பிரதமருக்கு கடிதம் எழுதியோர் மீது வழக்கு: ''கருத்துரிமையின் நிலை இதுதான் '' - என்.ராம்

மணிரத்னம்

பட மூலாதாரம், Mani Ratnam / Facebook

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் மதவெறுப்புகளை ஏற்படுத்தி கும்பலாக சேர்ந்து வன்முறையில் ஈடுபடும் போக்கு நிறுத்தப்படவேண்டும் என்று கோரி பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீதும் தேசதுரோக வழக்கு பதிவாகியுள்ளாதால், தங்கள் கருத்தை வெளியிட மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகிவருகிறது என 'தி இந்து' நாளிதழ் குழுமத்தின் தலைவரான என். ராம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த மணிரத்தினம், நடிகை ரேவதி, எழுத்தாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியதற்காக அவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவாகியுள்ளது.

பிரதமர் மோதியிடம் நாடாளுமன்றத்தில் மதரீதியான கும்பல் வன்முறையை எதிர்க்கும் அதேநேரத்தில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டும், இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது மோசமான வன்முறை நிகழ்த்தப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த கடிதம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், பிரதமர் மோதியின் பணிகளை குறைத்து மதிப்பிடுகிறது என்றும் நாட்டின் நற்பெயரை கெடுப்பதாக உள்ளது என்றும் கூறி, கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு போடவேண்டும் என்று கோரி பிகார் மாநிலத்தில் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சூரியகாந் திவாரி 49 பேர் மீதும் வழக்கு பதிய உத்தரவிட்டதை அடுத்து, பிரிவினைவாதத்தை தூண்டுவது, பொது அமைதியை குலைப்பது, தேசதுரோகம் மற்றும் மத நம்பிக்கையை காயப்படுத்துவது போன்ற குற்றங்களுக்காக உள்ள பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான ஒன்று என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.ராம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர் ''தங்களது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தற்காக 49 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தின் உண்மை நிலை என்ன என்பதை இந்த செயல் உணர்த்துகிறது. இது மோசமான மற்றும் அபத்தமான நடைமுறை. இதனை உயர்நீதிமன்றங்கள் கண்டிக்க காலம் தாழ்த்தக்கூடாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்பதால், அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை பின்பற்றவேண்டும் என்ற பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. எந்தவித ஆலோசனையும் இல்லாமல் முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளார்கள். இதனை உயர்நீதிமன்றங்கள் எதிர்க்கவேண்டும்,'' என்றார்.

என் ராம்

''அரசமைப்பு சட்டத்தின் 19வது பிரிவின்படி இந்த நாட்டின் குடிமக்களில் ஒருவருக்கு அளித்துள்ள பேச்சு மற்றும் கருத்துரிமையை இந்த வழக்குகள் கேள்விக்குறியாக்குகின்றன,'' என்றார்.

இதுபோன்ற வழக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் மக்கள் மத்தியில் பயம் அதிகரிக்கும் என்கிறார் என்.ராம். ''ஏற்கனவே இந்தியா முழுவதும் பரவலாக ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது. மக்கள் தங்களது கருத்தை பேச எதற்கு அச்சப்படவேண்டும்? இதுபோன்ற வழக்குகளை அனுமதித்தால், நிலைமை மேலும் மோசமாகும். தங்களது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசினால் ஏதாவது பிரச்சனை வரும் என்ற அச்சத்தை இந்த வழக்குகள் ஏற்படுத்துகின்றன. அபர்ணா சென், ராமச்சந்திரகுஹா மற்றும் மணிரத்னம் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு போட்டுள்ளார்கள். நீதித்துறை செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படவில்லை என்று தோன்றுகிறது,''என்கிறார் ராம்.

இந்தியா முழுவதும் அமைதி நிலவவேண்டும், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என கோரி எழுதப்பட்ட கடிதத்திற்காக தேசதுரோக வழக்கு பதிவுசெய்யமுடியுமா என சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமனிடம் கேட்டோம்.

''பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மதரீதியான வன்முறை தடுக்கப்படவேண்டும் என கூறியிருக்கிறார்கள். தாக்குதலுக்கு ஆளான மக்களுக்கு நீதிவேண்டும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்கிறார்கள். இந்திய குடிமகனாக உள்ள எவரும் அரசிடம் கேள்வி கேட்கமுடியும். அரசின் போக்கை விமர்சிக்கமுடியும். 49 பிரபலங்கள் எழுதிய கடிதம் தாக்குதல் தடுக்கப்படவேண்டும் என்றுதான் சொல்கிறது. இதில் மதநம்பிக்கையை காயப்படுத்தும் வகையிலோ, அமைதியை குலைக்கும் வகையில் எதுவும் இல்லை,'' என்கிறார் ஹரிபரந்தாமன்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

வழக்குத் தொடர்ந்த சுதிர் குமார் ஓஜாவின் பின்னணியை ஆராய்ந்தால் ஏன் இவர் 49 பிரபலங்கள் மீது நடவடிக்கை வேண்டும் என வழக்கு தொடர்ந்தார் என தெரிந்துவிடும் என்கிறார். ''வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவேளை, தவறுதலாக கையொப்பம் இட்டிருக்கலாம். சட்டப்படி கடிதம் எழுதியவர்கள் மீது எந்த பிரிவிலும் வழக்கு போடமுடியாது. சுதிர் குமார் ஓஜா என்ன காரணத்திற்காக, யாருடைய பின்னணியில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என ஆராய்ந்தால், இவருக்கு யார் ஆதரவு தருகிறார்கள் என புலப்படும்,'' என்கிறார்.

மேலும் இந்தியா முழுவதும் உள்ள 49 பிரபலங்கள் சமூக நலன் கருதி வெளியிட்ட கடிதம் மதிக்கப்படவேண்டிய ஒன்று என்றும் இந்த வழக்கில் முன்னேற்றம் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். ''இந்த வழக்கை விசாரித்த உடன் நிராகரித்திருக்கவேண்டும். ஒருவேளை நீதிபதி சரியாக பார்க்காமல் கையெழுத்திட்டிருக்கலாம். தேசதுரோக பிரிவை நீக்குவது குறித்து ஆலோசனைகள் நடந்துவரும் இந்த காலத்தில், இந்த வழக்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதில் எந்த பயனும் இருக்கப்போவதில்லை,'' என்றார் அவர்.

49 பிரபலங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு தேவையற்றது என தமிழகத்தில் உள்ள சமூகஆர்வலர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் ஒருவர் தனது கருத்தை சொல்வது எப்படி தேசதுரோகத்திற்கு ஒப்பாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ இந்த வழக்கு பதிவானதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :