You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மல்லிகா ஷெராவத் பேட்டி: "சமரசம் செய்யாததால் பட வாய்ப்புகள் குறைந்தன"
ஒரு காலத்தில் பாலிவுட்டின் துணிச்சல் மிக்க நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் மல்லிகா ஷெராவத், நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், இப்போது ரஜத் கபூரின் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
அவருடன் பிபிசி இந்தி நடத்திய ஒரு நேர்காணலில் , இதுவரையிலான தனது திரைத்துறை தொழில் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசினார்.
"சமரசம்" செய்யத் தயாராக இல்லாததால் பல படங்களை இழந்தேன் என்கிறார் அவர்.
தனது குடும்பத்தைப் பற்றிப்பேசிய மல்லிகா, தான் திரைப்படங்களுக்கு வருவதை தனது குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும் தனது பாதையை தானே உருவாக்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே வரக்கூடாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் நான் என்று மல்லிகா ஷெராவத் கூறினார். மேற்கத்திய ஆடைகளை அணிவது அல்லது மாலையில் நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே செல்வதுதற்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை என்கிறார் அவர்.
"நான் ஹரியாணாவில் ஒரு பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவள். என் பெற்றோர் பழமைவாதிகள். நான் மேற்கத்திய ஆடைகளை அணிவது அவர்களுக்குப் பிடிக்காது. என் தோழிகளுடன் இரவு நேரத்தை கழிக்க அவர்கள் எனக்கு அனுமதி அளித்ததில்லை. தோழிகளுடன் இரவு உணவு சாப்பிடக்கூட வெளியே சென்றதில்லை. இருட்டுவதற்குள் வீடு திரும்ப வேண்டும் என்று என்னிடமும், என் சகோதரனிடமும் எப்போதும் சொல்லப்பட்டது," என்றார் அவர்.
'என் கனவுகள் இப்படி' என்று என் தந்தையால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
குடும்ப எதிர்ப்பை மீறி திரைக்கு வந்தேன்
மல்லிகா சிறு வயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
"ஒரு பெண்ணுக்கு இப்படியும் ஒரு கனவு இருக்கும் என்று என் அப்பா நினைத்துக்கூட பார்க்கவில்லை. பெண்கள் வீட்டு வேலை செய்பவர்களாகவும் நல்ல மனைவிகளாகவும் இருக்க வேண்டும் என்றே அவர் நினைத்தார்."
தனது குடும்ப உறுப்பினர்கள் தன்னை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும் அதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும் மல்லிகா கூறுகிறார்.
தனது குழந்தைப் பருவத்தின் கதையை விவரிக்கும் மல்லிகா, குழந்தை பருவத்திலிருந்தே தான் பாகுபாடுகளை சந்தித்ததாகக் கூறுகிறார்.
"நான் நிறைய பாகுபாடுகளை பார்த்திருக்கிறேன். ஹரியாணாவில், ஆண்களுக்கு எல்லா வகையான உரிமைகளும் உள்ளன. அவர்கள் எதையும் அணியலாம், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் கவலைப்படுவதில்லை. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம் ஆனால் என் அனுபவத்தின் அடிப்படையில் நான் பேசுகிறேன்,"என்று மல்லிகா குறிப்பிட்டார்.
"என் பாட்டி என் முகத்திற்கு நேரேயே, 'நீ ஒரு பெண், உனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அவன் ஒரு பையன், அவன்தான் குடும்பத்தின் பெயரை விளங்க வைப்பான்' என்று சொல்வார்கள்,"என்று மல்லிகா மேலும் கூறினார்.
"அவர்களுடைய எண்ணம் இது என்று நான் நினைத்தேன். ஆனால், இப்படிப்பேசுவது தவறு என்று என் அம்மா பாட்டியிடம் ஒருபோதும் சொன்னதேயில்லை."
சினிமாவில் நுழைய அதிகம் கஷ்டப்படவில்லை
குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறியபோது, பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற கனவு மட்டுமே தன் இதயத்தில் இருந்தது என்று மல்லிகா கூறுகிறார்.
முதல் வாய்ப்பைல் பெறுவதில் அவருக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. "என் முதல் விளம்பரம் பச்சன் அவர்களுடன் இருந்தது. ஷாருக்கானுடன் இரண்டாவது விளம்பரம். இரண்டு விளம்பரங்களும் மிகவும் பிரபலமாகி எனக்கு பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. மஹேஷ் பட்டின் 'மர்டர்' திரைப்படம் எனக்கு கிடைத்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
2004 ஆம் ஆண்டு "மர்டர்' வெளியானது. இந்தப்படத்தில் மல்லிகா ஷெராவத்துடன் இம்ரான் ஹாஷ்மி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
சமரசம் இல்லை
'குனிந்து போக' மறுத்ததால், பல சந்தர்ப்பங்கள் கை நழுவின என்று மல்லிகா ஷெராவத் கூறினார்.
"நான் நிறைய நஷ்டப்பட்டேன். ஹீரோ தனது காதலியை படத்தில் நடிக்க வைக்க முயல்வார். ஹீரோவுடன் சமரசம் செய்து கொள்ளாததால் பல வேடங்கள் மிஸ் ஆயின. என்னிடம் 65 ஸ்கிரிப்ட்கள் இருந்தன. ஹீரோவின் ஆட்சேபம் காரணமாக எனக்கு இவற்றில் இருந்து ஒரு பாத்திரம்கூடக் கிடைக்கவில்லை."
'குரு' படத்தில் ரோல் கட் குறித்துப்பேசிய மல்லிகா," படத்தில் என் கதாபாத்திரம் வலுவான துணை கதாபாத்திரமாக இருந்தது, ஆனால் அது எடிட் செய்யப்பட்டு ஒரே ஒரு பாடல் மட்டுமே படத்தில் வைக்கப்பட்டது," என்றார். 2007-ம் ஆண்டு வெளியான அபிஷேக் பச்சனின் 'குரு' படத்தின் 'மையா-மையா' பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார்.
'பாலிவுட்டில் தொடர்வது சாத்தியமில்லை'
பாலிவுட்டில் தான் செய்த படங்கள் பற்றி மல்லிகா ஷெராவத் திருப்தியாக இருக்கிறார். பாலிவுட்டில் தான் பணியாற்றிய விதம் தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் மல்லிகா.
ஆனால் தான் பாலிவுட்டுக்கு வந்தநேரத்தில் யாராவது ஒருவர் 'பிரபலமான குடும்பத்தில்' இருந்து வரவில்லை என்றால் அல்லது காட்பாதர் இல்லை என்றால், அவர் துறையில் தொடர்ந்து இருப்பது மிகவும் கடினமாக இருந்தது என்று அவர் கூறுகிறார். OTT இயங்குதளங்களை ஒரு கேம் சேஞ்சர் என்று மல்லிகா விவரிக்கிறார்.
"சமூக ஊடகங்களுக்கும் OTT க்கும் முன் நீங்கள் பிரபல குடும்பத்தை சேர்ந்தவராக இல்லாவிட்டால் அல்லது உங்களுக்கு எந்த திரையுலக காதலன் அல்லது காட்பாதர் இல்லை என்றால், பாலிவுட்டில் வாழ்வது கடினம் மட்டுமல்ல, அது சாத்தியமே இல்லை. ஹீரோக்களுடன் நான் சமரசம் செய்து கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நான் நன்றாகவே பணியாற்றியிருக்கிறேன் என்று எனக்குத்தோன்றுகிறது."
'ஹாலிவுட்டுக்கு நடிக்கச்செல்லவில்லை'
மல்லிகா ஷெராவத்தின் கவனம் சில காலம் ஹாலிவுட் பக்கம் இருந்தது. ஆனால், ஹாலிவுட்டின் கலாசாரத்தை அறியவே அங்கு சென்றதாகவும், பணியாற்றுவதற்கு அல்ல என்றும் மல்லிகா குறிப்பிட்டார்.
"நான் ஹாலிவுட்டில் நடிக்கச் செல்லவில்லை. புதிய கலாசாரம் மற்றும் புதிய வாழ்க்கையைப் பார்க்க ஹாலிவுட் சென்றேன். ஆனால் அங்குள்ளவர்கள் என்னுடன் வேலை செய்ய விரும்பினார்கள். அது எனக்கு நல்லதாகவே அமைந்தது. புருனோ மார்ஷ் தனது வீடியோவில் என்னை நடிக்க வைத்தார். நான் ஜாக்கி சானுடன் மற்றொரு படம் செய்தேன். நான் அங்கு நடிக்கச்செல்லவில்லை. இந்தியாவிலும் நான் வேலை தேடவில்லை. நல்ல படம் கிடைத்தால் பரவாயில்லை. இல்லையென்றால் வேறு ஏதாவது செய்வேன்,"என்று மல்லிகா ஷெராவத் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்