இளையராஜா, மணிரத்னம் பிறந்தநாள்: குவியும் வாழ்த்துகள், டிரெண்டாகும் படங்கள் மற்றும் பாடல்கள்

பட மூலாதாரம், TWITTER
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு உலக அளவில் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பாடல்கள் காலத்தை வென்று எல்லா தலைமுறையினராலும் ரசிக்கப்படும் வேளையில், தங்களுக்குப்பிடித்த இளையராஜாவின் பாடல்களை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை அவரது ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இளையராஜாவின் நெருங்கிய நீண்ட நாள் தோழரான பாரதிராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும், என்றும் வயதில்லை வாழ்த்துகள்டா இளையராஜா - இப்படிக்கு உயிர்த்தோழன் பாரதிராஜா" என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அந்த பதிவின் இணைப்பாக பாரதிராஜாவும் இளையராஜாவும் அந்த காலத்தில் கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட கறுப்பு வெள்ளை படமும் பகிரப்பட்டுள்ளது. இந்த படத்தை பகிர்ந்தும் இளையராஜாவின் ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்பட பல்வேறு படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இருவரும் கடைசியாக 1992ஆம் ஆண்டில் நாடோடி தென்றல் என்ற படம் மூலம் இணைந்தனர்.

பட மூலாதாரம், BHARATHIRAJA
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவும் பாரதிராஜாவும் புதிய படத்தில் சேர்ந்து ஒரு படைப்பை வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆத்தா என்று அந்த படத்துக்கு பெயரிட்டிருந்தாலும், அதில் நடிப்பது யார், எப்போது படப்பதிவு தொடங்கும் போன்ற விவரம் இன்னும் உறுதியாகவில்லை. இந்த படத்துக்கான கதை வசனத்தை இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் எழுதியதாகவும் ஒரு தகவல் உள்ளது. பாரதிராஜாவின் நீண்ட கால உதவி இயக்குநராக இருந்தவர் பாரதி கிருஷ்ணகுமார். பல்வேறு குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.
தமது படத்தில் வரும் காட்சிகள் 1970களில் உள்ள காலச்சூழலை மையப்படுத்தியதாக இருக்கும் என்று ஓராண்டுக்கு முன்பு பாரதி கிருஷ்ணகுமார் கூறியிருந்தார்.
1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்தின் தேனியில் உள்ள பண்ணையபுரத்தில் பிறந்தவர் இளையராஜா. இவரது இயற்பெயர் ஞானதேசிகன். ஆனால், பள்ளியில் சேரும்போது இவரது பெயரை ராஜய்யா என்று இவரது பெற்றோர் மாற்றினர். இருப்பினும் இவரது கிராமத்தினர் இவரை செல்லமாக ராசய்யா என்று அழைப்பார்கள்.இவர் இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி. அப்போது படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ராஜய்யாவின் பெயருக்கு முன்னால் இளைய என்ற அடைமொழியை சேர்த்து இளையராஜா என்று அழைத்தார். காரணம், 1970களில் ஏ.எம். ராஜா என்ற பெயரில் வேறொரு இசையமைப்பாளர் இருந்தார்.

பட மூலாதாரம், Ilayaraja
தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் மீது கொண்ட ஈர்ப்பால் தமது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவில் சேர்ந்த இவர், ஊர், ஊராக நடந்த இசை கச்சேரிகளில் பங்கேற்றார். இவர் முதல் முதலாக தனித்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு இசையமைத்தார்.
சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் தன்ராஜிடம் இசை வகுப்பில் முறைப்படி சேர்ந்த இளையராஜா, மேற்கத்திய இசை, இசை நுட்பங்கள் போன்றவற்றை கற்றார். லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக்கல்லூரியில் இசையமைப்பு பயிற்சியை அஞ்சல் வழி மூலம் கற்றார். டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றார். 1975இல் பஞ்சு அருணாசலத்தின் அன்னக்கிளி படத்தில் தமது திரை இசைப்பணியை தொடங்கிய இவரது பயணம் இப்போதும் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இவருக்கு இசைஞானி என்ற பட்டத்தை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது சூட்டினார். உலக அளவில் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத பெருமையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. 2006இல் ஒன்டேரியோவில் சிம்பொனியில் திருவாசகம் என்ற தமிழ் பெருமைக்குரிய நிகழ்வை நடத்தி உலக இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இளையராஜாவின் மனைவி பெயர் ஜீவா. இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். 2011ஆம் ஆண்டு இளையராஜாவின் மனைவி ஜீவா இறந்து விட்டார். இவரது சகோதரர் கங்கை அமரனும் இசையமைப்பாளர்.
மணிரத்னத்துக்கு பிறந்த நாள்

பட மூலாதாரம், TWITTER
தமிழ் மற்றும் பாலிவுட் உலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்துக்கும் இன்றுதான் பிறந்த நாள். 65 வயதாகும் மணிரத்னம் பகல் நிலவு (1985) நாயகன் (1995), தளபதி (1991), திருடா திருடா (1993) ரோஜா (1992), பாம்பே (1995), இருவர் (1997), அலைபாயுதே (2000), ஆயுத எழுத்து (2004), ராவணன் (2010), ஓ காதல் கண்மணி (2015), செக்கச்சிவந்த வானம் (2018), புத்தம் புது காலை (2020) உள்பட 29 படங்களை இயக்கியிருக்கிறார். இவரது பொன்னியின் செல்வன் படம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 1955ஆம் ஆண்டில் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலைத் தழுவிய மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் இடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், மணிரத்னத்தின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள், மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வம் பெயரை #HBDManiRatnam மற்றும் #PonniyinSelvan என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
1956ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி சென்னை மாகாணத்தின் மதுரையில் பிறந்தார் மணிரத்னம். இவரது தந்தை கோபாலரத்னம் சுப்பிரமணியம், திரைப்பட விநியோகஸ்தர். இவரது மாமா வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. பிரபல திரைப்பட தயாரிப்பாளர். இவரது மூத்த சகோதரர் ஜி. வெங்கடேஸ்வரன், இளைய சகோதரர் ஜி. ஸ்ரீனிவாசனும் திரைப்பட தயாரிப்பாளர்கள்.
பெசன்ட் தியோசஃபிகல் பள்ளியில் படித்த மணிரத்னம், சிவாஜி கணேசன், நாகேஷ் ஆகியோரின் நடிப்பாற்றலால் கவரப்பட்டார். பின்னாளில் இயக்குநர் பாலச்சந்திரனின் தீவிர ரசிகரானார். பள்ளிப்படிப்புக்கு பிறகு சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியலில் பட்டம் முடித்த மணிரத்னம், பாம்பேயில் உள்ள ஜம்னாலால் மேலாண் வகுப்புகள் கல்லூரியில் எம்பிஏ மேல்படிப்பு முடித்தார். 1977ஆம் ஆண்டில் மேல்படிப்பை முடித்துக்கொண்டு தனியார் நிறுவன பணியில் இருந்தார்.

பட மூலாதாரம், SUHASINI
ஆரம்ப காலத்தில் தனது திரைக்கதையை விளக்க பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் ஆகிய மூவரை தேர்வு செய்தார். ஆனால், மணிரத்னத்தின் கதை அவர்களை ஈர்க்கவில்லை. பிறகு தனது நண்பரான பி.சி. ஸ்ரீராமுடன் சேர்ந்து தங்களுடைய படைப்புக்கான தயாரிப்பாளரை தேடத்தொடங்கினார். தொடக்கத்தில் பல்லவி அனு பல்லவி என்ற தனது வசனத்திலான படத்துக்கு தயாரிப்பாளராக அவரது மாமா கிருஷ்ணமூர்த்தி முடிவானார்.
ஆனால், அந்த படத்தை கன்னடத்தில் எடுக்க மட்டுமே அவர் சம்மதித்தார். அந்த படத்தின் கேமிராமேன் ஆக இருந்தவர் பாலுமகேந்திரா. தோட்டா தரணி கலை இயக்கத்திலும், இளையராஜாவின் இசையமைப்பிலும் லெனின் ஒளிப்பதிவிலும் உருவானது பல்லவி அனு பல்லவி. அந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அனில் கபூர், கதாநாயகி லக்ஷ்மி. 1983இல் மாநில அரசு வழங்கும் சிறந்த திரைக்கதைக்கான விருதை பல்லவி அனு பல்லவி பெற்றது.
இதைத்தொடர்ந்து 1985இல் தமிழில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக பகல் நிலவு படத்தை இயக்கினார் மணிரத்னம். அதில் நடிகர் மோகன், நடிகை ரேவதி நடித்திருந்தனர். அதே ஆண்டு இதய கோயில் படத்தை இயக்கினார். பின்னர் 1986இல் அவர் இயக்கி மோகன், ரேவதி நடித்த மெளன ராகம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. கதை சொல்லும் விதமும் அதை காட்சிப்படுத்தும் விதமும் மணிரத்னத்துக்கென தனி அடையாளத்தை திரைத்துறையில் ஏற்படுத்தின. அதன் பிறகு 1987இல் கமல் நடித்த நாயகன் படம், 1988இல் பிரபு-கார்த்திக் நடித்த அக்னி நட்சத்திரம், ரஜினி நடித்த தளபதி ஆகிய படங்கள் அவரது வெற்றி இயக்கத்துக்கு மகுடமாக விளங்கின.
ஆனால், தளபதி படத்துடன் இசையமைப்பாளர் இளையராஜாவுடனான தமது இணைப்பை நிறுத்திக் கொண்ட மணிரத்னம், அதன் பிறகு தமது படங்களுக்கான இசையமைப்பு வாய்ப்பை ஏ.ஆர். ரகுமானிடம் கொடுத்தார். அதுநாள்வரை மணிரத்னத்தின் படங்களுக்கு இசை அமைத்து வந்த வழக்கம் மாறுபட்டது குறித்து அடுத்து நடந்த சில பொது நிகழ்வுகளில் இளையராஜாவிடமும் மணிரத்னத்திடமும் கேட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒருவித இணக்கமற்ற நிலை இளையராஜாவுக்கு ஏற்பட்டாலும், ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கர் விருதை பெற்ற பிறகு அவரை பாராட்டும் விழாவில் பேசிய இளையராஜா, காலத்துக்கு ஏற்ப உருப்பெற்ற இசையமைப்பாளர்களுடன் இயக்குநர்கள் சேருவது இயல்புதானே. அதற்காக தமது இசையும் பாணியும் பலவீனமடைந்து விடவில்லை என்று கூறி புதிய இசையமைப்பாளர்கள் வளருவதை உற்சாகப்படுத்தினார்.
1992இல் ரோஜா படம்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் முதல் திரைப்படம். அவர் இயக்கிய பாம்பே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை மதம், மொழி சார்ந்த படங்களாக அமைந்து திரையுலகின் கவனத்தை ஈர்த்தன. அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு, ஒவ்வொரு முறை கூடிக்கொண்டே இருக்கிறது. பொதுவெளியில் அதிகம் பேசப்படாதவராக அறியப்படும் மணிரத்னம், திரை உலகில் தனக்கென தனி அடையாளத்துடன் இப்போதும் பவனி வருகிறார்.
இவரது மனைவி நடிகை சுஹாசினி. இந்த தம்பதிக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் என்ற பெயரில் இவர்கள் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள்.
பிற செய்திகள்:
- கொரோனா 2ஆம் அலையில் தமிழக கிராமங்கள் அதிக பாதிப்பை சந்திப்பது ஏன்?
- இந்தியாவில் கொரோனா நோயாளிகளை அச்சுறுத்தும் வெள்ளைப் பூஞ்சை
- வன்னியர் 10.5% ஒதுக்கீட்டில் சிக்கலா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சொல்வது என்ன?
- சீன வீரர்களின் உயிரிழப்பை மிகைப்படுத்திய `பிளாக்கர்' சிறையில் அடைப்பு
- நீரிழிவு, இருதய நோய் பாதிப்புள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்வது எப்படி?
- கடுகு உற்பத்தியில் மிகுதி - ஆனாலும் எண்ணெய் விலை உயர்வது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












