் பிலிப் ஆகியோர் எழுப்பப்படவில்லை என்று நேர்காணலின்போதே ஹாரி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நேர்காணல் முதல் முறையாக அமெரிக்காவில் ஒளிபரப்பான ஒன்றரை நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ள அரண்மனையின் இந்த அறிக்கையில், "கடந்த சில ஆண்டுகள் ஹாரி மற்றும் மேகனுக்கு எவ்வளவு சவாலானதாக இருந்திருக்கும் என்பதை அறிந்து முழு குடும்பமும் வருத்தமடைகிறது. இந்த நேர்காணலின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதுவும் குறிப்பாக இன ரீதியிலான பிரச்னைகள் கவலையளிக்கின்றன. அவர்களின் சில நினைவுகூரல்கள் மாறுபடலாம் என்றாலும், அவை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதுகுறித்து குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஹாரி, மேகன் மற்றும் ஆர்ச்சி எப்போதும் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள்" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தங்களது விளக்கத்தை கவனமுடன் வெளிப்படுத்தவும், அதற்கு முன்னதாக இந்த நேர்காணல் பிரிட்டனில் திங்கள்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டபோது அதை முதலில் பிரிட்டிஷ் பொதுமக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கவும் அரச குடும்பத்தினர் விரும்பியதாக கருதப்படுகிறது.
பிரிட்டன் நேரப்படி திங்கட்கிழமை இரவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான இந்த நேர்காணலை சுமார் 1.1 கோடி பிரிட்டன் மக்கள் பார்த்தனர். அதுமட்டுமின்றி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்த நேர்காணலை பார்த்தார் என்பதை அவரது அலுவலகம் உறுதிசெய்தாலும், மேலதிக கருத்துகளை தெரிவிக்க மறுத்துவிட்டது.
'நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை'
அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய இந்த நேர்காணலின்போது அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துகளை ஓப்ரா கேட்டபோது, "நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை" என்று கூறிய அவர், இதை நான் ஹாரியிடம் கூறுவதற்கு "வெட்கப்படுகிறேன்", ஏனெனில் அவர் "சந்தித்த இழப்புகள்" அவ்வளவு அதிகம் என்று கூறினார்.
அப்போது நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கொண்டிருந்தீர்களா என்று ஓப்ரா கேட்டதற்கு, "ஆம்" என்று மேகன் பதிலளித்தார். "அது எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.
மேலும், தனது இந்த எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனையை பெற "அமைப்பொன்றின்" உதவியை நாடும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேகன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த நேர்காணலில் பேசப்பட்ட பல்வேறு விஷயங்களும் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- தெலங்கானா விவசாயத்தின் புதிய நம்பிக்கை: விளம்பரமில்லா இயற்கை விவசாயி
- இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம்: ஸ்டாலின், எடப்பாடி, கமல் உரிமை கோரும் திட்டத்துக்கு நிதி எங்கிருந்து வரும்?
- புதுச்சேரி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது பாமக - அடுத்தது என்ன?
- திமுகவின் கூட்டணிக் கணக்கில் கலங்கிப் போன கம்யூனிஸ்ட் கட்சிகள் - நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: