"கொன்றால் பாவம்" - கன்னடம், தெலுங்கில் பெரிதும் வரவேற்கப்பட்ட படம் தமிழில் வெற்றி பெறுமா?

பட மூலாதாரம், TWITTER/Einfach studios
கன்னடத்தில் பிரபல இயக்குநராகத் திகழும் தமிழரான தயாள் பத்மநாபன் அங்கே 'ஆ கரால ராத்ரி' என்ற பெயரிலும், தெலுங்கில் ’அனகனகா ஓ அதிதி’ என்றும் எடுத்த படத்தை தமிழில் 'கொன்றால் பாவம்' என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார்.
சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர்களுக்கு அல்லாமல் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படம் இது. தருமபுரி அருகே ஒரு கிராமத்தில் 1980களில் முழுக்க முழுக்க ஒரே வீட்டில் நடப்பதாகவே கதை நகர்கிறது. அந்த வீட்டில் சார்லி - ஈஸ்வரி ராவ் தம்பதி, ஒரே மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரைக் கொண்ட சிறிய குடும்பம் வசிக்கிறது.
வறுமையாலும் கடன் சுமையாலும் தத்தளிக்கும் அந்தக் குடும்பம், தங்களது வீட்டில் ஒரு நாள் இரவு தங்க அனுமதி கேட்கும் சந்தோஷ் பிரதாப்பை கொன்று அவரிடம் இருக்கும் பணம், நகைகளை அபகரிக்க திட்டம் போடுவதும், அது நடந்ததா? என்பதுமே 'கொன்றால் பாவம்' படம்.
பெரும்பகுதி கதை ஒரே இடத்தில் நகர்வது பலவீனம் என்று தினத்தந்தி நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது. "படத்தின் மிகப் பெரிய பலமே திரைக்கதையும் வசனங்களும்தான். இயக்குனர் தயாள் பத்மநாபன் கிரைம், திரில்லர் கதையை போரடிக்காமல் இயக்கியிருப்பது சிறப்பு. சென்டிமென்ட், காதல், துரோகம் என எல்லா உணர்வுகளையும் சமமாகக் கலந்து கொடுத்து ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார்" என்று அந்த கூறியுள்ளது.
ஆர்ப்பாட்டமில்லாத, அழுத்தமான, அதிர்ச்சியான ஒரு திரைப்படம் இது என்று தினமலர் நாளிதழ் விமர்சனம் வெளியிட்டுள்ளது. பணம், பொன், மண் மீதான பேராசை ஒருவரது வாழ்க்கையை எப்படி மாற்றும் எனபதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம் என்கிறது அந்த விமர்சனம்.
வரலட்சுமி சரத்குமார் முன்பே கதாநாயகியாகப் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது முக்கிய படங்களில் முதல் படமாகச் சொல்லும் அளவுக்கு இந்தப் படம் அமைந்திருக்கிறது என்று தினமலர் பாராட்டியுள்ளது.

பட மூலாதாரம், TWITTER/Einfach Studios
"சார்லி, ஈஸ்வரி ராவ் ஆகிய இருவரது நடிப்பிலும் அனுபவம் பேசுகிறது, சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரம் மீது நமக்கு பரிதாபம் வருவதே அவரது நடிப்பிற்குக் கிடைத்த வெற்றி" என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே ஒரு வீட்டிற்குள் இரவு நேரக் காட்சிகளுக்கான ஒளி அமைப்பில் தனி கவனம் செலுத்தி ஓர் இயல்புத் தன்மையை உருவாக்குவதில் ஒளிப்பதிவாளர் செழியன் வெற்றி பெற்றிருப்பதாக தினமலர் விமர்சனம் கூறுகிறது.
படம் முழுக்க பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கிரைம் திரில்லர் படத்தை இயக்குநர் தயாள் பத்மநாபன் கொடுத்திருந்தாலும், சில இடங்களில் படம் மந்தமாக நகர்வதும் அதீத உரையாடல்களும் சற்று அயர்ச்சியைத் தருவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் கூறுகிறது.
சாம் சி.எஸ்.சின் இசை தொடக்கத்தில் படத்தின் கதையாடலுக்குப் பெரிதும் உதவினாலும் இரண்டாம் பாதியில் சில நேரங்களில் பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறடிப்பதாக உள்ளது என்கிறது அந்த விமர்சனம். படத்தின் வண்ணங்களும், திண்ணை வீடும் நம்மை 1980களுக்கே அழைத்துச் செல்கின்றன என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
படத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தின் நகர்வில் நாம் அவற்றை மறந்து விடுகிறோம் என்று கல்கி இணைய இதழ் கூறியுள்ளது. "படத்தில் ஒரு முதிர் கன்னியின் கோபத்தையும் ஏக்கத்தையும் மிகப் பிரமாதமாக நடித்துக் காட்டியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
ஒரு தாய்மைக்கே உண்டான அன்பையும் பரிதவிப்பையும் அழகாக வெளிபடுத்தி உள்ளார் ஈஸ்வரி ராவ். ஒரு பொறுப்பற்ற தந்தையை அப்படியே கண் முன் நிறுத்துகிறார் சார்லி. மிடுக்கான, அலட்டல் இல்லாத நடிப்பில் பொருந்திப் போகிறார் சந்தோஷ் பிரதீப்," என்று அந்த இதழ் விமர்சனம் வெளியிட்டுள்ளது.
"பேராசை பெருநஷ்டம் மட்டுமல்ல பெரிய அழிவு என்பதைக் காட்யுள்ளது கொன்றால் பாவம். கொன்றால் பாவம் - வாழ்க்கைப் பாடம்" என்பது அதன் ஒரு வரி விமர்சனம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












