மோதியின் லட்சத்தீவு பயணத்தால் மாலத்தீவில் 3 அமைச்சர்கள் இடைநீக்கம் ஏன்?
இந்தியா குறித்தும், அதன் பிரதமர் நரேந்திர மோதி குறித்தும் இழிவாக கருத்துக்களை பதிவிட்ட மூன்று துணை அமைச்சர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது மாலத்தீவுகள்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்த சமூக ஊடக பதிவுகளுக்கு அதிகாரிகள் எதிர்வினையாற்றியிருந்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்த கருத்துகள் அமைச்சர்களின் தனிப்பட்ட விஷயம். அது மாலத்தீவு அரசின் நிலைப்பாடு இல்லை என மாலத்தீவு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமரை விமர்சித்தது குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த இந்தியர்களின் கோபத்தைத் தொடர்ந்து மாலத்தீவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கருத்துக்களை வெளியிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர் என மாலத்தீவு பிரதமர் மொஹம்மத் முய்சுவின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
என்ன நடந்தது?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஜனவரி முதல் வாரம் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் பகிர்ந்தார்.
'சாகசப் பயணத்தை விரும்புபவர்கள் கண்டிப்பாக லட்சத்தீவுக்கு வர வேண்டும்' என நரேந்திர மோதி குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரின் புகைப்படங்கள் வைரலானதோடு இனி மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவில் விடுமுறையைக் கொண்டாடுங்கள் என சமூக ஊடகங்களில் விவாதம் கிளம்பியது.
இதில், மாலத்தீவு அரசின் அமைச்சர் மரியம் ஷியூனாவும் இணைந்துகொண்டார்.
பிரதமர் மோதியின் புகைப்படங்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்தியாவை மாட்டு சாணியுடன் ஒப்பிட்டு ஷியூனா எழுதினார்.
இதனால், இந்தியாவில் சமூக ஊடக பயனர்கள் கடுங்கோபம் கொண்டனர். #BoycottMaldives and #ExploreIndianIslands உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் டிரண்ட் செய்யப்டன்.
சுரேஷ் ரெய்னா, சச்சின் டெண்டுல்கள் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் டிக்கெட் புக்கெட் நிறுவனமான EaseMyTrip சிஇஓ, தனது நிறுவன தளத்தில் மாலத்தீவுக்கான் விமான டிக்கெட் புக்கிங் செய்யும் வசதியை இடைநிறுத்தம் செய்துவிட்டதாக அறிவித்தார்.
இதையடுத்து மாலத்தீவின் முகமது முய்ஸு அரசாங்கம் பதற்றத்தை தணிக்கும் முயற்சியைத் தொடங்கியது. சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாலத்தீவு அரசு கூறியது. மேலும் துணை அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பதிவுகளும் நீக்கப்பட்டன.
சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்ட அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மல்ஷா ஷெரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சர்ச்சை, மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு ஐந்து நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்து.
மாலத்தீவு புதிய அதிபரின் பெய்ஜிங் பயணம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இதற்குமுன் மாலத்தீவு தேர்தலில் வென்று ஆட்சிக்கு வருபவர்கள் இந்தியாவுக்கு வருவதே வழக்கம். இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க முயலும் இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் பின்னடைவு ஏற்படுத்துவம் விதமான மாலத்தீவின் சமீபத்திய முடிவுகள் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
பூகோள ரீதியில் ராஜீய முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் மாலத்தீவில் வலுவான கால்பாதிப்பதில் இந்தியா மற்றும் சீனா இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

பட மூலாதாரம், @Narendra Modi
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



