You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலிவுட்டில் ஆன்லைன் ட்ரோலிங்குக்கு இலக்காகும் பிரபல நட்சத்திரங்கள்
- எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
- பதவி, பிபிசி நியூஸ், கொச்சி
இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய பாலிவுட் நட்சத்திரங்கள், அவர்கள் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படங்களைப் புறக்கணிக்குமாறு கூறும் சமூக ஊடக ட்ரோல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் இதுபோன்ற பிரசாரங்கள் உண்மையில் ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா?
ஆமிர் கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா', அக்ஷய் குமாரின் 'ரக்ஷா பந்தன்' ஆகிய இரண்டு திரைப்படங்களையும், அதில் நடித்த நடிகர்கள் மற்றும் பாலிவுட்டை புறக்கணிக்க வேண்டும் என்று சில சமூக ஊடக பயனர்கள் கோரியுள்ளனர்.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த இரு படங்களும் இந்த வாரம் சமூக ஊடகங்களில் பிரபலமான விவாதப்பொருளாகியுள்ளன.
இத்தகைய சமூக ஊடகப் போக்குகள், இந்தி மொழி திரைப்படத் துறையான பாலிவுட்டுக்கும் அதன் பார்வையாளர்களுக்கும் இடையிலான மாறிவரும் உறவைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. ஆனால் இத்தகைய அழைப்புகள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அளவிடுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கோவிட்-19 பொதுமுடக்கத்தின்போது திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டன. அதனால் ஏற்பட்ட பெரிய இழப்பிலிருந்து பாலிவுட் உலகம் இன்னும் மீளவில்லை. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகும், பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன.
இதை வைத்து, திரைப்பட தொழில்துறை ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள். கூடவே இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து வெளியான ஒரு சில திரைப்படங்கள் இந்தி பேசும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன.
இந்த நிலையில் லால் சிங் சத்தா மீது நிறைய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் கூடியிருக்கிறது. இந்த படத்தில் அதிக பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது டாம் ஹாங்க்ஸ் நடித்த 'ஃபாரெஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ தழுவலாகும்.
ரக்ஷா பந்தன் படத்தில் அக்ஷய் குமார் நான்கு சகோதரிகளிடம் அன்பும் பாசமும் வைத்துள்ள அண்ணனாக நடிக்கிறார்.
தீவிரமாகும் வலதுசாரி பிரசாரம்
ஆனால் நட்சத்திரங்கள் அல்லது அந்தத்திரைப்படங்களுடன் தொடர்புடைய மற்றவர்கள் முன்பு கூறிய கருத்துக்களை மேற்கோள்காட்டி, அவர்கள்"இந்தியாவிற்கு எதிரானவர்கள்" அல்லது இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று ஆன்லைனில் வலதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு மத சகிப்பின்மை குறித்து அதிர்ச்சி அடைவதாக தெரிவித்த கருத்தை சிலர் சுட்டிக்காட்டியதை அடுத்து, அமீர் கான் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவை நேசிப்பதாக பகிரங்கமாக உறுதிப்படுத்தவும் வேண்டியிருந்தது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தக் கருத்துக்கள் அமைந்ததாக பரவலாக கருதப்பட்டது. இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர், தனது வார்த்தைகள் திரித்து அர்த்தம் செய்து கொள்ளப்படுவதாக ஆமிர் கான் அடிக்கடி கூறி வருகிறார்.
தனக்கு இந்தியா பிடிக்கவில்லை என்று மக்கள் உண்மையிலேயே நம்புவது தனக்கு வருத்தம் அளிப்பதாக, இந்த வாரம் அவர் கூறினார். "அப்படி இல்லை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன், எனவே தயவுசெய்து எனது படங்களைப் புறக்கணிக்காதீர்கள்" என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ரக்ஷா பந்தன் ஏன் எதிர்ப்பை சந்தித்துள்ளது என்பதை சரியாகக் குறிப்பிடுவது கடினமாக உள்ளது.
இந்து தேசியவாதிகளை ஈர்க்கும் வகையில் ஏராளமான திரைப்படங்களை அளித்துள்ள அக்ஷய் குமார், இந்தியாவின் வெற்றி நட்சத்திரங்களில் ஒருவர்.
ஆனால் பல சமூக ஊடகப் பதிவுகள், படத்தின் திரைக்கதை எழுத்தாளரை சாடியுள்ளன.
பசு பாதுகாவலர்கள் சந்தேகத்திற்குரியவர்களை அடித்துக் கொல்லும் சம்பவங்களுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. கோவில் சடங்குகளில் பால் வீணாகிறது என்ற குமாரின் ட்வீட் மற்றும் 2012 ஆம் ஆண்டு வெளியான அவருடைய ஒரு படத்தில் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்கள் விமர்சிக்கப்பட்டதையும் மற்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"ஆன்லைனில் 'பிளாக்லிஸ்ட்' அழைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பது உண்மைதான்" என்கிறார் திரைப்பட விமர்சகர் உதய் பாட்டியா. "இவை கிட்டத்தட்ட ஒருபோதும் தன்னார்வமானது அல்ல. பெரும்பாலும் இவை வலதுசாரி நிகழ்ச்சி நிரலை முன்வைக்கின்றன,"என்கிறார் அவர்.
"இது போன்ற பிரசாரங்கள் பொதுவாக திரைப்படம் அல்லது நடிகர் ஏற்படுத்துவதாகக்கூறும் சில கற்பனை காயங்களைச் சுற்றியே இருக்கும்" என்று பாட்டியா சுட்டிக்காட்டுகிறார்.
இந்தி படங்கள் " ரசிகர்களை" திருப்திப்படுத்த எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்லும் நிலையில், இது முற்றிலும் முரண்பாடாக உள்ளது.
1990 களில் காஷ்மீரில் இருந்து இந்துக்கள் வெளியேறியதைக் கொண்டு பார்வையாளர்களை ஒருமுனைப்படுத்திய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற சிறிய பட்ஜெட் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகும்.
"தேசியம், இந்து மரியாதை, வரலாற்று இந்து சின்னங்கள், கடந்த காலங்களில் இந்து துன்பங்கள் மற்றும் சமகால ராணுவ வலிமை ஆகியவை பாலிவுட்டில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பிரபலமான கருப்பொருட்களாக உள்ளன" என்று விமர்சகர் சௌம்யா ராஜேந்திரா சமீபத்தில் எழுதினார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பொழுதுபோக்குத் துறை, பாஜகவின் இந்து வலதுசாரி சித்தாந்தத்தின் ஆதரவாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடுகளையும் கண்டது.
பெரும்பாலான பெரிய பாலிவுட் நட்சத்திரங்கள், பின் விளைவுக்கு பயந்து, தங்கள் அரசியல் கருத்துக்களை தங்களுக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கையாளும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் ட்ரோலிங் பிரச்சாரங்களையும் சில சமயங்களில் போலீஸ் வழக்குகளையும் எதிர்கொள்கின்றனர்.
2020 இல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தால் தூண்டப்பட்ட ஒரு பிரச்சாரமும் இதனுடன் சேர்ந்தது. உறவுகளுக்கு தனிச்சலுகை அளித்து , திறமையான வெளியாட்களை தண்டிக்கும் தொழில் என்ற முத்திரையை பாலிவுட் மீது குத்த முயன்றது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், திரையுலகம் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் இந்த சவால்கள் ஊடுருவி இருப்பதாக ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.
சமூக ஊடக ட்ரோலிங்கின் விளைவு மற்றும் திரைப்படத் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவை பிரபலமான உரையாடல் நிகழ்ச்சியான காஃபி வித் கரணின் சமீபத்திய சீசனில் தொடர்ச்சியான விவாதப் பொருளாக உள்ளது.
"ஒரு தொழில்துறையாக நாங்கள் இழிவுபடுத்தப்பட்டோம். நாங்கள் இரண்டு வருடங்கள் இருட்டறையில் தள்ளப்பட்டோம்" என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தயாரிப்பாளர்-இயக்குநர் கரண் ஜோஹர் ஒரு எப்பிசோடில் கூறினார்.
ஆனால் தொழில்துறையில் உள்ளவர்கள் தங்கள் பொது பிம்பத்தைப் பற்றி மேலும் மேலும் கவனமாக இருக்கும் அதே வேளையில் புறக்கணிப்பு அழைப்புகள் பாக்ஸ் ஆபிஸ் முடிவுகளை அதிகம் பாதிக்காது என்று , நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"தொழில்துறையினரைப் பற்றிய உண்மையான பொதுக் கருத்து அரிதாகவே வெளியாகிறது. அக்ஷய் குமார் இன்று மிகவும் பிரபலமான இந்தி திரைப்பட நட்சத்திரமாக இருக்கிறார். ஆனாலும் அவரது ரக்ஷா பந்தன் படத்தைப் புறக்கணிப்பதற்கான அழைப்புகள் சமீபத்தில் வலம் வருகின்றன," என்று பாட்டியா கூறுகிறார்.
ஆமிர் கான் நடித்து, தயாரித்த 'தங்கல்' மற்றும் கடுமையான வலதுசாரி எதிர்ப்புகளை எதிர்கொண்ட 'பத்மாவத்' போன்ற படங்களின் வெற்றியை வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ், சுட்டிக்காட்டுகிறார்.
"எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாகிவிட்டனர். ஆனால் [சமூக ஊடக ட்ரோலிங்] ஒரு படத்தை பாதிக்கிறதா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள, அதன் வெளியீடு வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். பார்வையாளர்களின் பதில் இதை தெளிவாக்கும்," என்று அவர் கூறுகிறார்.
எதிர்மறையான பிரசாரங்கள் இந்தப் படங்களை பேசும் பொருளாக ஆக்கி, பொதுமக்கள் படத்தைப் பார்ப்பதற்கு முன்பே அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்கிறார் ஆதர்ஷ்.
"ஆனால் இறுதியில் பார்வையாளர்கள் ஒரு படத்தை விரும்பினால், அதைத் தடுக்க முடியாது," என்று அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு பாலிவுட் வெற்றிக்கும் "நல்ல உள்ளடக்கம்" மட்டுமே காரணம் என்று கூற முடியாது என்றாலும், பார்வையாளர் தான் இப்போது ராஜாவாக இருக்கிறார் , ட்ரோல் அல்ல," என்று பாட்டியா சுட்டிக்காட்டினார்.
ஆனால் ஆன்லைன் தளங்களின் நச்சுத்தன்மை மேலும் அதிகரித்துவரும் நிலையில், சமூக ஊடகங்களுடனான பாலிவுட்டின் சிக்கலான உறவு விரைவில் மேம்படும் சாத்தியக்கூறு காணப்படவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்