லலித் மோதி உறவு: சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்?

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அழகு ராணிகளில் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடக உலகில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறார்.

1994இல் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியரான சுஷ்மிதா சென், அதன் பிறகு வெற்றிகரமான பாலிவுட் நடிகையாக தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கினார்.

46 வயதாகும் இவர், சுமார் 36 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஆர்யா' என்ற வெப்சீரிஸ் தொடரில் அவர் நாயகியாக நடித்திருந்தார். அது டிஜிட்டல் உலகிலும் ஓடிடி உலகிலும் சுஷ்மிதா சென்னுக்கு மேலதிக பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது.

புத்திசாலித்தனமும் நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்று பாலிவுட் உலகில் இவர் வருணிக்கப்படுகிறார். தமது திரை வாழ்க்கையில் அவர் பல மதிப்புமிக்க சினிமா விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில், 58 வயதான தொழிலதிபரும், உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முன்னாள் நிறுவனருமான லலித் மோதி, தனக்கும் சுஷ்மிதா சென்னுக்கும் இடையே உறவு இருப்பதாக கடந்த வியாழக்கிழமை இரவு சமூக ஊடக பக்கத்தில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து திரையுலகில் சுஷ்மிதா சென்னை போற்றிப் புகழ்ந்து வந்த ரசிகர்கள் பலரும் அவரது முடிவுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கினர்.

இந்த இருவருக்கும் இடையிலான உறவு குறித்து சமூக ஊடக பக்கங்களில் வெறுப்புத்தனமான நகைச்சுவைகள் பதிவிடப்பட்டன.

லலித் மோதி, பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுபவர். வெற்றிகரமான ஐபிஎல் கருத்தாக்கம் இவரது சிந்தனையில் இருந்தே உருவானது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர், லலித் மோதியை நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இடைநீக்கம் செய்தது. அதன் பின்னர் தலைப்புச் செய்திகளில் அவர் அதிகமாகவே இடம் பிடித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை எப்போதும் மறுத்து வரும் லலித் மோதி, கடந்த பத்து ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், மாலத்தீவுகள் மற்றும் இத்தாலிய தீவான சர்டினியாவில் அவர் சமீபத்தில் தமது விடுமுறையை கழித்த அவர் அங்கு தன்னுடன் ஜோடியாக இருந்த சுஷ்மிதா சென்னுடனான நெருக்கமாக இருக்கும் காதல் படங்களை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தார்.

சுஷ்மிதாவுடனான உறவை பகிரங்கமாக்கிய மோதி

முதலில் தன்னுள் "சிறந்த பாதி" சுஷ்மிதா சென்று வர்ணித்தார் லலித் மோதி. பின்னர் இந்த ஜோடியின் திருமணம் பற்றிய வதந்திகள் அதிகமாகவே "எனது சிறந்த பார்ட்னர்" என்று முந்தைய பதிவுக்கு திருத்தம் கொடுத்தார்.

முறைப்படி கரம் பிடித்த இவரது மனைவி 2018ஆம் ஆண்டில் புற்றுநோயால் இறந்தார். இந்த நிலையில், சுஷ்மிதா சென் உடனான தமது உறவு "ஒரு புதிய ஆரம்பம், இறுதியாக ஒரு புதிய வாழ்க்கை" என்று குறிப்பிட்டு இடுகையை பதிவிட்டார்.

ஒரே இரவில், இந்த இடுகைகள், இந்த ஜோடியின் உறவை உலக அளவில் வைரலாக்கியது. பல்வேறு பிரபல இணையதளங்கள், செய்தி முகமைகள் இவரது சமூக ஊடக இடுகைகளை மாறி, மாறி பல்வேறு கோணங்களில் செய்திகளாக்கின. அதன் பிறகு லலித் மோதிக்கும் சுஷ்மிதாவுக்கும் பல முனைகளில் இருந்தும் வாழ்த்துகள் குவியத் தொடங்கின.

அவற்றுக்கு இணையாக இந்த ஜோடியை பலர் 'ட்ரோல்' செய்து கிண்டலடிக்கவும் தொடங்கினர். இருவரது வயது வித்தியாசத்தை சுட்டிக்காட்டியும் லலித் மோதியின் உருவத்தையும் சிலர் கேலி செய்து விமர்சித்தார்கள், அவரை "நாட்டை விட்டு தப்பியோடியவர்" என்று ஒரு சிலர் டேக் செய்து அழைத்தனர்.

ஆனால் மிகவும் மோசமான விமர்சனமாக சுஷ்மிதா சென்னை சிலர், "பேராசை பிடித்தவர்" மற்றும் "தங்க வெட்டியையே சுரண்டி எடுப்பவர்" என்று அழைத்தனர். பணத்திற்காகவே அவர் லலித் மோதியை டேட்டிங் செய்கிறார் என்று சிலர் அழைத்தனர்.

அவரது விமர்சகர்களில் முக்கியமானவராக வங்கதேச எழுத்தாளரும் செயல்பாட்டாளரான தஸ்லிமா நஸ்ரின் விளங்கினார்.

"சுஷ்மிதா சென் எதற்காக 'பொதுவெளியில் ஈர்க்கப்படாத ஒருவருடன் நேரத்தை செலவிடுகிறார்? அவர் பணக்காரர் என்பதாலா? அப்படியென்றால் பணத்துகாக தன்னை விற்று விட்டாரா?" என்று கடுமையான முறையில் தஸ்லிமா விமர்சித்திருந்தார்.

இத்தகைய விமர்சனம், மிகவும் பிரச்னைக்குரியதுதான் என்கிறார் 'ஆர்டிகிள் 14' என்ற செய்தி இணையதளத்தின் பாலின விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் நமிதா பண்டாரே கூறியுள்ளார்.

"பெரியவர்கள் இருவருக்கு இடையிலான உறவில் என்ன நடக்கிறது என்பது மற்றவர்களின் வேலை இல்லை. எனவே ட்ரோலிங் மற்றும் தனி நபர்களை மதிப்பிடும்போது எப்போதும் விஷயம் பிரச்னை ஆகும்தான். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஒரு மோசமான நிலையே. ஏனென்றால் பெண்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசும் இந்த மாதிரி விஷயத்தில் விரல் நீட்டி அந்த தனி நபரை விமர்சித்து விட்டால் அதில் இருந்து சம்பந்தப்பட்டவர் மீள்வது கடினம்," என்கிறார் நமிதா பண்டாரே.

சுஷ்மிதா சென் ஒரு பிரபலமாக இருப்பதால், அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் கண்காணிக்கும் வகையில், இந்த உறவு பெறும் கவனம் பெறுவது முற்றிலும் எதிர்பாராதது அல்ல.

தனது "வழக்கத்திற்கு மாறான" வாழ்க்கைத் தேர்வுகளுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்தவர் சுஷ்மிதா.

24 வயதில், மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வென்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு மகளை தத்து எடுத்தார். அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது மகளையும் தத்தெடுத்தார். தமது இரு மகள்களுடன் இருக்கும் படங்களை வழக்கமாகவே சுஷ்மிதா சென் பகிர்ந்து வருகிறார்.

அந்த மகள்களுடனான உறவை அவர் ஒருபோதும் மறைக்கவில்லை. பல ஆண்டுகளாக, அவர் தமது சக நடிகர்களை சில சமயங்களில் சில காலத்துக்கு டேட்டிங் செய்துள்ளார். வெகு சமீபத்தில், மாடல் நடிகரான ரோஹ்மான் ஷால் உடன் டேட்டிங் செய்து விட்டு கடந்த ஆண்டு பிரிந்தார்.

சுஷ்மிதா டேட்டிங் செய்தவது பற்றிய தகவல்களை இதுநாள் வரை பத்திரிகைகள் 'கிசுகிசு' மற்றும் சில துணுக்கு செய்திகளாகவே வெளியிட்டு வந்தனஸ்ரீ ஆனால், லலித் மோதியுடனாந இவரது தொடர்பு இந்தியாவில் இந்த அளவுக்கு பெரிதாகும் என்பதை லலித் மோதியே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் என்கிறார் நமிதா பண்டாரே.

" 'வியாழக்கிழமை இரவு ட்வீட்டுகள் மூலம் சுஷ்மிதாவுடனான உறவை கசிய விட்டார் லலித். லண்டனில் ஆடம்பமில்லாத வாழ்க்கையையே நடத்தி வருகிறார். ஆனால், இந்தியாவில் எல்லோருடைய கவனமும் இப்போது சுஷ்மிதா சென் பக்கமே திரும்பியிருக்கிறது. எல்லோரும் அவரைப் பற்றியே பேசுகிறார்கள்," என்கிறார் நமிதா.

இதேவேளை, சமூக ஊடகங்களில் சுஷ்மிதா சென்னுக்கு பலரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில், பணம் குறைவாக உள்ள ஆண்களுடன் டேட்டிங் செய்தபோது அந்த நபர்களை யாரும் 'தங்க வெட்டிகளாக' அழைத்ததில்லை என்றும் நமிதா நினைவுகூர்கிறார்.

இந்த நிலையில் லலித் மோதியுடனான உறவைப் பற்றிய அதிகப்படியான பொதுவெளி மதிப்பீடும் விமர்சனமும் தொடர்வதால் சுஷ்மிதா சென் ஞாயிற்றுக்கிழமை இரவு தமது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் எதிர்வினையாற்றினார்.

"நம்மைச் சுற்றியுள்ள உலகம் எந்த அளவுக்கு பரிதாபமாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் மாறுகிறது என்பதை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

"எனக்கு இதுவரை இல்லாத நண்பர்கள் மற்றும் நான் சந்தித்திராதவர்கள்.... அனைவரும் தங்கள் சிறந்த கருத்துக்களையும், எனது வாழ்க்கை மற்றும் குணநலன்கள் தொடர்பாக ஆழமான ஞானத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்... 'தங்கம் வெட்டி'யிடம் பணம் சம்பாதிக்கிறார்!!! 😄👍 என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் இந்த மேதாவிகள்!!! " என்றும் சுஷ்மிதா கூறியுள்ளார்.

லலித் மோதியை பணத்துக்காக நான் டேட்டிங் செய்வதாக கூறுவர்களுக்கு இதை சொல்லிக்கொள்கிறேன். நான் தங்கத்தைக் கடந்து மேலும் ஆழமாக தோண்டுபவள். காரணம், நான் தங்கத்தை விட வைரங்களையே விரும்புவேன். இப்போதும் நான் அதையே வாங்குகிறேன், என்றும் சுஷ்மிதா குறிப்பிட்டுள்ளார்.

சுஷ்மிதாவின் இந்த பதிவு, அவருக்கு இந்தியாவில் பெரும் கைதட்டலைப் பெற்றுக் கொடுத்துள்ளது."சுஷ்மிதா பற்றிய வாட்ஸ்அப் நகைச்சுவைகள் மற்றும் கருத்துக்கள் இழிவானவை. பெண்களை கேலி செய்வது பரவாயில்லை என்ற பாரம்பரிய கருத்தை பிரதிபலிப்பது போல அவை உள்ளன" என்று நமிதா பண்டாரே கூறுகிறார்."ஆனால் இந்த சூழலில் மிகவும் முதிர்ச்சியுடனும் மேன்மையுடனும் பதிலளித்திருக்கிறார் சுஷ்மிதா. தன்னை நேசித்தவர்களுக்கும், நேசிக்காதவர்களுக்கும் அன்பையே பதிலாக அளித்துள்ளார் அவர்," என்று குறிப்பிடுகிறார் நமிதா பண்டாரே.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :