47 ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை வழக்கில் மறுவிசாரணை; 87 வயது கைதியின் அரைநூற்றாண்டு போராட்டம்

47 ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை வழக்கில் மறுவிசாரணை

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், ஷைமா கலீல் & சைமன் ஃபிரேசர்
    • பதவி, பிபிசி நியூஸ்

ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மறுவிசாரணை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி, தற்போது 87 வயதாகும் இவாவோ ஹகமடா, உலகின் மிக நீண்டகால மரண தண்டனைக் கைதி ஆவார்.

1966 இல் தனது முதலாளி, அவரது மனைவி, அவர்களது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்காக 1968 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான அவர், விசாரணையின் போது தாக்கியதாக ஒப்புக்கொண்டார். பின்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை வாபஸ் பெற்றார்.

ஜப்பான் நீதிமன்றங்கள் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலங்களை நம்பியிருப்பதை உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ளன. காவல்துறையினர் கட்டாயப்படுத்தி வாக்குமூலங்களைப் பெறுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது நடத்தப்பட இருக்கும் மறுவிசாரணையில், கொலையாளி அணிந்திருந்ததாகக் கூறப்படும் ஆடைகளில் காணப்படும் இரத்தக் கறைகளின் டிஎன்ஏ ஹகமடாவுடன் பொருந்துகிறதா என்பதை நீதிபதிகள் முடிவு செய்வார்கள்.

அவரது வழக்கறிஞர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும், ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என்றும் வாதிட்டனர்.

47 ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை வழக்கில் மறுவிசாரணை

பட மூலாதாரம், AFP

1966- இல் டோக்கியோவின் மேற்கே ஷிசோகாவில் உள்ள சோயாபீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் தனது முதலாளி மற்றும் அவரது குடும்பத்தினரை கொன்றதாக ஹகமாடா குற்றம் சாட்டப்பட்டார்.

2014 ஆம் ஆண்டில், ஹகமடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஒரு மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறு விசாரணைக்கு அனுமதி அளித்தது. புலனாய்வாளர்கள் ஆதாரங்களை ஜோடித்திருக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது.

ஆனால் இந்த உத்தரவை டோக்கியோ உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து ஹகமாடா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மறு விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டது.

"நான் இந்த நாளுக்காக 57 ஆண்டுகளாக காத்திருந்தேன், அது வந்துவிட்டது" என்றார் ஹகமடாவின் சகோதரி ஹிடெகோ. இவர் தனது சகோதரருக்காக பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்தார்.

"இறுதியாக என் தோள்களில் இருந்து ஒரு பாரம் இறக்கப்பட்டது"

47 ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை வழக்கில் மறுவிசாரணை

பட மூலாதாரம், AFP

பல தசாப்தங்களாக சிறையில் இருந்த அவரது மனநலம் மோசமடைந்துள்ளதாக இவாவோ ஹகமடாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அமெரிக்காவைத் தவிர, இன்னும் மரண தண்டனையைப் பயன்படுத்தும் ஒரே பெரிய தொழில்மயமான ஜனநாயக நாடு ஜப்பான் மட்டுமே.

"நீதியை வழங்குவதற்கான நீண்ட கால காத்திருப்பு" எனக் கூறியுள்ள அம்னெஸ்டி அமைப்பு மறுவிசாரணையை வரவேற்றது.

"ஹகமடாவின் தண்டனை ஒரு கட்டாய 'ஒப்புதல் வாக்குமூலத்தின்' அடிப்படையிலானது, அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மற்ற ஆதாரங்கள் குறித்து தீவிர சந்தேகம் உள்ளது" என்று அம்னெஸ்டி ஜப்பான் இயக்குநர் ஹிடேகி நககாவா கூறினார்.

ஒரு சிறப்பு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டால், மறுவிசாரணைக்கான நடைமுறை பல ஆண்டுகள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இந்த முறைக்கு எதிராக வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

"47 வருட சிறைவாசத்துக்குப் பிறகு, 87 வயதைக் கடந்து, மன மற்றும் உடல் நிலைகளால் அவதிப்படும் ஹகமடாவுக்கு தீர்வு தர மேலும் தாமதிக்க முடியாது" என்று ஜப்பான் ஃபெடரேஷன் ஆஃப் பார் அசோசியேஷன்ஸ் தலைவர் மோட்டோஜி கோபயாஷி கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: