நெதர்லாந்தை வீழ்த்தியும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு தீராத நெருக்கடி - என்ன தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. அதனை சேஸிங் செய்த நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த நடப்புச்சாம்பியனான இங்கிலாந்து அணிக்கும் கடைசிக்கு முந்தைய இடமான 9வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு ஆரம்பித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பார்ட்னர்ஷிப் இல்லாமல் தடுமாறிய இங்கிலாந்து
தொடக்க பேட்ஸ்மேன்களான ஜானி பேர்ஸ்டோவும் டேவிட் மலானும் தொடக்கத்திலேயே வேகமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 48 என்று இருக்கும்போது நெதர்லாந்து பந்து வீச்சாளர் ஆர்யன் தத் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மாலன் 36 பந்துகளில் அரை சதமடித்தார். பேட்டிங் பவர்ப்ளேவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் சேர்த்தது.
மாலன் - ரூட் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் சீரான வேகத்தில் இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்து வந்த நிலையில் ரிவர்ஸ் ஹிட் அடிக்க முயற்சித்து வான் பீக்கின் பந்தில் ரூட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஒருநாள் போட்டிகளில் தனது ஏழாவது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மலானும் 87 ரன்களில் ஆர்யன் தத்தின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணியில் மாற்றமாக உள்ளே வந்த ஹேரி ப்ரூக் 11 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணிக்கு ஒரு வலுவான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. களத்தில் பென் ஸ்டோக்ஸும் கேப்டன் ஜாஸ் பட்லரும் ஜோடி சேர ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமானது.
ஆனால், இங்கிலாந்து கேப்டன் பட்லர் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியை 33 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் என்ற இக்கட்டான சூழலுக்கு நெதர்லாந்து அணி கொண்டுவந்தது. ஆர்யன் தத்தின் மூன்றாவது விக்கெட்டாக அடுத்து வந்த மொயின் அலியும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பையில் முதல் சதத்தை அடித்த பென் ஸ்டோக்ஸ்
மறுபுறம் நிதானமாக ஆடி வந்த பென் ஸ்டோக்ஸ் 58 பந்துகளில் தனது 24வது ஒருநாள் அரை சதத்தை அடித்தார். 42.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 7 ஓவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து ஸ்டேக்ஸும் வோக்ஸும் அதிரடி காட்ட ஆரம்பித்தனர். ஆர்யன் தத் வீசிய 45வது ஓவரில் 3 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் ஸ்டோக்ஸ் விளாசினார்.
47வது ஓவரில் இங்கிலாந்து அணி 300 ரன்களை எட்டியது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 78 பந்துகளில் தனது சதத்தை அடித்தார் ஸ்டோக்ஸ். அரை சதம் அடித்த வோக்ஸ் டி லீடின் பந்தில் 51 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த டேவிட் வில்லி முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். கடைசி வரை இருந்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்க்ஸை முடித்துக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் போது 108 ரன்களுக்கு அவுட்டானார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பம் முதலே தடுமாறிய நெதர்லாந்து அணி
340 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரம்பம் முதலே நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க சிரமப்பட்டனர். முதல் 10 ஓவர்களில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது
3வது விக்கெட்டிற்கு நெதர்லாந்தின் வெஸ்லி பேரெஸ்ஸியும் எங்கெல்பிரக்டும் 54 ரன்கள் சேர்த்தனர். 99 ரன்களுக்கு நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் நிதமனாரு நெதர்லாந்து அணிக்கு நம்பிக்கையை அளித்தாலும் அந்த நம்பிக்கை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கடைசி 5 விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி அடுத்தடுத்து இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பாக ஸ்பின்னர்கள் மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளும் க்றிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சாம்பியன்ஸ் டிராபி தகுதி - இங்கிலாந்தை விடாமல் துரத்தும் நெருக்கடி
2025ல் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தகுதிப்போட்டியாக இந்தப் போட்டி பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை முடியும்போது புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் தான் சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெறும்.
நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்று இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது.
8, 9 மற்றும் 10-வது இடங்களில் முறையே வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் இருக்கின்றன. அனைத்துப் போட்டிகளும் முடிந்த பிறகே இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க தகுதி பெறுமா என்பது தெளிவாகும். அதுவரையிலும் இந்த நெருக்கடி தொடரும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












