இலங்கை தமிழர் அதிகார பகிர்வை விவாதிக்க ஜனாதிபதி ரணில் விடுக்கும் அழைப்பு நடைமுறையில் சாத்தியமா?

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்க தயார் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
தமிழ் கட்சிகள் மாத்திரமன்றி, பெரும்பான்மை சிங்கள கட்சிகளையும், அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.
இனப் பிரச்னைக்கு தீர்வாக அதிகார பகிர்வை வழங்குவதற்கு அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்றைய தினம் விசேட உரையொன்றை நிகழ்த்தியபோது தெரிவித்தார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், டிசம்பர் மாதம் 11ஆம் தேதிக்கு பின்பு இந்த விடயம் தொடர்பில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளிடமும், ரணில் விக்ரமசிங்க பெயரைக் குறிப்பிட்டு, இது தொடர்பிலான அனுமதியை நேற்றைய தினம் கோரினார்.
எதிர்கட்சிகளின் நிலைப்பாடு

ஜனாதிபதியின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அதிகார பகிர்வு பற்றி பேச தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தயார் என்று குறிப்பிட்டார்.
முதலில் சிங்களவர்களே அதிகார பகிர்வை கோரியதாகவும், தானும் அதற்கு இணக்கம் எனவும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை நோக்கி, அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதற்கு பதிலளித்த மனோ கணேசன், அதிகார பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் முன்னணி இணக்கம் என்பதனாலேயே, தாம் அதனுடன் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்தவுடன், அனைத்து கட்சி கூட்டமொன்றை கூட்டுவீர்களானால், தாம் பேச்சுவார்த்தைக்கு வரத் தயார் என கூறினார்.
அதற்கு ஜனாதிபதி, வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பிற்கு பின்னர், விரைவில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும், இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், திடீரென ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அதிகார பகிர்வு தொடர்பான அறிவிப்பு குறித்து, தற்போது நாட்டில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
ஜனாதிபதியின் அழைப்பு சாத்தியமா?
மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான வீரகத்தி தனபாலசிங்கத்திடம் பிபிசி தமிழ் வினவியது.

கேள்வி :- அதிகார பகிர்வுக்காக பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட பகிரங்க அறிவிப்பை, நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில் :- ''அதிகார பகிர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று பேசியிருக்கின்றார். அதிகார பகிர்வின் ஊடாக 13 பிளஸ்ஸிற்கு மேல் போக முடியும் என்றார். ரணில் '13ஐ' காப்பாற்றுவேன் என்றால், மஹிந்த '13 பிளஸ்' என்ற நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளதாக கூறினார்.
ஆனால் தமிழ் கட்சிகளை ஒன்றிணைந்து வருமாறு அழைக்கிறார்.
தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு, ஓரணியாக பேச்சுவார்த்தைக்கு போவதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதை தமிழர்களாகிய நாம் யோசிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு, ஓரணியாக போக வேண்டும். உடனடியாக பேச்சுவார்த்தைக்கு போனால் தான் பயனுள்ளதாக அமையும்.
தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்குவதற்கு முதலில் சிங்கள மக்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
தமிழர்களை அழைப்பதை விட, சிங்கள மக்களை இதில் ஈடுபடுத்த வேண்டும். சமஷ்டி உள்ளிட்ட தீர்வுகளை தமிழர்கள் கோரினாலும், இடைக்கால தீர்வொன்றுக்கு தமிழர்களை இணங்கச் செய்யலாம்.
13ஐ முழுமையாக அமல்படுத்தி, இந்தியாவின் ஆதரவை பெற்று ஏதாவது செய்யலாம். இது தான் நடக்கப் போகிறது.
இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக 13ஐ அமல்படுத்தி, மாகாண சபைத் தேர்தலை நடத்;தும் நோக்கிலேயே ரணில் விக்ரமசிங்க போகின்றார்.
இந்த பொருளாதார பிரச்னைக்கு மத்தியில் சிங்கள மக்கள் எந்தளவிற்கு தமிழர் பிரச்னை தீர்வுக்காக இணங்குவார்கள்.
அவர்களை எந்தளவிற்கு அரசாங்கம் தங்களின் நிலைப்பாட்டிற்கு வென்றெடுக்க முடியும்? சிங்கள தேசியவாத கட்சிகள், கடும் போக்கு சக்திகள் எந்தளவிற்கு இதனை பார்க்கும்.
பஷில் ராஜபக்ஷ போன்றவர்கள் தங்களின் கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு இனவாதத்தையே கையில் எடுப்பார்கள்.
அவர்களின் ஆதரவுடன் இருக்கின்ற அரசாங்கம், நல்லிணக்க விடயத்திற்கு எந்தளவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்பவற்றை சிந்திக்க வேண்டும்."
தேதி குறிப்பிட்டு பேச்சுவார்தை நடத்துவதோ, இலங்கை இனப் பிரச்னையை பற்றிய அதனுடைய காரணிகளை பற்றித் தெரியாமல் இந்த அரசியல்வாதிகள் செயற்பாடுகின்றார்களா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
இரண்டு மாதங்களில் தீர்க்க முடியுமா?
அதிகார பரவலாக்கலுக்கு ரணில் விக்ரமசிங்க எதிர்ப்பு என சமூகத்தில் கூறப்பட்டு வரும் கருத்து குறித்தும், மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான வீரகத்தி தனபாலசிங்கம் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். ''ரணில் அதிகார பரவலாக்கலை எதிர்த்து போராடவில்லை. ரணில் எதிர்ப்பு தெரிவித்ததானது, அப்போது காணப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு, அப்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி பிரதமராக ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடு அதில் இருந்தது.
ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டு, பிரதமராகும் நிலைமாறு கால ஏற்பாட்டையே அவர் எதிர்த்தார் என்று சொல்லப்பட்டது.
அதிகார பரவலை அவர் எதிர்க்கவில்லை. இதை ஆதரிக்கின்றேன், இதை எதிர்க்கிறேன் என சொல்லாமல், நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாகவே அதை அவர் எரித்தார்," என அவர் பதிலளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி :- இந்த விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவது சந்தேகம் என்கிறீர்களே, அது ஏன்? பதில் : ''கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் அதிவுச்ச அதிகாரங்களை கேட்பார்கள். விக்னேஷ்வரனும் அதே அளவில் இருப்பார்.
ஒற்றை ஆட்சியை விட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறினால், பேச்சுவார்த்தை நடக்க போவதில்லை. பேச்சுவார்த்தையில் தான் அதனை நிர்ணயிக்க வேண்டுமே தவிர, பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே அதனை நிபந்தனையாக வைத்தால், அரசாங்கம் ஒரு நாளும் பேச்சுவார்த்தைக்கு வராது.
தென்னிலங்கையை ரணில் கொஞ்சமாவது திருப்திப்படுத்த வேண்டும். அவ்வாறு திருப்திப்படுத்தாவிட்டால், அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
2002ம் ஆண்டு சமஷ்டி வழங்குவதற்காக பேச்சுவார்த்தைக்கு தயார் என ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். இப்போது 13ஐ காப்பாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழ் கட்சிகள் 13திற்கு அப்பாற் சென்ற அதிகாரங்களையே கோரும். முரண்பாடான விடயங்களிலேயே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும். போராட்டத்திற்கு பின்னரான காலத்தில் தமிழ் பிரசினை குறித்து சிங்கள மக்களின் நிலைப்பாட்டை கவனத்தில் எடுக்க வேண்டும்." கேள்வி :- டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் இந்த பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என கூறப்படும் விடயம் சாத்தியப்படுமா? பதில் :- இது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான கதைகள். தேதி குறிப்பிட்டு, இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அது பல கட்டங்களாக விவாதிக்கப்பட்டு அதன் பிறகே கொண்டு வரப்பட வேண்டும். அப்படி செய்வதன் மூலமே சிங்கள மக்களின் சம்மதத்தையும் பெற முடியும்.
35 வருடங்களாக 13வது திருத்தத்தை கூட முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இப்படி இருக்கும் போது, அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்பாக தீர்ப்பது என்பது சிறுபிள்ளைத் தனமானது.
ஜனாதிபதி அறிவிப்பு - எழும் சந்தேகங்கள்

இனப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ரணில் விக்ரமசிங்க, அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பை, ஆராக்கியமான அழைப்பாக பார்க்க முடியாது என மூத்த ஊடகவியலாளர் அ.நிக்சன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''இது தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான ஒரு திட்டம். இரண்டாவது சர்வதேசம் அழுத்தங்களை கொடுக்கின்றது.
ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள், சர்வதேச நாணய நிதியம் பிரசினைக்கான தீர்வு என்று எல்லாம் சொல்லப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியம், இனப் பிரச்சினைக்கான தீர்வு என சொல்லவில்லை. மீள் நல்லிணக்கம் என்று சர்வதேச நாணய நிதியம் சொல்கின்றது. மீள் மறுசீரமைப்பு என்கின்ற போது, அது தமிழ் மக்களின் பிரச்சினையையே குறித்து நிற்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்காக இப்படியான அணுகுமுறைகளை அவர் கையாள்கின்றார். தீர்வு என்றால், என்ன தீர்வு கொடுக்கப் போகின்றார். இருக்கின்ற 13வது திருத்தத்தையே முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. ரணில் மாத்திரமல்ல, ராஜபக்ஷ, சந்திரிகா என யாரும் செய்யவில்லை.
13வது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற காணி, போலீஸ் அதிகாரங்கள் அனைத்தையும் கொழும்பு தனது கையில் எடுத்துள்ளது. ஒற்றையாட்சிக்கு கீழ் அவற்றை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது.
இந்த இடத்தில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்கின்றார். அதுவும் வடக்கு மாகாணத்தையே அழைக்கின்றார். பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்ததே பிரசினை. வடக்கு, கிழக்கு மக்களுக்கு தான் பிரசினை. வடக்கு, கிழக்கு 2006ஆம் ஆண்டு இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ஷவினால். மக்கள் விடுதலை முன்னணியின் மூலம் பிரிக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ பிரித்ததை அவர் அங்கீகரிக்கின்றார். கிழக்கு மாகாணத்தில் பிரசினை இல்லை. வடக்கில் மாத்திரமே பிரச்னை உள்ளது என்பதை கூறும் விதத்திலும் அது உள்ளது.
இப்படி சொல்லும் போது, முஸ்லிம் கட்சிகளும் கூறுகின்றது பேச்சுவார்த்தைக்கு எங்களையும் கூப்பிடுமாறு சொல்கின்றது. வலது கட்சிகள் எங்களையும் கூப்பிடுமாறு கூறுகின்றன. எல்லாம் கட்சியையும் வருமாறு கூறுகின்றார்.
எல்லா கட்சிகளையும் வைத்துக்கொண்டு இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது. முதலில் வடக்கு கிழக்கு பிரசினையை தீர்ப்பதற்கு எப்படியாதொரு பொறிமுறையை இவர் கையாள வேண்டும். அதற்கு பிறகு மலையக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை வேறு மாதிரி கையாள வேண்டும். எல்லா பிரச்னையையும் ஒரே நேரத்தில் முடிக்க முடியாது.
அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததானது, ஒரு குழப்பமான பிரச்சினை தான். சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் நோக்கமே இது. ஜனநாயக ரீதியில் ரணில் விக்ரமசிங்க எல்லாரையும் அழைக்கின்றார் என சர்வதேசம் பார்க்கும்.
ஆனால், இந்த அழைப்பு எங்கே போய் சிக்குள்ளும் என்பதே எமக்கே தெரியும். இதனை ஆரோக்கியமான அழைப்பாக பார்க்க முடியாது. இது சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கான அழைப்பாகும்." என அவர் கூறுகின்றார்.

எங்களின் இனப் பிரச்னையை, கட்டம் கட்டமாக இழுத்துக் கொண்டிருக்காமல், எங்களின் அதிகார பங்குகள் என்ன, வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கட்டமைப்பு தீர்வை முன்வைக்குமாறே தமிழ் கட்சிகள் கேட்கின்றன என அவர் குறிப்பிடுகின்றார். வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் கேட்பதாகவும் அவர் கூறுகின்றார். உண்மையிலேயே மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க எண்ணுவாராயின், தற்போது அரசியலமைப்பில் வலுவிழந்து காணப்படுகின்ற 13வது திருத்தத்தை யாருடைய அனுமதியும் இன்றி, பேச்சுவார்த்தையும் இன்றி நடைமுறைப்படுத்தினாலேயே, போதுமானது என அவர் குறிப்பிடுகின்றார். இதேவேளை, மலையக மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் மாறுப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதாக மூத்த ஊடகவியலாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.
''மலையக தமிழ் மக்களுக்கு பிரச்னை இருக்கின்றது. அந்த பிரச்னையையும், முஸ்லிம் மக்களின் பிரச்னையையும் கொண்டு வந்து, வடக்கு கிழக்கு பிரச்னைக்கான தீர்வுடன் பேச முடியாது.
குழப்புவதற்காகவே ஒரு பிரச்னையாக மாற்றுகின்றனர். வடக்கு, கிழக்கு பிரச்சினையை பந்தோடு பதினொன்றாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
ஜே.வி.பிக்கு, 13 வேண்டாம் என்பதே கொள்கை. அப்படி வேண்டும் என்று எண்ணியிருந்தால், வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரிக்க போயிருக்க மாட்டார்கள். மலையக மக்களின் பிரச்சினை என்பது பெருந்தோட்டம் தொடர்பானது.
நில உரிமை சம்பந்தமானது. மலையக மக்களுக்கு நில உரிமை இல்லை. மண்சரிவு என கூறி மக்களை, வேறொரு இடத்திற்கு இடம்பெயர்த்தினால், வாழ்ந்த இடமும் இல்லாது போகின்றது. வடக்கு, கிழக்கில் நில உரிமை உள்ளது. ஆனால், அந்த உரிமையை ஆழ்வதற்கு அதிகாரத்தை கொடுக்கவில்லை.
நிர்வாகம் தமிழ் மொழியில் உள்ளது. அதனை எங்களின் அதிகாரத்திற்குள் சேர்ப்பதிலேயே பிரச்னை உள்ளது. மலையகத்தில் அவ்வாறு இல்லை. நிர்வாகம் தமிழ் மொழியில் இல்லை. நில உரிமை இல்லை. அது வேறுப்பட்ட பிரசினை. முஸ்லிம்களுக்கு வேறு பிரச்சினை காணப்படுகின்றது," என அவர் குறிப்பிடுகின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












