உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து இந்தியாவுடன் மோதப் போகிறதா?
இலங்கையிடம் 2007, 2011 என இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. தற்போது அதே அணியை லீக் சுற்றில் வீழ்த்திய கையோடு, நடப்புத் தொடரில் அரையிறுதி வாய்ப்பையும் ஏறத்தாழ நியூசிலாந்து அணி உறுதி செய்துள்ளது.
இலங்கைக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டத்தில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக குசால் பெரேரா 51 ரன்கள் சேர்த்திருந்தார். தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி, 23வது ஓவரிலேயே வெற்றியை வசப்படுத்தியது.
ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்ற நிலையில் 10 ஓவர்கள் வீசி 37 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய டிரெண்ட் போல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
நடப்புத் தொடர் இலங்கைக்கு மிகவும் மோசமான தொடராக அமைந்திருக்கிறது. இரண்டு வெற்றி 7 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் பின்தங்கி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது இலங்கை.
மறுபுறம், நியூசிலாந்தின் இந்த வெற்றி, அரையிறுதிக்குள் நுழையும் முனைப்பில் உள்ள பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் நெருக்கடியை அளித்திருக்கிறது.
பாகிஸ்தானை தலைசுற்ற வைக்கும் இலக்கு

பட மூலாதாரம், Getty Images
புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி இலங்கையுடனான வெற்றியைத் தொடர்ந்து 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று மொத்தம் 10 புள்ளிகளுடன் 4வது இடத்தை வகிக்கிறது. நியூசிலாந்தின் நிகர ரன்ரேட்டும் 0.398இல் இருந்து 0.743 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரேயொரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. சனிக்கிழமை இங்கிலாந்தை எதிர்த்து அந்த அணி விளையாடுகிறது. ஆனால், அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தானுக்கு வெற்றி மட்டுமே போதாது. ஏனெனில், அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.036 மட்டுமே.
ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, இங்கிலாந்தை 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் நிகர ரன்ரேட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி அரையிறுதிக்குள் நுழைய முடியும். ஆனால் இது நடப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ தரவுகளின்படி, இங்கிலாந்தை 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் நிகர ரன்ரேட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி அரையிறுதிக்குள் நுழைய முடியும்.
ஒருவேளை இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் சேர்த்தால், பாகிஸ்தான் இலக்கை வெறும் 3.4 ஓவர்களில் எட்ட வேண்டும்.
பெரும்பாலும் சாத்தியமில்லாத இலக்கு என்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக 'பைபை' என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழிதீர்க்குமா?

பட மூலாதாரம், Getty Images
புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் 4வது இடத்தில் உள்ள அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15ஆம் தேதி முதல் அரையிறுதியில் களமிறங்கும். அதன்படி இந்தியா, தற்போது 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்த்துக் களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தியதை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள்.
தொடர்ந்து 2015, 2019 என இருமுறை இறுதிப்போட்டி வரை சென்று உலகக்கோப்பையை நழுவவிட்டிருக்கிறது நியூசிலாந்து அணி. முன்னதாக நடப்புத் தொடரில் இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நடப்புத் தொடரில் தோல்வியையே சந்தித்திராத இந்திய அணி, 2019 அரையிறுதி தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
பொருத்திருந்து பார்க்கலாம்.
அதிரடி காட்டிய நியூசிலாந்து பவுலர்கள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பேரேரா மற்றும் பதும் நிசங்க ஜோடி களமிறங்கியது. டிம் சௌதி வீசிய இரண்டாவது ஓவரில் பதும் நிசங்க தனது விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
நிசங்கவை தொடர்ந்து இலங்கை பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முக்கியமாக ட்ரென்ட் போல்ட் வீசிய பந்துகளைச் சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறினர்.
நிசங்கவிற்கு அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், போல்டின் பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சமரவிக்ரமாவும் போல்ட் வீசிய பந்தில் டேரில் மிட்சலிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் அவுட்டானார்.

பட மூலாதாரம், Getty Images
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். டிம் சௌதியின் மூன்றாவது ஓவரில் குசல் பேரேரா 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார்.
அவர் தனது அரைசதத்தை வெறும் 22 பந்துகளில் பூர்த்தி செய்தார். முதல் பத்து ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
பேட்டிங்கில் குசல் பெரேரா அதிரடி காட்ட பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் அதிரடி காட்டினார். சமரவிக்ரமவுக்கு அடுத்து வந்த அசலங்காவையும் போல்ட் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.
இலங்கைக்கு நம்பிக்கை அளித்து வந்த குசல் பெரேரா லாக்கி ஃபெர்க்யூசன் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 28 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்தார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஒரு கூட்டணியை கட்டமைக்க முயன்றனர். அவர்கள் இருவரையும் முறையே 16 மற்றும் 19 ரன்களுக்கு மிட்சல் சாண்ட்னர் ஆட்டமிழக்க வைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
உலக சாதனை படைத்த இலங்கை அணி
இலங்கை அணி 38 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த சில ஓவர்களில் இலங்கை அணி ஆல்-அவுட்டாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசியில் 10வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பந்துவீச்சாளர்கள் தீக்ஷனா மற்றும் மதுஷங்கா இணை பொறுப்போடு ஆடி அணியின் ஸ்கோர் உயர பங்காற்றினர்.
பத்தாவது விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து 43 ரன்கள் அடித்தனர். இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் 10வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் ஆகும்.
நியூசிலாந்து சார்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஃபெர்க்யூசன் மற்றும் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா 2 விக்கெட்டுகளும் டிம் சௌதி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த நியூசிலாந்து
நியூசிலாந்து அணி, 172 என்ற எளிய இலக்குடன் களமிறங்கி, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கான்வே மற்றும் ரவீந்திரா இணை இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விளாசியது.
முதல் பத்து ஓவர்களில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் அடித்திருந்தது. இந்த உலகக்கோப்பையில் நல்ல ஃபார்மில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா இந்தப் போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தை விடவில்லை.
அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்த ரவீந்திரா, தீக்ஷனாவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
விக்கெட்டே இழக்காமல் நியூசிலாந்து வெற்றி பெற்றுவிடுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் துஷ்மந்தா சமீரா வீசிய 13வது ஓவரில் 42 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்த கான்வே தனது விக்கெட்டை இழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ரச்சின் சாதனையை முறியடித்த ரச்சின்
அடுத்த வந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 14 ரன்களுக்கு மேத்யூஸ் வீசிய பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மார்க் சேப்மேன் 7 ரன்களில் ரன் அவுட்டானார். மறுபுறம் டேரில் மிட்சல் அதிரடியாக விளையாடினார். 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேத்யூஸின் பந்தில் மிட்சல் அவுட்டானார்.
கடைசியில் 23.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளோடு 4வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு மேலும் அதிகமாகி உள்ளது.
இப்போட்டியில் இலங்கை சார்பாக மேத்யூஸ் 2 விக்கெட்டுகளும் தீக்ஷனா மற்றும் சமீரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், இந்தப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா 2 சாதனைகளைப் படைத்துள்ளார்.
அறிமுக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரவீந்திரா படைத்துள்ளார். அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை 550 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ளார்.
மேலும் 25 வயதிற்குள் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும் 23 வயதான ரவீந்திரா முறியடித்துள்ளார்.
சேம்பியன்ஸ் ட்ராஃபிக்கு தகுதி பெறாத முன்னாள் சேம்பியன்
நடப்பு உலகக்கோப்பை முடியும்போது புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள்தான் சேம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் தனது கடைசி போட்டியான இதில் தோல்வியுற்ற இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலேயே உள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு இந்தியாவோடு இணைந்து சேம்பியன்ஸ் ட்ராஃபி தொடரை இலங்கை கைப்பற்றியது. ஆனால், இந்த முறை இலங்கை அணி 2025ஆம் ஆண்டு நடக்கவுள்ள சேம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













