ஆளுநர் முன்னிலையில் பட்டியலினத்தோருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது ஏன்?

ஆளுநர் முன்னிலையில் பட்டியலினத்தோருக்கு பூணூல்: என்ன நடந்தது?

பட மூலாதாரம், X/RAJ BHAVAN

படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் பட்டியலினத்தோருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது சர்ச்சையாகியிருக்கிறது.
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் பட்டியலினத்தோருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது சர்ச்சையாகியிருக்கிறது. அந்த நிகழ்வில் நடந்தது என்ன?

புதன்கிழமையன்று கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட விழா ஒன்றில், அவரது முன்னிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 100 பேருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள ஆதனூர் கிராமம் நந்தனார் பிறந்த கிராமமாகக் கருதப்படுகிறது. இந்த கிராமத்தில் புதன்கிழமையன்று நந்தனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.

இந்த விழாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த 100 பேருக்கு பூணூல் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில் மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க 100 பட்டியலினத்தோருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.

ஆளுநர் முன்னிலையில் பட்டியலினத்தோருக்கு பூணூல்: என்ன நடந்தது?

பட மூலாதாரம், X/RAJ BHAVAN

படக்குறிப்பு, கடலூர் மாவட்டத்தில் நந்தனார் பிறந்த இடமாக கருதப்படும் ஆதனூரில் நடைபெற்ற நந்தனார் குருபூஜையில் ஆளுநர் முன்னிலையில் 100 பட்டியலினத்தவருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.

'பூணூல் அணிவிப்பது மேன்மைப்படுத்துவது அல்ல'

முன்னதாக இந்த விழாவுக்கு ஆளுநர் செல்லும்போதே, அவருக்குக் கருப்புக் கொடி காண்பிக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் முயன்றனர். அவர்கள் பிறகு கைதுசெய்யப்பட்டனர். இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டில் நடந்த சில வன்கொடுமை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இப்போது இந்த பூணூல் அணிவிக்கும் நிகழ்வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், "இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம். இதன் மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இந்த நிகழ்வில் பூணூல் அணிய ஒப்புக்கொள்கிறவர்களுக்கு பணமும் கடனுதவியும் தருவதாக வாக்களிக்கப்பட்டுத்தான் அந்த விழாவில் ஆட்கள் திரட்டப்பட்டதாக வி.சி.கவின் சட்டமன்ற உறுப்பினரான சிந்தனைச் செல்வன் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நிகழ்வில் பூணூல் அணிந்துகொள்வோருக்கு இரண்டாயிரம் ரூபாய் பணமும் உடைகளும் வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் கூறுகிறார் சிந்தனைச் செல்வன்.

ஆளுநர் முன்னிலையில் பட்டியலினத்தோருக்கு பூணூல்: என்ன நடந்தது?

பட மூலாதாரம், X/RAJ BHAVAN

படக்குறிப்பு, பூணூல் அணிவிக்கும் நிகழ்வு வழக்கமான ஒன்று என இந்நிகழ்ச்சியை நடத்திய தமிழ் சேவா சங்கம் கூறுகிறது.

நந்தனார் பூஜைக்கு விசிக எதிர்ப்பு

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், "பெரிய புராணத்தில் நந்தனின் கதை வருகிறது. அதில் நந்தன் தீயில் விழுந்து எழுந்ததும் புனிதராகி, அவருக்கு பூணூல் அணிவிக்கப்படுகிறது. இந்தக் கதையே நந்தனை இழிவுபடுத்தும் கதை என்பது எங்கள் வாதம். இந்தக் கதையை ஒட்டி வந்த திரைப்படங்களில் நந்தனை இதைவிட மோசமாக இழிவுபடுத்தியிருப்பார்கள். நந்தன் கதையை வைத்துப் போடப்படும் நாடகங்களிலும் மோசமாகப் பேசுவார்கள். ஆகவே, இது போன்ற நாடகங்களை நடத்தக்கூடாது என நாங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால், அந்த நாடகம் இப்போது போடப்படுவதில்லை.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நந்தன் குருபூஜை என நடத்துகிறார்கள். இந்த ஆண்டு ஆளுநரை அழைத்துவந்து அவர் முன்னிலையில் 100 பேருக்கு மேல் பூணூல் அணிவித்திருக்கிறார்கள். பூணூலை பெருமிதத்திற்கு உரிய விஷயமாகக் காட்டுகிறார்கள். கடந்த கால பெருமிதத்தை நீங்கள் முன்னிறுத்தினால், கடந்த கால கசப்புகளையும் நாங்கள் முன்னிறுத்த வேண்டியிருக்கும்.

புராணங்களில் இழிவாக சித்தரிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் செயல்படுத்திக் காட்டுவதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? மூவாயிரம் தீட்சிதர்களில் ஒருவரும் தீயில் விழுந்து எழுந்து புனிதமடையவில்லை. நந்தன் மட்டும் நெருப்பில் விழுந்து எழுந்தால்தான் புனிதமடைகிறார், அவருக்கு பூணூல் அணிவிக்கப்படுகிறது என்று கூறி, இப்போதும் அதைச் செய்தால் எப்படி ஏற்க முடியும்?" என்கிறார் சிந்தனைச் செல்வன்.

ஆளுநர் முன்னிலையில் பட்டியலினத்தோருக்கு பூணூல்: என்ன நடந்தது?

பட மூலாதாரம், Facebook/Sinthanai Selvan

படக்குறிப்பு, பூணூல் அணிவிப்பது பட்டியலினத்தவரை இழிவுப்படுத்தும் செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

'சனாதனத்தை எதிர்ப்பவர்கள் நந்தனாரைப் பற்றி பேச வேண்டாம்'

இந்த நிகழ்ச்சியை நடத்தியது தமிழ் சேவா சங்கம் என்ற அமைப்பு. இந்த அமைப்பின் ஆன்மீகம், கலாச்சாரம், தமிழ் பண்பாடு பிரிவின் மாநிலத் தலைவரான ரா. பரமகுரு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். "எங்களுடைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நீண்ட காலமாகவே நாங்கள் பூணூல் அணியும் வழக்கமுடையவர்கள். நடுவில் விட்டுப்போய்விட்டது. அதை மீண்டும் செய்தோம். அதில் என்ன தவறு? இதற்காக யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. அவர்களாக வந்தார்கள். இந்த நிகழ்ச்சியைத் தடுக்க சிந்தனைச் செல்வன் முயற்சித்தார். அது நடக்கவில்லை. சனாதனத்தை எதிர்க்கும் அவர்கள் நந்தனாரைப் பற்றி பேச வேண்டியதில்லை" என்கிறார் ரா. பரமகுரு.

பூணூல் அணிந்தவர்களுக்கு சைவ அனுஷ்டான முறைகளைச் சொல்லிக் கொடுப்பதாகவும் கடந்த பல ஆண்டுகளாக இதைச் செய்துவருவதாகவும் கூறுகிறார் பரமகுரு.

"பறையர்களில் ஒரு பிரிவினர் பூணூல் அணிவது நீண்ட காலமாகவே இருக்கிறது. ஆனால், இப்போது நடந்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து நடந்திருக்கிறது. பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தோட்டத்தில் இது நடந்திருக்கிறது. பூணூல் அணிந்ததால், அவர்களுக்குக் கிடைக்கும் மற்ற அம்சங்கள் இவர்களுக்கும் கிடைக்குமா?" எனக் கேள்வியெழுப்புகிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

'நந்தனாருக்கு பூஜை இல்லை, சிலை வேண்டும்'

நந்தனை ஒரு மன்னனாக அங்கீகரித்து, அவருக்கு ஒரு சிலையை சிதம்பரத்தில் நிறுவ வேண்டும்; அதன் மூலமே அவரை இழிவுபடுத்துவதை நிறுத்த முடியும். தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து தொடர்ந்து கோரிவருகிறேன். இதனைத் தமிழ்நாடு அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்கிறார் சிந்தனைச் செல்வன்.

பட்டியலினத்தோருக்கு பூணூல் அணிவித்து அவரைப் பிராமணரைப் போல கருதவைக்கும் நிகழ்வு இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. பாரதியார் தனது சீடராகக் கருதிய ரா. கனகலிங்கம் என்பவருக்குப் பூணூல் அணிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் 1913ல் நடந்தது.

"ஒரு நாள் பாரதியார் வீட்டில் சிறு கூட்டம். நடுவில் தீ வளர்த்து, தீயைச் சுற்றி வேத மந்திரங்களை ஜபித்துக்கொண்டிருந்தனர். தீயைச் சுற்றி வ.வே.ஸு. ஐயர், ஸ்ரீநிவாஸாச்சாரியார், பிரம்மராய ஐயர், குவளைக் கண்ணன், நாகசாமி ஐயர், கோவிந்த ராஜுலு நாயுடு என்ற நண்பர் முதலீயோர் வீற்றிருந்தனர். ஒரு பலகையில் பாரதி அமர்ந்திருந்தார். மற்றொரு பலகையில் கனகலிங்கம். கனகலிங்கத்துக்கு பிரம்மோபதேசம் செய்து பூணூல் அணிவித்தார் பாரதி. இன்று முதல் நீ பிராமணன். யார் உனக்குப் பூணூல் போட்டுவித்தது என்றால், அதட்டியே பாரதி என்று சொல் என்றும் உபதேசித்தார்.

மூன்று பிரிவினருக்கு பூணூல் இருப்பதால், மற்ற இரு பிரிவுகளுக்கும் பூணூல் போட்டுச் சமத்துவம் உண்டாக்கலாம் என்று அக்காலத்தில் ஒரு நம்பிக்கை நிலவியது. பாரதி இதையொட்டியே கனகலிங்கத்தைப் பிராமணன் ஆக்கியிருக்க வேண்டும்.

கனகலிங்கத்திற்குச் செய்ததைப் போலவே, புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அர்ச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டி காயத்ரி உபதேசம் செய்தார்" என இந்த நிகழ்வை தனது சித்திர பாரதி நூலில் குறிப்பிடுகிறார் பாரதி ஆய்வாளரான ரா. அ. பத்மநாபன்.

ஆனால், பூணூல் அணிவிப்பது மனிதர்கள் இழிவு நீங்கி, மேன்மை அடைவதைக் குறிக்கும் காலம் மாறிவிட்டது என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் மிகத் தீவிரமான விவாதங்கள் நடந்துவருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: