வங்கிக் கொள்ளையை கடமையாக கருதிய கிளர்ச்சியாளர்: ஹாலிவுட்டையே மிஞ்சிய உண்மை கதை

பட மூலாதாரம், COURTESY OF EDITORIAL TXALAPARTA
- எழுதியவர், போலா ரோஜாஸ்
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
"பொதுமக்கள் நலன் கருதி வங்கியைக் கொள்ளையடித்தேன். அதை நீங்கள் திருட்டு என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஏழையைக் கொள்ளையடிப்பதே திருட்டு எனச் சொல்லப்படுகிறது. கொள்ளையனை கொள்ளையடிப்பவன் என்றென்றும் மன்னிக்கப்படுகிறான். வங்கியைக் கொள்ளையடிப்பது மரியாதைக்குரிய விஷயம்."
கொள்ளையடிப்பது, 'சொந்த நலனுக்காக அல்லாமல் கூட்டு நன்மைக்காக' செய்யப்படும் வரை லோஸியோ அர்தாபியாவுக்கு அது ஒரு 'புரட்சிகரமான செயலாக' இருந்தது. லோஸியோ, உலகின் மிகப்பெரிய வங்கியை கொள்ளையடித்தவர்.
ஒரு நல்ல கிளர்ச்சியாளர் என்ற நிலையில் லோஸியோ அர்தோபியாவுக்கு, சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடையே மிக மெல்லிய கோடுதான் இருந்தது.
பகலில் கூலி வேலை செய்து வந்த லோஸியோ, இரவில் பெரிய 'மோசடி நபராக’ உருமாறுவார். அவர் படிப்பறிவில்லாதவர். தனது வாழ்வின் இறுதிவரை 'கிளர்ச்சியாளராகவே’ இருந்தார்.
கொள்ளைக்கார், ஆள் கடத்தல் செய்பவர், ஸ்மக்ளர் என்று அறியப்பட்ட லோஸியோ அர்தோபியா 1980களில் உலகின் மிகவும் தேடப்பட்ட மனிதர்களில் ஒருவராக இருந்தார்.
அவரது மேற்பார்வையின் கீழ் அவர் வழிநடத்திய டஜன் கணக்கான நபர்களின் நெட்வொர்க் இருந்தது. மேலும் அந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய வங்கியான நேஷனல் சிட்டி வங்கியில் (இப்போது சிட்டி பேங்க் என்று அழைக்கப்படுகிறது) நிறைய போலி பயணிகள் காசோலைகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றார்.
இந்தச் சம்பவத்தில் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்தத் தொகை குறைந்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று லோஸியோ கூறுகிறார். லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அரசுகளுக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்ட குழுக்களுக்கு நிதியளிக்க இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
அவரது பித்தலாட்டம் காரணமாக பிரபல கொரில்லா குழுவான பிளாக் பாந்தர்ஸின் தலைவர் ஆல்ட்ரிச் க்ளெவர் தப்பிக்க உதவி கிடைத்தது. அந்த நிதியின் உதவியுடன் பொலிவியாவில் நாஜி கிளாவோஸ் பார்பியை கடத்தும் முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது.
கொரில்லா நடவடிக்கைகளுக்கான உத்திகள் பற்றி சே-குவேராவுடன் தான் விவாதித்ததாக அவர் கூறுகிறார்.
இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது, எவ்வளவு தற்பெருமை அல்லது கதை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில், லோஸியோ அர்தோபியாவின் வாழ்க்கை ஒரு திரைப்படக் கதைக்கு எந்தவிதத்திலும் சளைத்தது அல்ல.
திரைப்படம் போன்ற வாழ்க்கை
லோஸியோ அர்தோபியா 1931இல் காஸ்கென்ட் நகரில் பிறந்தார். அவர் தனது சுயசரிதையில், சிறுவயதில் "தடைசெய்யப்பட்ட எதையும் நான் ஒருபோதும் மதிக்கவில்லை. எனக்கு ஏதாவது தேவைப்பட்டால், அதைப் பெறுவதற்கு நான் சரி என நினைப்பதைச் செய்வேன்" என்று எழுதுகிறார்.
உதாரணமாக தனது குழந்தைப் பருவத்தில், அவரது ஊரின் தேவாலயத்திற்கு எதிரே உள்ள குளத்தில் அன்றைய பணக்காரர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களைத் திருட அவர் தயங்கவில்லை.
மக்களின் தோட்டங்களில் பழங்களைத் திருடுவார். உயிர் வாழத் தேவையான எந்த வேலையையும் அவர் செய்து வந்தார்.
சிறு திருட்டுக்குப் பிறகு, எல்லையில் கடத்தலில் ஈடுபட்டார். தனது சகோதரனுடன் சேர்ந்து எல்லை தாண்டி புகையிலை, மருந்துகள், மதுபானங்களை கடத்துவது வழக்கம்.
அவர் இளைஞராக இருந்தபோது அந்தக் காலத்து சட்டத்தின் கீழ், ராணுவ சேவையை வழங்க அவர் பதிவு செய்யப்பட்டார். ராணுவ முகாம்களின் குடோன்களை அடைவது அவருக்கு எளிதாக இருந்தது. அவருக்கு முன்பாக ஒரு புதிய உலகம் திறந்தது.
விரைவில் ராணுவ வீரர்களின் காலணிகள், சட்டைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள் குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டு அவை அங்கிருந்து கடத்தப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவம் சில நாட்களில் ராணுவத்துக்குத் தெரிய வந்தது.
ஆயினும் கைது செய்யப்படுவதற்குள் அவர் தப்பித்து பிரான்ஸ் சென்றடைந்தார். அவர் தப்பிச் செல்லவில்லை என்றால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் அல்லது துப்பாக்கிச் சூடு படைக்கு எதிரில் இருந்திருப்பார்.

பட மூலாதாரம், Getty Images
அவர் பிரான்ஸை அடைந்தார். ஆனால் சிரமம் என்னவென்றால், அவருக்கு பிரெஞ்சு மொழியில் ஒரு வார்த்தைகூடத் தெரியாது. அவர் தனது சுயசரிதையில், "நான் பிரான்சுக்கு வந்தபோது எனக்கு எதுவும் தெரியாது" என்று எழுதுகிறார். ஆனால் விரைவில் அவர் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். மேலும் அவர் இறக்கும் வரை இந்தத் தொழிலுடன் இணைந்திருந்தார்.
"மனிதர்கள் தங்கள் உழைப்பால் அங்கீகரிக்கப்படுபவர்கள். அதனால்தான் நான் எப்போதும் என் வேலையில் முக்தியை கண்டேன், அது இல்லாமல் யாரும் ஒன்றுமேயில்லை" என்று அவர் அடிக்கடி கூறுவார்.
ஆனால் உண்மை என்னவென்றால் இந்த வேலைதான் அவரது ரகசிய வாழ்க்கைக்கு பினாமியாக செயல்பட்டது. ஏனென்றால் அந்த சகாப்தத்தின் பெரிய மோசடிகளுக்குப் பின்னால் ஒரு படிப்பறிவற்ற கூலித் தொழிலாளி இருக்க முடியும் என்று யாரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸ், ஆயிரக்கணக்கான ஸ்பானிஷ் கம்யூனிஸ்டுகள், ஆட்சி சட்டங்களை எதிர்க்கும் அராஜகவாதிகள், சோஷியலிஸ்டுகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் புகலிடமாக இருந்த காலம் இது.
ஆனால் படிக்கத் தெரியாத லோஸியோவுக்கு அரசியலில் எந்தப் பயிற்சியும் இல்லை. அவரது நினைவுக் குறிப்புகளில், ஒரு நாள் அவரது தோழர் அவரிடம், "உங்கள் அரசியல் கருத்துகள் என்ன? நீங்கள் யார்?" என்று கேட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று லோஸியோ அவருக்குப் பதிலளித்தார். ஏனெனில் பாஸிஸத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள் என்று அவர் நினைத்தார்.
இந்தப் பதிலைக் கேட்டு அவனது தோழர் சிரித்துவிட்டு, "என்ன விஷயம்! நீ கம்யூனிஸ்டாக ஆகப்போகிறாயா? நீ அராஜகவாதி" என்றார்.
அரசியல் உணர்வு
இந்த வார்த்தையை அவர் தன் தந்தையிடமும் இருந்தும் கேட்டிருந்தார். ஒரு நாள் அவருடைய அப்பா கோபத்தில் "நான் மீண்டும் பிறந்தால், ஒரு அராஜகவாதியாக இருப்பேன்," என்று சொன்னார்.
இது அவரது இரண்டாவது வாழ்க்கையின் ஆரம்பம். "இது எனக்கு சத்தியத்தின் தொடக்கத்தைக் குறித்தது, அது உண்மையான சுதந்திரம்."
அவர் சில பிரெஞ்சு படிப்புகளை கற்க லிபர்டேரியன் யூத் அமைப்பில் தன்னைச் சேர்த்துக்கொண்டார். நோபல் பரிசு பெற்ற தத்துவஞானி ஆல்பர்ட் காமுஸ் மற்றும் பிற குறிப்பிடத்தக்கவர்கள் வாழ்ந்த பாரிஸின் சீன்-மார்த்தே சுற்றுப்புறத்தில் தோன்றத் தொடங்கினார்.
பிரெஞ்சு மொழிப் பள்ளிகள் அவருக்குக் கல்வியின் கதவுகளை மூடின. ஆனால் நாடகக் குழுக்களின் கதவுகள் அவருக்குத் திறக்கப்பட்டன.
ஒரு நாள் CNT செயலாளர் அவரிடம் உதவி கேட்டார், "உங்களுக்கு ஒரு அபார்ட்மெண்ட் இருப்பது எங்களுக்குத் தெரியும். உதவி தேவைப்படும் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு நாங்கள் மாற்று ஏற்பாடு செய்யும் வரை சிறிது காலம் அவருக்கு உதவுங்கள்," என்றார்.
இந்த நண்பர் கவாகோ சபதி, அவர் ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியாவில் பிரெஞ்சு எதிர்ப்பு கொரில்லா சண்டைகளில் ஈடுபட்டார். ஸ்பெயினில் மிகவும் 'தேடப்படும்' நபர்களில் ஒருவராக இருந்தார். லோஸியோ அவரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவரை 'அராஜகவாதத்தின் குரு' என்று அழைத்தார் என்று பெர்னார்ட் தாமஸ் குறிப்பிடுகிறார்.
லோஸியோ, கவாகோவை மறைந்து வாழ உதவினார். மேலும் அவர் ஆறு மாத தண்டனைக்காக சிறைக்குச் சென்றபோது, தாம்சன் இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி போன்ற 'கருவிகள்' கிடைத்தன.
இந்த 'கருவிகள்' மற்றும் ஒரு தளர்வான ஆடையின் உதவியுடன், நண்பர் ஒருவருடன் சேர்ந்துதான் பாரிஸில் முதல் முறையாக ஒரு வங்கியைக் கொள்ளையடித்தாக லோஸியோ கூறுகிறார். யாரோ ஒருவரின் சொத்தை அரசு பறிமுதல் செய்வதுபோல, அவர் அதை ’ஜப்தி’ என்று அழைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
முதல் முறையாக வங்கியில் கொள்ளையடித்த சுவாரசியமான கதை
அந்த நேரத்தில் லோஸியோ கடினமாக உழைத்து வாரத்திற்கு 50 பிராங்குகளை சம்பாதித்தார். ஆனால் 16 நிமிடங்களில் அவர் மில்லியன் கணக்கான பிராங்குகளை சம்பாதித்தார்.
முதல் திருட்டுக்குப் பிறகு, அவர் இன்னும் பல வங்கிகளைக் கொள்ளையடித்தார். ஆனால் லோஸியோ தனது கட்டுமான வேலையை விட்டுவிடவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட செல்வம் 'புரட்சிகர' நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார். அந்தக் காலத்தில் செக்யூரிட்டி கேமராக்கள் இல்லாததால் வங்கியில் கொள்ளையடிப்பது அவருக்கு எளிதாக இருந்தது.
ஆனால் யாருக்காவது காயம் ஏற்படும் என்று அவர் பயந்ததால் அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. "முதன்முறையாக வங்கியைக் கொள்ளையடிக்கப் போனபோது என் பேன்டில் நான் சிறுநீர் கழித்துவிட்டேன்,” என்று பின்னாளில் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
அவர் தனது தாம்சன் இயந்திர துப்பாக்கிக்கு பதிலாக ஓர் அச்சகத்தை வாங்கினார். அது அராஜகவாதிகளின் மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது.
அச்சு உலகில் உள்ள தனது நண்பர்களின் உதவியுடன் போலியான ஸ்பானிஷ் அடையாள அட்டைகள், பாஸ்போர்ட்கள், ஓட்டுநர் உரிமங்கள் தயாரிக்கத் தொடங்கினார். வேறு நாடுகளுக்கு மக்கள் செல்வதில் இவை உதவின. அரசை எதிர்ப்பவர்கள் வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடிந்தது.
"அரசு அதிகாரிகளுக்குப் பணம் செலுத்தாமல் வாகனங்களை வாடகைக்கு எடுப்பது, வங்கிக் கணக்குகள், பயண ஆவணங்கள் போன்ற அனைத்தையும் இது எளிதாக்கியது. மூடப்பட்டிருந்த கதவுகள் எங்களுக்கு இதன் மூலம் திறந்தன," என்று அவர் தனது சுயசரிதையில் எழுதினார்.
ஆவணங்களுக்குப் பிறகு, அவரது அடுத்த இலக்கு கரன்சி நோட்டுகளாக மாறியது. லோஸியோ அமெரிக்க டாலரின் நல்ல நகலை கண்டுபிடித்தார். "நாங்கள் செய்த மற்ற விஷயங்களை ஒப்பிடுகையில், டாலரை நகலெடுப்பது கொஞ்சம் எளிதாக இருந்தது," என்று அவர் விளக்குகிறார்.
போலி கரன்ஸியை தயாரிப்பதில் மிகவும் கடினமான விஷயம் காகித்தைக் கொண்டு வருவது. போலி கரன்ஸியை உருவாக்க, அவர் ஓர் அமெரிக்க எதிர்ப்பு நாட்டின் உதவியைப் பெற முடிவு செய்தார். லோஸியோவுக்கு ஒரு முட்டாள்தனமான யோசனை வந்தது. அவர் பாரிஸில் உள்ள கியூபா தூதரை தொடர்புகொண்டு பாரிஸ் விமான நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்த சே குவேராவை சந்திக்க உதவி கோரினார். இந்தச் சந்திப்பு நடந்ததா என்பதை உறுதி செய்வது கடினம்.
கியூபா புரட்சி, பல அராஜகவாதிகள், கம்யூனிஸ்டுகள், முதலாளித்துவ எதிர்ப்பு அமைப்புகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.
”அந்த நேரத்தில் ஆர்வலர்கள் கியூபா தூதரகத்துடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம். ஆனால் "அவர் சே குவேராவை சந்தித்தாரா" என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று வரலாற்றாசிரியர் ஆஸ்கார் ஃபிரான் ஹெர்னாண்டஸ் தெரிவிக்கிறார்.
லோஸியோ உற்சாகமாக இருந்தார். ஓர் எளிய திட்டத்தை வைத்திருந்தார். கியூபா மில்லியன்கணக்கான டாலர்களை அச்சிடவேண்டும், சந்தையில் டாலர்களை கொட்டுவதன் மூலம் அமெரிக்க நாணயத்தை மதிப்பிழக்கச்செய்யவேண்டும். போலி கரன்ஸி தயாரிப்பதற்கான பிளேட்டுகளை தர அவர் ஒப்புக்கொண்டார்.
அந்த நேரத்தில் சே குவேரா கியூபாவின் நிதியமைச்சராக இருந்ததாகவும் இந்த விஷயத்தில் அவர் தெளிவில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதற்காக லோஸியோ வருந்தினார்.
சே குவேரா இதைச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் இந்த குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகள் சிறை.
லோஸியோ தனது புத்தகத்தில் "அதனால்தான் நாங்கள் பயணிகள் காசோலைகளை(டிராவலர்ஸ் செக்) தேர்ந்தெடுத்தோம். இதன் நகலை தயாரிப்பதற்கான தண்டனை வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே," என்று எழுதுகிறார்.
ஒரு வங்கியில் பயணிகள் காசோலைகளை அளித்து 30,000 பிராங்குகளை வாங்குவதற்காக பிரஸ்ஸல்ஸுக்கு செல்ல அவர் ரயிலில் ஏறினார். ஃபர்ஸ்ட் நேஷனல் சிட்டி பேங்க், உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று.
இது எளிதான காரியம் அல்ல. ஆனால் அவர் போலி காசோலைகளை ஏற்கெனவே தயார் செய்திருந்தார். அவர் தலா 100 டாலர்கள் மதிப்பிலான 25 காசோலைகள் கொண்ட 8,000 காசோலை புத்தகங்களை உருவாக்கினார். பல்வேறு குழுக்கள் சேர்ந்து வங்கிகளில் இருந்து சுமார் இரண்டு கோடி டாலர்களை இதன்மூலம் பெற்றன.
அவர் தனது குழுக்களை ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி குறிப்பிட்ட நேரங்களில் காசோலைகளை பணமாக்கிக் கொள்வார். இந்த வழியில் ஆவணங்களின் எண்கள் திருடப்பட்டன. இல்லையேல் சந்தேகத்திற்குரிய காசோலைகள் பதிவு செய்யப்படாது.

பட மூலாதாரம், COURTESY OF EDITORIAL TXALAPARTA
அந்தப் பணம் என்ன ஆனது?
அந்தப் பணம் என்ன ஆனது என்பது மிகப் பெரிய கேள்விகளில் ஒன்று என்கிறார் வரலாற்றாசிரியர் ஆஸ்கார் ஃபிரான் ஹெர்னாண்டஸ். "எவ்வளவு பணம் திருடினார்கள், எங்கே எப்படி அனுப்பினார்கள் என்று தெரியவில்லை." ஆனால், இந்தப் பணம் மூலம் லோஸியோ பணக்காரர் ஆனார் என்ற கூற்றை அவர் மறுக்கிறார்.
அந்தப் பணம் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இடதுசாரி கொரில்லா போராளிகள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டது என்று லோஸியோ அர்தாபியா, அவரது சகாக்கள் தெரிவித்தனர்.
”பாதுகாப்பு காரணங்கள், உளவுத்துறை ஆய்வு மற்றும் போலீஸ் ஆதாரங்கள் கிடைக்காததன் காரணமாக அதன் பட்டியல் இல்லை. அவருக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை. பணம் இருந்த இடம் பற்றிய லோஸியோவின் கதையை உறுதிப்படுத்தும் எதுவும் பதிவு செய்யப்படவில்லை,” என்று ஹெர்னாண்டஸ் தெரிவிக்கிறார்.
லோஸியோ வன்முறையை வெறுத்தார், யாருக்காவது காயம் ஏற்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று அஞ்சி வங்கிக் கொள்ளைகளை அவர் கைவிட்டார். ஆனால் அந்தப் பணம் ஸ்பெயினில் உள்ள ETA ஆயுதக் குழுவிற்கு உதவியது. இதுகுறித்து யாரும் தார்மீக எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.
லோஸியோ 2015 இல் ஒரு ஸ்பானிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தனது கிராமத்தில் குழந்தைப் பருவத்திலும் இளமையிலும் அநீதியை எதிர்கொண்டதாகக் கூறினார். "நான் பயத்தில் வாழ்ந்ததால் ஸ்பெயின் மற்றும் நார்வேவை வெறுத்தேன். அதனால்தான் போராடுபவர்களுக்கு நான் ஆதரவாக இருந்தேன்," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்ப்பாளரின் வீழ்ச்சி
எல்லா இடங்களிலும் போலி பயணி காசோலைகள் பிடிபட ஆரம்பித்தன. ஃப்ர்ஸ்ட் நேஷனல் சிட்டி வங்கி அவற்றை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த காசோலைகளை வாங்கியவர்களால் பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை.
லோஸியோவுக்கு அவரது நண்பர் ஒரு யோசனையை வழங்கினார். ஒரு வாங்குபவர் அவரிடமிருந்து எல்லா காசோலைகளையும் 30 சதவீதம் குறைவான விலைக்கு வாங்கிக்கொள்வார் என்பதுதான் அது.
லோஸியோ 1980 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அவரது வழக்கறிஞர்களில் ஒருவர் ரோலண்ட் தோமாஸ். அவர் பின்னர் பிரெஞ்சு நிதி அமைச்சரானார். "இந்தப் பணம் எங்களுக்கானது அல்ல, எங்கள் அரசியலுக்கானது என்பதை நாங்கள் உடனடியாகப் புரிந்துகொண்டோம். போலி பயணிகள் காசோலைகளை உருவாக்குங்கள், அரசை பலவீனப்படுத்தும் வகையில் அவற்றை சந்தையில் உட்புகுத்துங்கள் என்று நாங்கள் கூறினோம்," என்று லோஸியோ குறிப்பிட்டார்.
தோமாஸ் ஸ்பெயினுடன் தூதாண்மை உறவுகளைக் கொண்டிருந்தார். ETA உடன் தொடர்பை ஏற்படுத்த உதவுமாறு லோஸியோவிடம் கேட்டார். ஸ்பெயின் அரசியல்வாதியான ஹாவியர் ரோபரெஸை அந்த அமைப்பு கடத்தி வைத்திருந்தது.
31 நாட்களுக்குப் பிறகு ஹாவியர் விடுவிக்கப்பட்டார். 1981ஆம் ஆண்டில், ஆயுதமேந்திய கும்பல்கள் ஸ்பெயினில் உள்ள ஆஸ்திரிய மற்றும் எல் சால்வடார் தூதரக அதிகாரிகளைக் கடத்தியபோது, லோஸியோவின் உதவி மீண்டும் நாடப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஃபர்ஸ்ட் நேஷனல் சிட்டி வங்கிக்கு என்ன ஆனது?
லோஸியோவுக்கு எதிரான வழக்கு, விசாரணையில் இருந்தபோது சுமார் ஆறு மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். ஆனால், அச்சடிக்கும் ப்ளேட்டுகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தத் தகடுகள் கள்ள நோட்டுகள் தயாரிப்பவர்களிடம் இருந்தவரை பிரச்னை நீடித்தது.
கட்டாயத்தின் பேரில் வங்கி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. பிரெஞ்சு பிரதமரின் ஆலோசகராக இருந்த வழக்கறிஞர் தியரி ஃபகார்ட், லோஸியோவை சந்தித்து, வங்கியின் வழக்கறிஞர்களை பேச்சுவார்த்தைக்குத் தயார்படுத்தினார்.
"இது வணிகத்திற்கு மோசமானது. எனவே அதை நிறுத்த வேண்டும். இது இப்படியே தொடர முடியாது. நிறைய பேர் சிறை சென்றுவிட்டனர் என்று ஃபர்ஸ்ட் நேஷனல் சிட்டி வங்கியின் வழக்கறிஞர்கள் கூறினார்கள்," என்று தியரி ஃபகார்ட் தெரிவித்தார்.
"ஆனால் இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டே இருந்தது, சிட்டி பேங்க் மற்றும் லோஸியோவின் வழக்கறிஞர்கள் இந்த பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நினைத்தனர். லோஸியோ அதன் மூளையாகச் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்."
அவரும் அவரது கும்பலும் மில்லியன் கணக்கான டாலர்களை திருடிய அதே வங்கி அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டது. அதற்கு ஈடாக அவர்கள் பாரிஸில் ஒரு லாக்கர் அறையில் மறைத்து வைத்திருந்த அச்சு தட்டுகளைப் பெற்றனர் என்று ஃபகார்ட் கூறினார்.
ஒரு ஹோட்டல் அறையில் இந்தப் பரிவர்த்தனை நடந்ததாகவும், வங்கியின் பிரதிநிதிகளும் அங்கு இருந்தனர் என்றும் இது தொடர்பான ஆவணப்படத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். வங்கி இதை உறுதிப்படுத்தியது, ஒப்பந்தத்தின் கீழ் வங்கி, ஒரு பெரிய தொகையை பிரீஃப்கேஸில் வைத்து அளித்தது என்று ஃபகார்ட் கூறினார்.
இந்த ஒப்பந்தம் 4 கோடி பிராங்குகளுக்கு செய்யப்பட்டது என்று லோஸியோ தெரிவித்தார். அதன் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். தான் எந்தப் பணத்தையும் வைத்துக்கொள்வதில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
புரட்சிகர வாழ்க்கையை விட்டுவிட்டு குடும்பத்திற்கு நேரம் கொடுக்க ஆரம்பித்தார்
பிபிசி தொடர்பு கொண்டபோது வங்கி தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.
லோஸியோ தனது 50வது வயதில் தனது புரட்சிகர வாழ்க்கையைத் துறந்து தனது குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்க முடிவு செய்தார், மேலும் பாரிஸ் அருகே ஒரு தொழிலாளியாகத் தொடர்ந்து பணியாற்றினார்.
"நாம் அறியாத சில விஷயங்கள் உள்ளன, அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்," என்று வரலாற்றாசிரியர் ஹெர்னாண்டஸ் கூறுகிறார்.
"ஆனால் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அரசியல் ஆதரவும் உணர்வும் இல்லாத வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரான்சுக்கு வந்து அராஜக அணுகுமுறையைக் கற்றுக்கொண்டார். அவர் ஓர் ஆர்வலராக மாறி தன்னை ஒரு புனைகதை ஹீரோவாக மாற்றும் நடவடிக்கைகளை எடுத்தார்."
லோஸியோ 2020இல் இந்த உலகிலிருந்து விடைபெற்றார். "குற்றங்களின் உலகத்தைவிட்டு நான் ஒருபோதும் விலகவில்லை. என் அனுபவங்களை என்னால்கூட நம்பமுடியவில்லை,” என்று பல பேட்டிகளில் அவர் கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












