விருமன் - திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: கார்த்தி, அதிதி சங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, மைனா நந்தினி; இசை: யுவன் சங்கர் ராஜா; இயக்கம்: முத்தையா.

'கொம்பன்' படத்துக்குப் பிறகு கார்த்தியும் இயக்குநர் முத்தையாவும் இணைந்திருக்கும் 'விருமன்' படம் இன்று ரிலீஸாகியிருக்கும் நிலையில், இந்தப் படத்துக்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

உறவு, பிரிவு, பழிவாங்கும் எண்ணம் என வழக்கமான முத்தைய்யா ஃபார்முலாவில் கதை அமைந்திருக்கிறது என்கிறது ஃபில்மிபீட் இணையதளம். இந்தப் படத்தின் கதையை விவரிக்கும்போது, "கணவர் முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) வேலைக்காரியோடு உறவில் இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் மனைவி முத்துலட்சுமி (சரண்யா பொன்வண்ணன்).

அம்மா மரணத்திற்கு அப்பாதான் காரணம் என அறிந்த நிலையில், சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி குஸ்தி வாத்தியாரான மாமா ராஜ்கிரண் உடன் சேர்ந்து கொள்ளும் விருமன் (கார்த்தி) வளர்ந்து பெரியவனான நிலையிலும் அப்பாவை பழிவாங்க போராடுகிறார். விருமன் வீட்டை விட்டு வெளியேறினாலும் மற்ற மூன்று அண்ணன்கள் அப்பாவோடு இருக்கின்றனர். அந்த மூன்று பேருக்கும் இருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக சரி செய்து அவர்களை தன் பக்கம் இழுத்து அப்பாவை பழிவாங்க நினைக்கிறார் விருமன். முடிவில் தந்தையும் மகன்களும் சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை" என்கிறது ஃபில்மி பீட்.

கிராமத்துப் பின்னணியில் கொஞ்சம் சென்டிமென்ட், குடும்பம்னா,... என நெஞ்சை உருக்கும் வசனங்கள், குறிப்பிட்ட சாதிப் பெருமை, புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகள், காதல் என முத்தையா படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அப்படியே இருக்கிறது விருமன் என இந்தப் படத்தை விமர்சித்துள்ளது தினமணி.

இத்தனைக்கும் நடுவே பல சாதகமான அம்சங்களும் இருக்கிறது என்று கூறுகிறது தினமணி நாளிதழின் விமர்சனம். "விருமன் படத்தில் தனித்துவமாகத் தெரிவது கார்த்தி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் ஆகியோரின் நடிப்பு, செல்வக்குமாரின் ஒளிப்பதிவு, யுவனின் இசை ஆகியவைதான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு முழு கமர்ஷியல் படத்தில் கார்த்தி. இதற்காகத்தானே காத்திருந்தேன் என்பதுபோல இறங்கி அடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜுக்கும் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லன் வேடம். ராஜ்கிரண், சரண்யா, வடிவுக்கரசி ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சூரி படம் முழுக்க கார்த்தியுடன் வருகிறார். டப்பிங்கில் சில வசனங்களை அவர் பேசுவதற்காகவே சேர்த்துள்ளார்கள். அது ஒரு சில இடங்களில் கைகொடுத்துள்ளது.

கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் அதிதி சங்கர். நடிப்பதற்கு பெரிதான வாய்ப்பு இல்லை. முதல் படம் என்பதால் பெரிதாக எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை" என்கிறது தினமணி.

மிகச் சாதாரணமான திரைக்கதையால், சாதாரண திரைப்படமாக கடந்துபோகிறது விருமன் என விமர்சித்திருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.

"ஒரு உணர்ச்சிகரமான திரைப்படத்திற்கு வேண்டிய அம்சங்கள் விருமனின் கதையில் இருக்கின்றன. ஆனால், முத்தையாவின் சாதாரணமான திரைக்கதையின் காரணமாக, ஒரு பார்க்கத் தகுந்த திரைப்படம் என்பதைத் தாண்டி படம் மேலெழவில்லை. பழகிப்போன ஃபார்முலாவின்படி திரைக்கதை எழுதப்பட்டிருப்பதோடு, நீண்ட நேரத்திற்குப் பிறகு வரும் காட்சிகளையும் எளிதாக யூகிக்க முடிகிறது.

ஒரு மோதல் ஏற்படும்போது, படம் மெல்ல உச்சத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். ஆனால், அடுத்த காட்சியிலேயே அந்த மோதலை முடித்துவைத்து விடுகிறார் முத்தைய்யா. உதாரணமாக படத்தின் தொடக்க காட்சியில் கதாநாயகியான தேனு, முத்துப்பாட்டியிடம் மிக பிரியமாக இருக்கிறாள். இந்தப் பிரியம் விருமனுக்கும் தேனுவுக்கும் இடையிலான உறவில் பிரச்னையை ஏற்படுத்தும் என நினைக்கிறோம்.

ஆனால், அடுத்த காட்சியிலேயே ஏதோ நடந்து, தேனு மாறிவிடுகிறாள். விருமனுக்கும் ஒரு எம்எல்ஏவுக்கும் இடையிலான மோதல்கூட இப்படித்தான் கையாளப்பட்டிருக்கிறது.

சில பகுதிகள் படத்தில் நன்றாக இருக்கின்றனவென்றால் அதற்குக் காரணம், நடிகர்கள்தான். ஒற்றைப் பரிமாணத்துடன் உருவாக்கப்பட்ட அந்தப் பாத்திரங்களுக்கு இவர்கள் உயிர் கொடுக்கிறார்கள். சூரியின் காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: