சென்னைக்கு 'ஷோ' காட்டிய ராஜஸ்தானின் இளம்படை; சஞ்சு சாம்சன் வியூகத்தால் வெற்றியை 'கோட்டைவிட்ட' சி.எஸ்.கே

RR

பட மூலாதாரம், BCCI/IPL

முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டத் துவங்கிவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். சொந்த மைதானம், 200வது ஆட்டம், மஞ்சளுக்குப் போட்டியாக பிங்க் நிற ஆடைகளோடு மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் என உற்சாகத்தோடு களமிறங்கிய ராஜஸ்தானை முகம் மலரச் செய்திருக்கிறது ஜெய்ஷ்வால், படிக்கல், ஜுரெல் ஆகிய இளம்வீரர்களின் அதிரடி ஆட்டம்.

தோனி, பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் ராஜஸ்தான் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுபுறம் சேசிங்கில் விக்கெட்களை அடுத்தடுத்து பறிகொடுத்ததால் சென்னை அணியால் இந்த முறையும் ராஜஸ்தானை வெல்ல முடியவில்லை.

இந்த போட்டி இரு அணிகளுக்கும் ஏன் முக்கியம்?

நடப்பு ஐபிஎல் தொடரில், துவக்கத்தில் வெற்றிகளை குவித்து வேகம் காட்டிய ராஜஸ்தான் அடுத்தடுத்த தோல்விகளால் பின்னடவைச் சந்தித்தது. லக்னெள, பெங்களூரு அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்த தோல்விக்கு மாற்று மருந்து தேட, சென்னைக்கு எதிரான ஆட்டம் ராஜஸ்தானுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதேசமயம், சென்னையை சமாளிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதும் ராஜஸ்தானுக்கு நன்கு தெரியும். ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கவும், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முந்தவும் சென்னைக்கு எதிரான ஆட்டத்தை வெல்ல ராஜஸ்தான் முனைப்பு காட்டும். மறுபுறம், தொடர் வெற்றிகளால் ரசிகர்களை குஷியாக்கி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

பேட்டிங்கில் கான்வே, ரஹானே, துபே, கெய்க்வாட் போன்றவர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்றனர். சில வாரங்களுக்கு முன்புதான் சேப்பாக்கத்தில், ராஜஸ்தானிடம் சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. தோல்வியைத் தழுவியிருந்தது.

தோனி, ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் அவர்களால் சிக்சர் அடிக்க முடியாமல்போனதை சென்னை ரசிகர்கள் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. சொந்த மண்ணில் ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை, ஜெய்ப்பூரில் அவர்களுக்கு பதிலடி தரும் முனைப்பில் களமிறங்கியது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான்

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

ஐபிஎல் தொடரில் 200வது ஆட்டத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்த ஆட்டங்களில் தோற்றதே இல்லை.

அதேசமயம், ஆடுகளம் பேட்டிங்கிற்கு நல்ல ஒத்துழைக்கும் என்பதால் சஞ்சு சாம்சனின் தேர்வு ராஜஸ்தானுக்கு பலன் அளிக்கும் என்றே கருதப்பட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை நிரூபித்தது ராஜஸ்தானின் அதிரடியான பேட்டிங்.

சென்னை அணியை பொறுத்தவரை அதே 11 வீரர்களைக் கொண்டு ஆடியது. அணியில் எந்த மாற்றமும் இல்லை. ராஜஸ்தான் அணியில் ட்ரெண்ட் போல்டிற்கு பதிலாக ஆதம் சாம்பா கொண்டு வரப்பட்டார்.

ரன் மழை பொழிந்த ஜெய்ஷ்வால்

ஆட்டத்தின் முதல் பந்து முதலே அதிரடி காட்டத் துவங்கினார் ஜெய்ஷ்வால். 1,2,4வது பந்துகளில் 3 பவுண்டரிகளை ஜெய்ஷ்வால் விளாசியது சி.எஸ்.கே. பவுலர் ஆகாஷ் சிங்கை சோர்வடையச் செய்தது. முதல் ஓவரில் 14 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான்.

3வது ஓவரை ஆகாஷ் சிங் வீசியபோதும் ஜெஷ்வால் எந்த இறக்கமும் காட்டாமல் பந்துகளை பறக்கவிட்டார். அந்த ஓவரில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என 18 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான். பேட்ஸ்மேன்களின் அதிரடி வேகத்தை குறைக்க, தீக்‌ஷணவை 4வது ஓவரை வீசச் செய்தார். அது சற்று பலன் அளித்தது.

பவர்பிளேவின் முதல் 3 ஓவர்களைக் காட்டிலும் அடுத்த 3 ஓவர்களில் ராஜஸ்தானின் ரன் குவிப்பு ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை சேர்த்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் ஜெய்ஷ்வால்.

திருப்புமுனையை ஏற்படுத்திய 2 ஓவர்கள்.

CSK

பட மூலாதாரம், BCCI/IPL

9வது ஓவரை வீச ஜடேஜாவை அழைத்தார் கேப்டன் தோனி. 2வது பந்தை இறங்கி அடிக்க முயன்று துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஜாஸ் பட்லர். சி.எஸ்.கே ஒருவழியாக முதல் விக்கெட்டை வீழ்த்தி ஆறுதல் அடைந்தது. ராஜஸ்தானின் வேகமும் கட்டுக்குள் வந்தது.

14வது ஓவரை டுசார் தேஷ்பாண்டே வீசினார். ஆட்டத்தின் திருப்புமுனையை ஏற்படுத்திய மற்றுமொரு ஓவர் இதுதான். சஞ்சு சாம்சன், 17 ரன்கள் எடுத்திருந்தபோது தனது முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்தார் தேஷ்பாண்டே.

அதே ஓவரின் 5வது பந்தில் ஜெய்ஷ்வாலும் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து விடைபெற்றார். 6 சிக்சர், 8 பவுண்டர்கள் என 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தார் ஜெய்ஷ்வால்.

கடைசி ஓவர்களில் சி.எஸ்.கேவை சோதித்த இருவர்

17வது ஓவர் வரை ஆட்டம் ஓரளவு சென்னையின் கைக்குள் இருந்ததாகவே ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். அப்போது 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது ராஜஸ்தான். அதன் பின் வந்த துருவ் ஜுரல், படிக்கல் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர்.

15 பந்துகளில் 2 சிக்சர் 3 பவுண்டரி என 34 ரன்கள் சேர்த்து தோனியிடம் ரன் அவுட்டாகி வெளியேறினார் ஜுரல். மறுபுறம் படிக்கல் 13 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்களை வாரி வழங்கியது சி.எஸ்.கே. குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் மட்டும் 49 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் சேர்த்தது.

தொடக்கத்திலேயே தடுமாறிய சி.எஸ்.கே

CSK

பட மூலாதாரம், BCCI/IPL

203 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் பெரிய இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதம் அடித்து மிரட்டிய கான்வே, இந்த முறை கடுமையாக தடுமாறியது தெளிவாக தெரிந்தது.

சேசிங் செய்வதற்கான வேகம் அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. 16 பந்துகளை எதிர்கொண்ட கான்வே, 8 ரன்கள் எடுத்து பவர்பிளேவின் கடைசி ஓவரை வீசிய ஆதம் சாம்பாவின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். 1 சிக்சர் 5 பவுண்டரி என 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 15 ரன்களில் விடைபெற்றார்.

இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அம்பத்தி ராயுடுவால் இம்பாக்ட் ஏதும் ஏற்படுத்த முடியாமல்போனது. டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

5வது விக்கெட்டிற்கு மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபே சிக்சர்களை பறக்கவிட்ட வண்ணம் இருந்தார். மொயின் அலி தன் பங்கிற்கு 12 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து விடைபெற்றார்.

சென்னை அணி செய்த தவறுகள்

பந்து வீச்சில் கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது சென்னை அணி. மத்தீஷ பதிரண பந்துகள் எதிரணி பேட்ஸ்மேன்களில் எட்ஜில் பட்டு பவுண்டரிகளுக்கு பறந்த வண்ணம் இருந்தன. 4 ஓவர்கள் வீசி 48 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார் அவர்.

ஆகாஷ் சிங் 2 ஓவர்கள் வீசி 32 ரன்கள் வழங்கினார். கடைசி 3 ஓவரில் 49 ரன்களை சென்னை அணி வாரி வழங்கியது கூடுதல் நெருக்கடியை அளித்தது.

சென்னை அணி தோல்விக்கான மற்றுமொரு காரணம் சிறப்பான துவக்கம் அமையாதது. கான்வே 8 ரன்களில் ஆட்டமிழந்தது மட்டுமின்றி 16 பந்துகளை எதிர்கொண்டது சி.எஸ்.கேவின் சரிவுக்கு முதல் படியாக இருந்தது. பவர் ப்ளேயில் சென்னை வெறும் 42 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரஹானே, ராயுடு தங்கள் ஆட்டத்தை முழு திறனுடன் வெளிப்படுத்தாதது ராஜஸ்தானின் வெற்றியை ஏறத்தாழ உறுதி செய்திருந்தது. தனி ஆளாக கடைசி வரை துபே வெற்றிக்கு போராடினாலும் அது பலன் அளிக்காமல்போனது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: