பிர்ஜு மகராஜ் : கமலின் விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்திற்கு தேசிய விருது பெற்றவர்

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் காலமானார். அவருக்கு வயது 83. பத்ம விபூஷண் விருது பெற்ற பண்டிட் பிர்ஜு மகாராஜ் இந்திய பாரம்பரிய நடனமான கதக்கின் ஜாம்பவானாக இருந்தார்.

அவர் இயற்கை எய்திய தகவலை அவரது பேரன் ஸ்வரான்ஷ் மிஸ்ரா ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். "இன்று எங்கள் குடும்பத்தின் அன்பான உறுப்பினரான பண்டிட் பிர்ஜு ஜி மகாராஜை இழந்துவிட்டோம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். அவர் ஜனவரி 17 அன்று தனது இறுதி மூச்சை விடுத்தார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.

லக்னெளவின் புகழ்பெற்ற கதக் குடும்பத்தில் பிறந்த பிர்ஜு மகராஜின் தந்தை அச்சன் மகாராஜ் மற்றும் மாமா ஷம்பு மகராஜ் ஆகியோர் நாட்டின் புகழ்பெற்ற நடனக்கலைஞர்களில் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர்கள்.

பிர்ஜூ மகராஜின் இயற்பெயர் பிரிஜ்மோகன் மிஷ்ரா. ஒன்பது வயதில் தந்தை காலமான பிறகு குடும்பப் பொறுப்பு அவர் தோள்களில் விழுந்தது. பிறகு தனது மாமாவிடம் அவர் கதக் நடனத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

சிறிது காலம் கழித்து கபில வாத்ஸ்யாயன் அவரை டெல்லிக்கு அழைத்து வந்தார். அவர் சங்கீத பாரதியில் (டெல்லி), இளம் குழந்தைகளுக்கு கதக் கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் கதக் கேந்திராவின் (டெல்லி) பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அவர் கதக் நடனத்தில் பல பரிசோதனைகள் செய்தார். கூடவே பல திரைப்படங்களில் நடன இயக்கமும் செய்தார். அவருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

பிர்ஜூ மகராஜூக்கு பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, காளிதாஸ் சம்மான் மற்றும் 'விஸ்வரூபம்' படத்திற்காக சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் 'கலாஷ்ரம்' என்ற கதக் பயிற்சி மையத்தையும் அவர் நிறுவினார்.

இளமைக் காலம்

பிர்ஜு மகராஜூக்கு குழந்தைப்பருவத்தில்' துக்ஹரன்' என்று பெயர் சூட்டப்பட்டது. அவர் பிறந்த ஆஸ்பத்திரியில் அன்றைய தினம் பிறந்த மற்ற குழந்தைகள் அனைவருமே பெண்கள். அதனால்தான் அவருக்கு பிரிஜ்மோகன் என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் 'பிர்ஜு' என்றும் அதன் பிறகு 'பிர்ஜு மகராஜ்' என்ற பெயரிலும் அவர் பிரபலமானார்.

கதக் நடனம் பிர்ஜு மகராஜூக்கு பரம்பரையாக கிடைத்த ஒன்று. அவரது முன்னோர்கள் அலகாபாத்தின் ஹண்டியா தெஹ்சில் பகுதியை சேர்ந்தவர்கள். 1800 ஆம் ஆண்டுகளில் 989 கதக் கலைஞர்களின் குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன. இன்றும் அங்கு 'கதக் குளம்' மற்றும் 'சதி சௌராஹ்' உள்ளது.

மகராஜின் தாயாருக்கு அவர் பட்டம் பறக்கவிடுவதும் கில்லி-தண்டா விளையாடுவதும் பிடிக்கவே பிடிக்காது. அம்மா காத்தாடி வாங்க பணம் காசு கொடுக்காத போது, சின்ன பிர்ஜூ கடைக்காரர் பாப்பன் மியானுக்கு நடனம் ஆடிக்காட்டி பட்டத்தை வாங்கிக்கொள்வார்.

இடைக்காலத்தில் கதக் , கிருஷ்ண பகவானின் கதை மற்றும் நடனத்துடன் தொடர்புடையதாக இருந்தது. பின்னர், முகலாயர்களின் ஆதிக்கம் வந்தபோது இந்த நடனம் பேரரசர்களின் பொழுதுபோக்கிற்காக அரசவைகளில் நிகழ்த்தப்பட்டது.

கிராமத்தில் வறட்சி ஏற்பட்டபோது லக்ளென நவாப். பிர்ஜூ மகராஜின் மூதாதையர்களுக்கு அரச ஆதரவை அளித்தார். இதை தொடர்ந்து பிர்ஜு மஹாராஜின் மூதாதையர், நவாப் வாஜித் அலி ஷாவுக்கு கதக் பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

இந்தியாவின் எட்டு சாஸ்த்ரிய நடனங்களில் கதக் மிகவும் பழமையானது. இந்த சமஸ்கிருத வார்த்தைக்கு 'கதை சொல்பவர்' என்று பொருள். பிர்ஜு மகராஜ், தபலா, பகாவஜ், நால், சித்தார் போன்ற பல இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் ஒரு சிறந்த பாடகர், கவிஞர் மற்றும் ஓவியரும் ஆவார்.

டும்ரி, தாத்ரா, பஜன் மற்றும் கஃஜல் பாடல்களிலும் அவர் புலமை பெற்றிருந்தார். கதக் நடனத்தை பலரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் 1998 ஆம் ஆண்டில் பண்டிட் பிர்ஜு மகாராஜ் 'கலாஷ்ரம்' என்ற பெயரில் கதக் மையத்தை நிறுவினார்.

சத்யஜித் ரேயின் 'ஷத்ரஞ்ச் கே கிலாடி' , 'தில் தோ பாகல் ஹை', 'கதர்', 'தேவதாஸ்', 'டேட் இஷ்கியா', 'பாஜிராவ் மஸ்தானி' போன்ற பல படங்களுக்கு பிர்ஜு மகாராஜ் நடன இயக்குனராக இருந்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: