கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்களுக்கு கொடுத்த ஆந்திராவின் 'ராபின் ஹூட்' நாகேஸ்வர ராவ்

கொள்ளை, ஆந்திரா, சினிமா

உங்களுக்கு ராபின் ஹூட் கதை பற்றித் தெரியுமா?

பணக்காரார்களிடமிருந்து பணத்தை எடுத்து, அதை ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கும் நாயகனை மையப்படுத்திய கதைகளே ராபின் ஹூட் கதைகள் எனக் கூறப்படுகின்றன. ஆங்கிலத்தில் இதுபோன்ற கதைகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் கதைகளை மையப்படுத்தி நிறைய படங்களும்கூட வந்திருக்கின்றன. ராபின் ஹூட் என்ற பெயர் ஹாலிவுட் படங்களை பொருத்தவரை மிகவும் பிரபலமானவை.

ஆந்திராவின், பாப்பட்லா பகுதிக்கு அருகில் உள்ள ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்தவர் கோகாரி நாகேஸ்வரராவ். `டைகர்` என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வந்த இவர், ஆந்திராவின் ராபின் ஹூடாக அறியப்பட்டார்.

இவரது வாழ்க்கையை மையப்படுத்தி, `டைகர் நாகேஸ்வர ராவ்` என்ற திரைப்படம் வெளியாகவிருக்கிறது. தெலுங்கின் பிரபல நடிகர் ரவிதேஜா இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

டைகர் நாகேஸ்வரராவ்வின் கதை என்ன?

கொள்ளை, ஆந்திரா, சினிமா
படக்குறிப்பு, பிரபாகர் ராவ்

ஆந்திராவின் காவல்துறை பதிவுகள்படி, கோகாரி நாகேஸ்வரராவ் ஒரு மிகப் பெரிய கொள்ளையனாக அறியப்படுகிறார். அவரது பெயரில் நிறைய கொள்ளை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேநேரம், பல திருட்டு வழக்குகளில் அவர் முக்கியப் புள்ளியாக செயல்பட்டதாகவும் ஒரு பெரிய கொள்ளை கும்பலுக்கு தலைவனாக அவர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

24 மார்ச், 1980ஆம் ஆண்டு காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். அதற்கு முன்னதாக ஏற்கெனவே பலமுறை அவர் காவல்துறையினரின் தாக்குதலில் இருந்து தப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக மார்ச் 23ஆம் தேதியன்று இரவு, அவர் ஒரு பெண்ணுடன் இருந்தபோது, காவல் துறையினர் அவரது வீட்டைச் சுற்றி வளைத்து, என்கவுண்டர் தாக்குதல் நடத்தினர். அதில் அவர் இறந்துவிட்டதாக 24ஆம் தேதி காவல்துறையினர் அறிவித்தனர்.

நாகேஸ்வர ராவ் தன்னுடைய 27வது வயதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார். அதற்கு அவரது செயல்பாடுகள்தான் காரணமாக இருந்தது என்கிறார் நாகேஸ்வர ராவின் சகோதரர் பிரபாகர் ராவ்.

"என் தந்தை காலத்திற்கு முன்பிருந்தே எங்கள் குடும்பத்திற்கு கொள்ளைகளில் ஈடுபடும் பழக்கம் இருந்தது. அதில் எனது இளைய சகோதரன் நாகேஸ்வரராவ் மிகவும் திறன் மிக்கவராக இருந்தார். ஆனால் அதேநேரம் அவருக்குக் கிடைக்கும் அனைத்து செல்வங்களையும், தானம் செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

யாருக்கு தேவை இருந்ததோ அவர்களைத் தேடிச் சென்று உதவி செய்து வந்தார். நாங்கள் அனைவரும் ஒன்றாக திருட்டில் ஈடுபட்டால்கூட, கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் அவர் மற்றவர்களுக்குக் கொடுத்து வந்தார். அவர் எங்களுடன் கொள்ளைகளில் ஈடுபடுவதற்கு முன்பாக நான் சில நிலங்களை வாங்கியிருந்தேன். அது மட்டுமே இப்போதும் என்னிடம் இருக்கின்றன,” என்று கூறுகிறார் பிரபாகர் ராவ்.

பிரபாகர் ராவ் தற்போது, ஸ்டூவர்ட்புரத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். திருட்டில் ஈடுபட்டு தாங்கள் பல லட்சங்களை சேர்த்து வைத்ததாகவும் ஆனால் அனைத்தையும் நாகேஸ்வரராவ் மக்களுக்குக் கொடுத்துவிட்டதாகவும் பிரபாகர் ராவ் கூறுகிறார்.

தொடர்ச்சியாக நாங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தாலும், நாகேஸ்வர ராவ் அதை மக்களுக்குத்தான் அளித்து வந்தார். அதனால் ஏற்பட்ட மக்களின் ஆதரவுதான் அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்கு உதவியது. ஆனால் இறுதியாக, அவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட பின் மக்களுக்கு அவர் மீதிருந்த அதிருப்தியும் வெளிப்பட்டது.

பங்கனப்பல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை

கொள்ளை, ஆந்திரா, சினிமா
படக்குறிப்பு, நாகேஸ்வர ராவ்

1974ஆம் ஆண்டு பங்கனப்பல்லியில் இருந்த ஒரு வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது அன்றைய காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை சம்பவம். வங்கியில் இருந்த கடும் காவலுக்கு மத்தியிலும், இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

பெரும் அளவிலான நகைகளும் பணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தொகையின் மதிப்பு சுமார் 35 லட்சம் என அப்போது காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டது.

நள்ளிரவில் வங்கிக்குள் புகுந்து, காவலுக்கு இருந்த ஊழியரைத் தாக்கி, அங்கிருந்த அனைத்து செல்வங்களையும் கொள்ளையடித்த சம்பவம் நாடு முழுவதும் அன்று பேசுபொருள் ஆனது.

”பங்கனப்பல்லி கொள்ளைச் சம்பவத்தில் மொத்தம் 10 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டோம். அந்த வங்கி, காவல் நிலையத்திற்கு எதிரிலேயே அமைந்திருந்ததால், அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்திருந்தோம்.

வங்கியின் பின்பக்க கதவை உடைத்து, நள்ளிரவில் நாங்கள் வங்கிக்குள் நுழைந்தோம். வங்கியின் கருவூலத்தை உடைத்துப் பார்த்தபோது அதில் 14 கிலோ தங்கமும் 50,000 ரூபாய் பணமும் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு, எங்கள் ஊருக்குத் திரும்பினோம். அதை எங்களுக்குள் பங்கிடுவதற்கு முன்பாகவே காவல்துறையினர் எங்களைச் சுற்றி வளைத்தனர். ஆனால் அப்போது நாகேஸ்வர ராவ் மட்டும் தப்பித்துவிட்டார். நான் சரணடைந்துவிட்டேன்,” என்கிறார் பிரபாகர் ராவ்.

இந்தச் சம்பவத்தின்போது காவல்துறையிடமிருந்து, நாகேஸ்வர ராவ் தப்பித்துச் சென்றதே அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. ஆனால் அதேநேரம் காவல்துறைக்கு அவர் மேல் மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியது.

சிறையிலிருந்து தப்பித்த நாகேஸ்வர ராவ்

ஏற்கெனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வந்த பிரபாகர் ராவ் கும்பலுடன், 1970ஆம் ஆண்டு நாகேஸ்வர ராவ் இணைந்தார். அவர்களுடன் சேர்ந்து 15 ஆண்டுகள் வரை பல கொள்ளை சம்பவங்களில் அவர் ஈடுபட்டு வந்தார்.

ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் அவர்கள் பெரும் கொள்ளையில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தினர். ஆனாலும் அவர் ஒருமுறைகூட காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருந்ததால், அவரை சார்ந்தோர்கள் நாகேஸ்வர ராவ்வை ‘டைகர்’ (புலி) என அழைக்கத் தொடங்கினர்.

சில நேரங்களில் அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், அடுத்த சில தினங்களில் அவர் அங்கிருந்து தப்பித்து விடுவார்.

"1976ஆம் ஆண்டு நாங்கள் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டோம். அடுத்ததாக எங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருந்தனர். ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பாகவே தப்பித்துவிடுவேன் என நாகேஸ்வர ராவ் என்னிடம் கூறினார்.

அவர் கூறியதைப் போலவே தப்பித்தும் விட்டார். அப்போது தமிழ்நாடு காவல்துறை, நாகேஸ்வரராவ் உண்மையிலேயே ‘டைகர்’ தான் என்று என்னிடம் கூறினர்,” என்கிறார் பிரபாகர் ராவ்.

மொகெலா என மாற்றப்பட்ட ஸ்டூவர்ட்புரம்

கொள்ளை, ஆந்திரா, சினிமா

1980ஆம் ஆண்டு காலகட்டம் வரை, ஸ்டூவர்ட்புரம் கொள்ளையர்களின் புகழிடமாக இருந்தது. ஸ்டூவர்ட்புரத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக இணைந்து, பல இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஸ்டூவர்ட்புரம் பகுதிக்கு வருவதற்கே மக்கள் அச்சம் கொண்டிருந்தனர்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், 1984ஆம் ஆண்டு கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக தீர்வு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு பகுதிதான் ஸ்டூவர்ட்புரம். இதனால் நகரத்தில் எங்கு கொள்ளை சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பான்மையான சந்தேகம் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் மேல்தான் குவிந்து வந்தது.

1911 முதல் 1914க்கு இடைப்பட்ட காலத்தில், பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் இந்த பகுதியில் தங்க ஆரம்பித்து, ஸ்டூவர்ட்புரம் என்ற பெயரையும் உருவாக்கினர். 1913ஆம் ஆண்டு, அப்போதைய மெட்ராஸ் பிரஸிடென்ஸியின் உறுப்பினராக இருந்த ஹரால்ட் ஸ்டூவர்ட்டின் பெயரில் இந்தப் பகுதி உருவானது.

வேலையின்மையாலும் மற்ற சில காரணங்களாலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வந்த பல்வேறு நபர்களை ஒரே இடத்தில் வைத்து கண்காணிப்பதற்காக இந்த இடம் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் நாகேஸ்வர ராவ் கொள்ளைகளில் ஈடுபடத் துவங்கிய பின், ஸ்டூவர்ட்புரம் என்ற பெயரின் பிரபலம் மங்கத் துவங்கி, நாகேஸ்வர ராவ் என்ற பெயர் பிரபலமடைந்தது. ஏனென்றால் நாகேஸ்வர ராவ் அவரது கும்பலுடன் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த சம்பவங்களே மக்களிடம் அதிகமாகப் பேசப்பட்டு வந்தன. இது காவல் துறையினருக்கும் பெரும் சவாலாக அமைந்தது. அவர்களை நேர்மையான வழியில் மாற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாற்றங்களை ஏற்படுத்திய நாத்திக தம்பதியினர்

கொள்ளை, ஆந்திரா, சினிமா
படக்குறிப்பு, ஹேமலதா மற்றும் அவரது கணவர் லவாணம்

இந்தப் பகுதியில், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு கிறிஸ்துவத்தின் மத கருத்துக்களைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அது பெரிதாக எந்த பலனையும் அளிக்கவில்லை.

காவல்துறையினர் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து, சில தொண்டு நிறுவனங்களும் இந்த மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டன. அது சிறிய அளவில் மாற்றத்தை கொண்டுவர உதவின.

நாத்திக மையத்தின் நிர்வாகிகளான ஹேமலதா மற்றும் அவரது கணவர் லவாணம் ஆகியோரின் முயற்சி பலனளிக்கத் தொடங்கியது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, சன்ஸ்கர் என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள்தான், ஸ்டூவர்ட்புரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின.

அதுதான் ஸ்டூவர்ட்புரத்தின் இன்றைய தலைமுறையினரிடம் மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

பிரபாகர் ராவ் மற்றும் அவரது கூட்டாளிகளும்கூட ஹேமலதா மற்றும் லவாணம் ஆகியோர் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். 1970களுக்குப் பின், குறிப்பாக பங்கனப்பல்லி கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு இத்தகைய மாற்றங்கள் நிகழத் துவங்கின.

கொள்ளையர்கள் சிறையில் இருந்த காலகட்டத்திலும்கூட கடிதங்கள் மூலம் அவர்களிடம் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஹேமலதா மற்றும் லவாணம், மிகுந்த முயற்சி எடுத்து வந்தனர்.

கொள்ளை, ஆந்திரா, சினிமா

ஸ்டூவர்ட்புரத்தின் வரலாறு குறித்து ஆய்வு செய்த கொம்பல்லி சுந்தர், இதுகுறித்துக் கூறும்போது, ”கொள்ளையர்கள் சிறையிலிருந்து வெளியில் வந்த பின்னரும்கூட, அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் இருப்பதற்கான இடங்களையும் அளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அது இந்த விவகாரத்தில் நல்ல பலன்களை அளிக்கத் துவங்கியது,” என்று குறிப்பிடுகிறார்.

ஹேமலதா மற்றும் லவாணம் ஆகிய இருவரின் தொடர் நடவடிக்கைகள்தான் ஸ்டூவர்ட்புரத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியது. இதனால் பிரபாகர் ராவ் மற்றும் நாகேஸ்வர ராவ் கூட மாறிவிடுவார்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் அவர்களிடம் அத்தகைய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. குறிப்பாக, நாகேஸ்வர ராவ் தன்னுடைய கடந்த காலத்தில் செய்திருந்த மிகப்பெரும் கொள்ளை சம்பவங்கள், அவர் இயல்பான வாழ்க்கை சூழலுக்கு மாறுவதற்குத் தடையாக அமைந்தது. அவர் மீண்டும் மீண்டும் கொள்ளைகளில் ஈடுபடத் துவங்கினார். அதனால் கடைசியில் அவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இறந்தும் போனார்,” என்று கொம்பல்லி சுந்தர் விவரிக்கிறார்.

ஸ்டூவர்ட்புரத்தின் எல்லையில் இருக்கும் பிரம்மாண்ட நுழைவாயிலில், ஹேமலதா மற்றும் லவாணம் ஆகியோரின் பெயர்களை இன்று நாம் காணமுடியும்.

கொள்ளை வரலாற்றை மீண்டும் புரட்ட வேண்டாம்:

ஸ்டூவர்ட்புரத்தை மையப்படுத்தி இதற்கு முன்னால் பல சினிமா கதைகள் வந்திருக்கின்றன. கொள்ளையர்களின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து படம் தயாரிக்கும் பாலிவுட் கலாச்சாரத்தை, தற்போது தெலுங்கு சினிமா பின்பற்றி வருகிறது.

இதன் காரணமாகத்தான் தற்போது ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ திரைப்படமும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வம்சி கிருஷ்ணாவின் இயக்கத்தில், இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

நாகேஸ்வர ராவ்வின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகவுள்ளது, என்ற அறிவிப்பு வெளியானபோதே, ஸ்டூவர்ட்புரம் பகுதியில் வசித்து வரும் மக்களிடையே பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து பிரபாகர் ராவ் கூறும்போது, “இந்த திரைப்பட குழுவினர் என்னைத் தொடர்புகொண்டு பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். ஆனால் சினிமாவுக்காக இதற்குள் சில விஷயத்தைச் சேர்க்கத்தான் செய்வார்கள். ஆனால் வரலாற்றை மாற்றமாட்டார்கள் என்று நம்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.

ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் பிபிசியிடம் பேசுகையில், “நாங்கள் பள்ளிகளுக்குச் செல்லும்போது எங்களை அனைவரும் வித்தியாசமாகப் பார்த்து வந்தனர்.

எங்கள் பகுதியின் மீது தவறான பார்வை இருந்தது. ஆனால் சமீப காலங்களில் அது குறைந்து வருகிறது. இங்குள்ள நிறைய பேர், மேற்படிப்புகள் படித்து நல்ல வேலைகளில் உள்ளனர். இப்போது ஸ்டூவர்ட்புரத்தின் பழைய காயங்கள் ஆறிவிட்டன. இதன்மீது மீண்டும் எந்தவொரு சந்தேக நிலையும் ஏற்படக்கூடாது” என்று கூறுகிறார்.

”தற்போது, தான் ஐ.டி. துறையில் பணியாற்றி வருவதாகவும் இதுபோன்ற படங்கள் வருவதால், தங்கள் பகுதி மக்களின் மீது தவறான கண்ணோட்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும்,” ஷ்ரத்தா கவலையுடன் குறிப்பிடுகிறார்.

1990கள் வரை கொள்ளையர்களுக்கு புகழிடமாக அமைந்திருந்த ஸ்டூவர்ட்புரம், சமீப காலங்களில் பெருமளவு மாறியிருக்கிறது. ஸ்டூவர்ட்புரத்தின் இன்றைய இளைஞர்கள் படித்த பட்டதாரிகளாக இருக்கின்றனர். அனைவரும் வேலைக்குச் செல்கின்றனர். குற்றச் சம்பவங்கள் அரங்கேறுவது அங்கே பெருமளவு குறைந்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: