தமிழ்நாட்டில் 17 தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் செய்யும் போது 93% பேருந்துகள் இயக்கமா? எப்படி சாத்தியம்?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன. ஆனால், பேருந்துகள் இயல்பாகவே இயங்கி வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவிக்கிறது. கள நிலவரம் எப்படி உள்ளது என பிபிசி ஆய்வு செய்தது.
ஆறு அம்ச கோரிக்கைகள்

தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்துக் கழகங்களின் தொழிற்சங்கங்கள் ஆறு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென போக்குவரத்துக் கழக நிர்வாகங்களிடம் கோரிக்கை விடுத்துவந்தன.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
மேலும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், போக்குவரத்துத் துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளைத் துவங்க வேண்டும் என்பது தான் ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கை.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இது தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து வேலை நிறுத்தம் அறிவித்தபடி நடக்கும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து, பேருந்துகளை இயல்பான அளவுக்கு இயக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. செவ்வாய்க்கிழமையன்று காலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயல்பாகவே இயங்கின. சில இடங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் அளிக்கும் தகவல்களின்படி, மாநிலம் முழுவதும் 93 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கத்தைப் பொறுத்தவரை, மாநிலத்திலேயே அதிகமாக சென்னையில் 95 சதவீத பேருந்துகளும் குறைந்தபட்சமாக ராணிப்பேட்டையில் 68 சதவீத பேருந்துகளும் இயக்கப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், மாநிலத்தின் பல பகுதிகளில் குறைவாகப் பேருந்துகள் இயங்குவதால் பயணிகள் சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டன.
பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்

சாத்தூருக்கு அருகில் உள்ள N. சுப்பையாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளிக்கு அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். ஆனால், இன்று மிகக் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால், பல மாணவர்கள் பேருந்துகள் கிடைக்காமல் வீடு திரும்பினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகாலையில் 8 முதல் 10 சதவீத பேருந்துகளே இயங்கின. இந்த நிலையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சிஐடியு, பா.ம.கவின் தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பணிமனை முன்பு போராட்டம் நடத்த முயற்சித்த போது காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையில் 'பேருந்துகள் ஓடும்', 'பேருந்துகள் ஓடாது' என இரு வேறுவிதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால், பேருந்துகள் முழுமையாக இயங்குமா என்ற குழப்பமும் நீடித்தது. இந்த நிலையில், 8 மணிக்கு மேல் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயங்க ஆரம்பித்தன.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 சதவீத பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால், மழையின் காரணமாகவும் பேருந்துகள் ஓடாது என்று கருதியும் பலரும் பயணத் திட்டத்தை ஒத்திவைத்ததால், கூட்டம் குறைவாகவே இருந்தது.
பயணிகள் காத்திருப்பு

பட மூலாதாரம், SivasankarSS/X
கோவில்பட்டியைப் பொறுத்தவரை, மதுரையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் வழியாக செல்லும்.
ஆனால், இன்று நடக்கும் வேலை நிறுத்தம் காரணமாக காலை முதல் 45 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்துகளைப் பிடிக்க வேண்டியிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 400 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தற்போது 350 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் பேருந்து இயக்கத்தை ஆய்வு செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "இன்று காலை முதல் பேருந்து சேவை வழக்கம் போலவே இருக்கிறது. 95 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.
சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. தி.மு.க. சார்பு தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
93 சதவீத பேருந்துகள் இயங்குவதாகச் சொல்வது எப்படி?

பட மூலாதாரம், SivasankarSS/X
17 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், போக்குவரத்துக் கழகங்கள் 93 சதவீத பேருந்துகளை இயக்குவதாகச் சொல்வது எப்படி என்ற கேள்விக்கு, "நாங்கள் 50 சதவீத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இருக்கிறோம். அதனால், மதியம் வரவிருக்கும் ஓட்டுனரையும் இரவில் பணியாற்றிய ஓட்டுநர்களையும் வைத்து இந்த ஷிப்டை தொடரச் சொல்லியிருக்கிறார்கள்."
"இப்போதைக்கு இந்த முறையில் சமாளிக்கலாம். மாலையிலும் நாளையும் நிலைமை மோசமாகிவிடும்.
இதுபோக, பேருந்துகளுக்கு டீஸல் நிரப்ப பயன்படுத்தப்படும் ஓட்டுநர்களையும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதே நிலையைத் தொடர முடியாது" என்கிறார் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் கமலக் கண்ணன்.
போக்குவரத்துக் கழகங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

அப்படியானால், போக்குவரத்துக் கழகங்கள் நிலைமையைச் சமாளிக்க என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.
தொ.மு.ச. தொழிற்சங்கம் உள்ளிட்ட வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தினரைப் பயன்படுத்துவதன் மூலமே சுமார் 50 சதவீத பேருந்துகளை இயக்க முடியும் என அரசு நம்புகிறது.
இது தவிர, அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று, உரிமம் பெற்றுள்ள ஓட்டுநர்களை பயன்படுத்துவது, ஏற்கனவே ஓட்டுநர்களாக இருந்து தற்போது பணிமனையில் பணியாற்றும் ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் திட்டமிட்டிருக்கிறது அரசு.
இதிலும் நிலைமை சமாளிக்க முடியாமல் போகும்பட்சத்தில் அரசின் பிற நிறுவனங்களில் கன ரக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












