"இறந்த கணவரின் உடலை என் குழந்தைகளுக்கு காட்டுங்கள்" - வியட்நாமில் இறந்த இலங்கை தமிழரின் மனைவி உருக்கம்

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு பிறகு மருத்துவமனையில் இறந்த இலங்கை தமிழரின் சடலத்தை தாயகத்தில் கொண்டு வந்து அவருடைய குழந்தைகளுக்கு காட்ட உதவுகள் என்று இலங்கையில் வாழும் அவரது மனைவி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொந்த மண்ணான இலங்கைக்குத் திரும்ப முடியாது எனக் கூறி வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்றவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், யாழ்ப்பாணத்தில் சாவகசேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் என்பது தெரிய வந்துள்ளது.
அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு 13 வயதாகிறது. கடைசி குழந்தையின் வயது நான்கு மாதங்கள் என்று அவரது உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இலங்கையில் நான்கு பிள்ளைகளை வளர்க்க முடியாத சூழலால்தான் தனது கணவர் கனடாவுக்கு செல்ல முடிவெடுத்தார் என்கிறார் அவரது மனைவி.
“பொருளாதார சூழ்நிலை காரணமாக, நான்கு பிள்ளைகளை வளர்க்க முடியாத நிலை இருக்கு. அதனால் குறைந்த செலவில் கனடா செல்ல இருந்தார். அவர் வியட்நாமுல இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது.
அவருடைய உடல் கிடைக்க எப்படியாவது வழி செய்ய வேண்டும். அப்போது தான் தந்தை இறந்துவிட்டார் என்று என் குழந்தைகளுக்கு உறுதிப்படுத்த முடியும்,” என்று துக்கம் தாளாமல் அழுதபடியே பேசினார் கிரிதரனின் மனைவி.
மேலும், “புலம்பெயர்ந்த மக்களும் எனக்கு ஆதரவு வழங்க வேண்டும். நானும் என் குழந்தைகளும் கண்ணால் பார்ப்பதற்கு என் கணவர் உடலைத் திரும்பக் கொண்டு வர 30 லட்சம் தர வேண்டும் என்கிறார்கள்.
உடலைத் திரும்பக் கொண்டு வந்து, அவர் தான் என் கணவர் என்று ஆதாரத்துடன் காட்டுவதற்கு மக்களும் அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்கி உதவ வேண்டும்,” என்று கிரிதரனின் மனைவி கேட்டுக் கொண்டார்.
குழந்தைகள், “எங்கள் அப்பாவைக் கொண்டு வந்து காட்டுங்கள்,” என்று கேட்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
என்ன நடந்தது?

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் வாழ முடியாத சூழல் நிலவுவதாகக் கூறி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல தமிழர்கள் மியான்மர் வழியாக கனடா நோக்கிச் செல்ல முயன்றுள்ளனர்.
இலங்கையிலிருந்து விமானத்தின் மூலம் சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் மியான்மர் நோக்கிச் சென்றனர். அங்கிருந்து கப்பல் மூலம் கனடா நோக்கிச் செல்ல முற்பட்டனர்.
இருப்பினும் அந்தக் கப்பல், சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை அண்மித்த கடல் பரப்பில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியதாக, கடந்த 6ஆம் தேதி இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்குத் தகவலொன்று கிடைத்தது.
இந்தத் தகவல் சிங்கப்பூர் கடற்படைக்குக் கிடைக்கவே, அங்கு அருகில் பயணித்த ஜப்பான் சரக்குக் கப்பலின் உதவியோடு அவர்கள் மீட்கப்பட்டு வியட்நாமிடம் ஒப்படைக்கப்பட்டனர். வியட்நாமிலுள்ள மூன்று முகாமிகளில் 303 இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளில் பலர் தாங்கள் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்பவில்லை என்றும் அதற்கு முயன்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் வியட்நாமிய அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இருப்பினும் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வந்த நிலையில், இரண்டு அகதிகள் கடந்த 18ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
அந்த இருவரும் வியட்நாமிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். அதில் கிரிதரனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார்.
இலங்கைக்கு மீண்டும் தஞ்சம் அடைந்தவர்களை திருப்பி அனுப்ப வியட்நாமிய அதிகாரிகள் முயன்று வந்த நிலையில், தன்னால் மீண்டும் தாயகம் திரும்ப முடியாது எனக் கூறி தற்கொலைக்கு அவர் முயன்றதாக முகாமிலுள்ள மற்றொரு அகதி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













