You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு; கொரோனா தடுப்பூசி போடாததால் வெளியேற்றப்படுவார்
ஆண்கள் தரவரிசையில் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியனான அவர் நாளை திட்டமிட்டபடி விளையாட முடியாது.
34 வயது ஜோகோவிச் டென்னிஸில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் அதிகபட்ச ஆண்கள் சிங்கிள் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களாக உள்ளனர்.
இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால் மற்ற இருவரையும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, அதிக தனிநபர் கிராண்ட் ஸ்லாம் வென்ற ஆண் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பார் நோவாக் ஜோகோவிச்.
ஆஸ்திரேலிய ஓபனில் நடப்பு சாம்பியனான அவர் இந்த முறை கிராண்ட் ஸ்லாம் வென்று 21 பட்டங்கள் என்ற சாதனையை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது இப்போது நடக்காது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.
நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா விசா ரத்து ஏன்?
கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் அவருக்கு அளிக்கப்பட்ட விசா குடிவரவுத் துறையால் ரத்து செய்யப்பட்டது.
வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் நுழைய கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருக்கு விசா கொடுத்ததற்கு ஆஸ்திரேலியாவிலும் பரவலான எதிர்ப்பு எழுந்தது.
விசா ரத்து செய்யப்பட்டபின் நோவாக் ஜோகோவிச் தடுப்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் நீதிமன்றத்தை நாடிய நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.
எனினும் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் வெள்ளியன்று ரத்து செய்தார். அவர் அந்நாட்டில் இருப்பது தடுப்பூசிக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதை எதிர்த்து ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் உச்சபட்ச நீதிமன்றங்களின் ஒன்றான, மெல்பர்னில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தை நாடினார். டென்னிஸ் வீரர் தரப்பில் 268 பக்க பிரமாண பத்திரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, ஜோகோவிச் தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தரப்பு வாதிட்டது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக ஜோகோவிச் தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது.
அரசு மற்றும் ஜோகோவிச் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அமர்வில் இருந்த மூன்று நீதிபதிகளும் ஒருமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பிற செய்திகள்:
- நியாண்டர்தால்களுடன் உடலுறவு கொண்ட நவீன மனிதன் - வாயடைக்க வைக்கும் வரலாறு
- விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக பட்டியலிட்ட காரணங்கள் - கவலையில் ரசிகர்கள்
- நியாண்டர்தால்களுடன் உடலுறவு கொண்ட நவீன மனிதன் - வாயடைக்க வைக்கும் வரலாறு
- இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?
- காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு சொல்வது உண்மைதானா?
- யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்? எவ்வளவு வருமானம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்