You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி சர்ச்சை - பார்த்திபன் விளக்கம்: “மோடிஜீக்கு ஜே என்றால் தேசிய விருதா?”
- எழுதியவர், நபில் அஹமது
- பதவி, பிபிசி தமிழுக்காக
பிரதமர் மோதிக்கு ஆதரவாகப் பேசினால் தேசிய விருது கிடைக்குமா? என்ற பொருள்படும் வகையில் நடிகரும் இயக்குநரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சைக்குள்ளானது. இது பற்றி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் அவர் விளக்கமளித்துள்ளார். அந்தப் பேட்டியின் உரை வடிவம்.
கேள்வி: 75ஆவது சுதந்திர தினத்திற்காக நீங்கள் அனுப்பிய ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலிருந்து பலரிடமும் வாழ்த்து காணொளி கேட்டு வருகின்றனர் அந்த வரிசையில் என்னிடம் கேட்டார்கள் மறுக்காமல் நான் அதனை செய்துக் கொடுத்தேன். இந்த நிகழ்வின் பின்புலம் இவ்வளது தான்.
ஆனால், சமீபத்தில் வெளியான என்னுடைய 'இரவின் நிழல்' திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கவே இவ்வாறு நான் பேசுகின்றேன் என்றும், என்னை சங்கி என்றும் இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று மிகவும் கீழ்த்தரமான சொற்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை பார்க்கும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு கொண்டு செல்கிறது. பிபிசி தமிழ் வாயிலாக மக்களிடம் நான் கூற விரும்புவது நான் எந்த ஒரு கட்சியையும் சாராதவன் என் சிந்தனை, உழைப்பு, வருமானம் எல்லாமே சினிமாவை சுற்றியே இருக்கும்.
அவர்கள் சொல்வது போல் நான் ஒரு கட்சி சார்பாக பேசி ஆதாயம் அடைய வேண்டும் என நினைத்திருந்தால் இப்போது அல்ல எப்போதோ அதனை செய்திருப்பேன். அதற்கான வாய்ப்புகளும் எனக்கு அமைந்தன. அதன் வழி சென்று இருந்தால் இன்று நான் கஷ்டப் பட வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதர ரீதியில் பெரிய இடத்திற்கு சென்று இருப்பேன். எனது நோக்கம் அதுவல்ல, அதற்காக நான் திரைத்துறைக்கு வரவில்லை.
ஆகையால், ஒரு கருத்திற்கு எதிர் கருத்து யார் வேண்டுமானாலும் கூறலாம், அது அவர்களுக்கு ஜனநாயகம் அளித்துள்ள உரிமை என் கருத்து உட்பட, ஆனால் எதிர் கருத்து கூறும் போது வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அக்கருத்து பிறர் மனதை காயப்படுத்திவிடவொ அல்லது பிறர் உரிமையை கொச்சைப்படுத்தவோ கூடாது என்ற என் கருத்தை உங்கள் ஊடகம் வழியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி: பிரதமர் மோடிக்கு ஜே போட்டால் எல்லோருக்கும் விருது கிடைக்குமா என நீங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து யாரையேனும் மனதில் வைத்து சொன்னதா?
பதில்: முதலில் என் நண்பர்கள், என் குடும்பத்தினர் என்னிடம் கூறியது, சமூக வலைத்தளத்தில் கூறும் முதிர்ச்சியற்ற கருத்துகளுக்கு பதில் கூறாதீர்கள் என்று. ஆனால், அவர்களும் மனிதர்கள் தானே உண்மையில் நடந்தது என்ன ? என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்க தான் அதிக வாய்ப்புள்ளது.
அதனால் தான் அந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினேன். அதில் நான் கூற விரும்பியது பிரதமருக்கு ஜே போட்டால் தேசிய விருது கிடைத்துவிடுமென்றால் எத்தனையோ பேர் கோஷம் போடுகிறார்களே அவர்களுக்கு இந்நேரம் கிடைத்திருக்குமே என்பது தான் பொருள் அதனை யாரையும் மனதில் வைத்து கூறவில்லை.
கேள்வி: இரவின் நிழல் திரைப்படத்திற்கு நீங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பொதுமக்களிடமும் பொருளாதர ரீதியிலும் கிடைத்ததா?
பதில்: மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி, நான் திரைத்துறைக்கு உதவி இயக்குநராக வந்த காலத்திலிருந்து பார்த்தால் கிட்டதட்ட 40 வருடங்களை நெருங்குகிறது. இன்றும் என் படங்களுக்கு பெரிய நடிகர்களின் படம் வெளியானால் என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ, இன்றைய நல்ல இயக்குநர்கள் வெற்றி மாறனை போன்று பலரின் படங்கள் வெளியானல் என்ன எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்குமோ அது என்னுடைய படங்களுக்கும் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அடுத்து இன்னும் எப்படி திரைப்படங்களை இயக்கலாம் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.
பொருளாதார ரீதியில் 'இரவின் நிழல்' திரைப்படத்திற்கு பார்த்தால் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல் நாள் வசூல் மிக நன்றாக இருந்தது, இப்படத்தை விநியோகம் செய்த தயாரிப்பாளர் கலைப்புலி.தானு க்கூட மிகப்பெரிய அளவில் பாராட்டினார். ஆனால் இப்படத்திற்கு தேவையான பட்ஜெட்டைய தாண்டி நிறைய செலவுகள் ஆகிவிட்டது அதற்கு பல காரணங்கள் உண்டு அந்த குறிப்பிட்ட பட்ஜெட்டை இப்படம் பெற்று தருமா ? என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்