கோவை: வனத்துறையிடம் பிடிபடாத 'ரோலக்ஸ்' - நள்ளிரவில் மருத்துவரை தாக்கிவிட்டு தப்பியது எப்படி?

பட மூலாதாரம், TN Forest Department
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
கோவை அருகே கடந்த சில மாதங்களில் 4 பேரைக் கொன்றதாகக் கருதப்படும் ரோலக்ஸ் என்ற ஆண் யானையை, 3 கும்கி யானைகளைக் கொண்டும், மயக்க ஊசி செலுத்தியும் பிடிப்பதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியின் போது யானை தாக்கியதில் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த யானையால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பிடிப்பதற்கு தலைமை வனக் காப்பாளர் உத்தரவிட்டுள்ளதால் இந்த முயற்சி தொடருமென்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.
ரோலக்ஸ் யானை என்ற பெயர் வந்தது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத்துறையிடம் பெறப்பட்ட தகவல்களில், 2011–2022 இடையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே இறந்துள்ளனர். இதே காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 109 யானைகள், மனித நடவடிக்கைகளால் பலியாகியிருக்கின்றன என்றும் தெரியவந்திருந்தது.
சமீபகாலமாக கோவை வனக்கோட்டத்தில் குறிப்பாக கோவை மற்றும் போளுவாம்பட்டி ஆகிய 2 வனச்சரகப் பகுதிகளில் யானை தாக்கி, 4 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட யானை தாக்கியே இறந்திருப்பதும் வனத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையின் நடமாட்டம், இந்த 2 வனக் கோட்டத்துக்குட்பட்ட தொண்டாமுத்துார், நரசிபுரம், தடாகம், தாளியூர், கெம்பனுார், குப்பேபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை வனக்கோட்டத்தில் யானை–மனித மோதல் அதிகம் நடப்பதால் இதற்கென யானை துரத்தும் காவலர்கள் அடங்கிய குழு, காட்டை விட்டு வெளியேறும் யானைகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, 'தடம்' எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இந்த குழுவினர் இந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், TN Forest Department
கடந்த சில மாதங்களில் அட்டுக்கல், ஜவ்வுக்காட்டுப்பகுதி, நரசிபுரம், வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் செல்வி, ரத்தினம், மருதாசலம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் இந்த யானையால்தான் நிகழ்ந்துள்ளன என்று வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதன் வருகையையும், நடவடிக்கைகளையும் பார்த்து சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இந்த யானைக்கு ரோலக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
கமல் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இந்த பெயர் சூட்டப்பட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த யானை வரும் வீடியோவுடன் ரோலக்ஸ் காட்சிகளில் வரும் பின்னணி இசையையும் கோர்த்து சமூக ஊடகங்களில் பலரும் பரவவிட்டுள்ளனர். அதிலிருந்தே இந்த யானையின் பெயரும் ரோலக்ஸ் என்றே நிலைத்துவிட்டது.
இந்த யானையைப் பிடிப்பதற்கு தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் இதைப் பிடிப்பதற்கு, டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து முத்து, நரசிம்மர் ஆகிய 2 யானைகளும், வால்பாறையிலிருந்து கபில்தேவ் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளன.
'ரோலக்ஸ்' யானையை பிடிப்பதில் என்ன சிக்கல்?
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இரவில், கெம்பனுார்–தாளியூர் ஆகிய இரு ஊர்களுக்கு இடையில், ரோலக்ஸ் யானையை மயக்கஊசி செலுத்திப் பிடிப்பதற்கு முயற்சி நடந்துள்ளது. யானைகள் மீட்புப் பணிகளில் வனத்துறையுடன் இணைந்து நீண்ட காலமாகப் பணியாற்றிய கால்நடை பராமரிப்புத்துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் கால்நடை மருத்துவர் மனோகரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் குழுவினர், ரோலக்ஸ் யானைக்கு மயக்கஊசி செலுத்துவதற்காக, அதற்கான துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் இருவரும் மயக்க ஊசியைச் செலுத்திய போது, யானை அதில் சிக்காமல் தப்பிவிட்டதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''அன்றிரவு மயக்கஊசி செலுத்த (tranquillize) முயற்சி செய்தோம். ஊசிகளைச் செலுத்தியபோது, அது தவறிவிட்டது. இரவு நேரங்களில்தான் அந்த யானை அதிகமாக வெளியில் வருகிறது. இதனால் அதனை பிடிப்பது சற்று கடினமாக இருக்கிறது.'' எனத் தெரிவித்திருந்தார்.
பகலிலும் யானை வெளியில் வருகிறதா என்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பகலில் கும்கிகளைக் கொண்டு அந்த யானையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தால், அதன்பின்னால் பெரும் கூட்டம் கூடிவிடுவதால் அந்த முயற்சியைத் தொடர முடியவில்லை என்று வனத்துறையினர் வருந்துகின்றனர். டிரோன் உதவியுடனும் வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை தேடி வருகின்றனர்.
ரோலக்ஸ் யானைக்கு ஒரே நேரத்தில் 2 மயக்க ஊசிகளைச் செலுத்த வேண்டியிருப்பதன் அவசியம் குறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் விளக்கினர். அந்த யானை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன், தற்போது இனப்பெருக்கத்துக்குத் தயார் நிலையில் (மஸ்த்) இருப்பதால் அதற்கு 3 விதமான மருந்துகளை இணைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது என்கின்றனர். ஒரே ஊசியில் அவ்வளவு மருந்தைச் செலுத்த முடியாது என்பதால்தான் இரண்டு ஊசிகளில் ஒரே நேரத்தில் செலுத்த முயற்சிப்பதாகக் கூறினர்.

இதுபற்றி பெயர் கூற விரும்பாத வனத்துறை கால்நடை மருத்துவர் ஒருவர், ''வீட்டுப் பிராணிகளை மயக்கமுற வைப்பதற்கும், காட்டுவிலங்குகளை மயக்கமுற வைப்பதற்கும் வெவ்வேறு விதமான மருந்துகள், வெவ்வேறு விதமான அளவுகளில் (எம்ஜி) மருந்துகள் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோன்று இரவு நேரமாக இருந்தால் யானை நின்று கொண்டே துாங்குவதற்கு ஒருவிதமான மருந்தும், பகல் நேரமாக இருந்தால் மயங்கி சாயும் வகையிலுமாக மற்றொரு வகை மருந்தும் பயன்படுத்தப்படும்.'' என்றார்.
அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''சமீபகாலமாக யானைகளைப் பிடிக்கும் எல்லா முயற்சிகளிலும் யானைகள் நின்று கொண்டு துாங்கும் மருந்தே (ஹிப்னாடிசனம்) பயன்படுத்தப்படுகிறது. அதற்கான மருந்தை ஊசிகளில் செலுத்திவிட்டு அருகில் சென்றாலும் அதனால் எதையும் செய்ய இயலாது. காட்டுயானைகள் பெரும்பாலும் இரவில் வெளியில் வருகின்றன. ஆனால் இரவு நேரத்தில் இருளுக்கு மத்தியில் யானைகள் நிற்குமிடத்தை துல்லியமாக அறிந்து ஊசியைச் செலுத்துவது பெரும் கஷ்டம்.'' என்றார்.
ரோலக்ஸ் யானை பற்றி வனத்துறையினர் கூடுதல் தகவல்

பிபிசி தமிழிடம் பேசிய போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், ''கடந்த சில மாதங்களில் இந்த யானையால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன் மருதமலை பகுதியிலும் வயதானவர் ஒருவரை தாக்கிக் கொன்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 8 முதல் 10 பேர் இந்த யானையால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால் இந்த யானை ஊருக்குள் ஊடுருவி யாரையும் கொன்றதில்லை. அதன் வழியில் வந்தவர்களைத் தாக்கியுள்ளது.'' என்றார்.
ரோலக்ஸ் யானையால் கடந்த 2 ஆண்டுகளில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவுக்குப் பின் அதைப் பிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இப்போது 3 கும்கி யானைகளுடன், 3 குழுவினர் கண்காணித்து வருவதால் விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மயக்க ஊசி செலுத்தப்பட்டதா, செலுத்தப்படவில்லையா என்பது குறித்து கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''மயக்க ஊசி செலுத்த முயற்சி நடந்தது. ஆனால் செலுத்த முடியவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் விளக்கு ஒளியைக் காண்பித்ததால் அது நகர்ந்து வாழைத்தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. ட்ரோன் மூலமாகக் கண்காணித்தும் அதைப் பின்தொடர முடியவில்லை.'' என்றார்.
யானை தாக்கி கால்நடை மருத்துவர் காயம்
சனிக்கிழமை அதிகாலை தொண்டாமுத்தூரை அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் காட்டு யானையை பிடிக்கும் பணியின்போது கால்நடை மருத்துவர் விஜயராகவனை யானை தாக்கியுள்ளது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஜயராகவனுக்கு முதுகெலும்பு மற்றும் இடது மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












