இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோவிடம் ரூ.50 லட்சம் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Ilaiyaraaja இளையராஜா

பட மூலாதாரம், Ilaiyaraaja official facebook page

இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப்பக்கங்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் வழக்கு

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகம் ஒன்றை வைத்திருந்தார். இந்த அலுவலகத்தில் இருந்தபடிதான் அவர் திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் பணியை மேற்கொண்டார். இந்த நிலையில் அந்த அலுவலகத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டார்.

ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய்பிரசாத், ரமேஷ் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி - இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்

ஒரு நாளுக்கு ஒரு தடுப்பூசி மையத்தில் 100 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள கரோனா தடுப்பூசி வழங்குதலுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.

coronavirus news

கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் தடுப்பூசி வழங்க ஆயத்தமாகி வருகிறது.

மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 112 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில் பல்வேறு அம்சங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. தடுப்பூசிகளைப் பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளை அமைக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் ஒவ்வொரு மையத்திலும் ஒரு காவலர் உள்பட 5 தடுப்பூசி அதிகாரிகள் இருக்க வேண்டும்.

தடுப்பூசி மையத்தில் 3 அறைகள் இருக்க வேண்டும். ஓர் அறை மக்கள் காத்திருப்புக்காகவும், மற்றொரு அறை தடுப்பூசி வழங்குவதற்காகவும், 3-வது அறை தடுப்பூசி வழங்கப்பட்டவர்களை அரை மணி நேரம் வரை தங்கவைத்து கண்காணிக்கவும் அமைக்க வேண்டும்.

அங்கு அலர்ஜி உள்ளிட்ட சிறு உபாதைகளை சரிசெய்ய மருந்துகள் வைத்திருத்தல் அவசியம். பெரிய பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு மாற்ற ஆயத்தமாக இருத்தல் அவசியம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

தடுப்பூசி மையங்களில் முகக்கவசம், 6 அடி சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். காத்திருப்பு அறை வாயிலில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசிகளை ஐஸ்பேகுகளில் சரியான குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்த விதிமுறைகளில் தெரிவிக்கட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை புறநகர் ரயில்களில் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு நீக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது என்கிறது தினமணி செய்தி.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பெண் பயணிகள் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் நேரக்கட்டுப்பாடின்றி அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம்.

பெண்களுடன் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: