'அயோத்தி' பட கதையை திருடினாரா எஸ்.ரா? பிரபல எழுத்தாளர்கள் சர்ச்சை புகார் - முழு பின்னணி

பட மூலாதாரம், SOCIAL MEDIA
- எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் திரைப்படம் அயோத்தி. இப்படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆனால் இந்த படத்தின் கதை மீதான உரிமை குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
எழுத்தாளர் மாதவராஜ், எழுத்தாளர் நரன், சங்கர் தாஸ் ஆகியோர், இந்த படத்தினுடைய கதை எஸ்.ரா எழுதியது அல்ல என்பதற்கான ஆதாரங்களை தங்களது முகநூல் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் எஸ்.ராமாகிருஷ்ணன் இது தன்னுடைய கதைதான் என கூறுகிறார். இந்த சர்ச்சையின் பின்னனி என்ன?
இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றும் ஒரு வட இந்திய குடும்பம், தீபாவளியையொட்டி புனித யாத்திரையாக அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகிறது. ஆனால் வந்த இடத்தில் ஏற்படும் திடீர் விபத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழக்கிறார். ஊர் பேர் தெரியாத இடத்தில் தவிக்கும் அவர்கள் இறந்தவரின் சடலத்துடன் எப்படி மீண்டும் அயோத்தி திரும்பினார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.
எழுத்தாளர் மாதவராஜ் இந்த படத்தின் கதை தன்னுடையது என கூறுகிறார். ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டே தான் இந்த கதையை எழுதியதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"அழுவதற்கு கூட திராணியற்றவர்கள்" என்ற தன்னுடைய கதையை அப்படியே எடுத்து, எஸ்.ரா. இந்த படத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை மாதவராஜ் முன்வைத்துள்ளார்.
அதேபோல் எழுத்தாளர் நரன், `வாரணாசி` என்ற தன்னுடைய சிறுகதையிலிருந்து சில கதாபாத்திரங்களையும், சில காட்சிகளையும் இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மற்றொருபுறம், ”இந்த படத்தின் திரைக்கதை முழுவதையும் தான் எழுதியதாகவும், ஆனால் இந்த படத்தில் தனக்கான அங்கீகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை” என்றும் கூறி சங்கர் தாஸ் என்பவர் இந்த படத்தின் இயக்குநர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நரன் மற்றும் சங்கர் தாஸ் ஆகிய இருவருமே மாதவராஜுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி படத்தின் சர்ச்சை குறித்து பேசுவதற்காக சம்பந்தபட்ட நபர்களை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
"கதை திருடுவது அவரது வழக்கம்"

பட மூலாதாரம், FACEBOOK
”இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளாக மற்றவர்களின் கதைகளை திருடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் எழுத்தாளர் எஸ்.ரா” என்கிறார் எழுத்தாளர் நரன்.
இது குறித்து பேசிய அவர், ”2017ஆம் ஆண்டு நான் 'வாரணாசி' என்ற கதையை எழுதியிருந்தேன். என்னுடைய இந்த கதைக்கான உரிமையை இயக்குநர் ராம் பெற்றிருக்கிறார். ஆனால் சமீபத்தில் அயோத்தி படத்தின் ட்ரைலர் வெளியானபோது, அதில் என்னுடைய வாரணாசி கதையின் சாயல் தெரிந்தது. நண்பர்கள் பலரும் இதேபோல் உணர்ந்ததாக என்னிடம் கூறினார்கள். எனவே நான் அப்போதே இந்த படத்தின் தயாரிப்பாளரையும், இயக்குநரையும் தொடர்பு கொண்டு பேசினேன்.
"ட்ரைலரில் என்னுடைய கதையின் சாயல் இருக்கிறது, இந்த படத்தின் கதையை நான் தெரிந்துகொள்ளலாமா?" என்று நான் அவர்களிடம் முறையிட்டேன். அப்போது, இந்த கதையை இயக்குநர்தான் கொண்டு வந்தார். இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தயாரிப்பாளர் கூறினார்.
இயக்குநரோ,`முடிந்தால் வழக்கு போடுங்கள். அது படத்திற்கு நல்ல விளம்பரமாக அமையும்` என்று மிகவும் கர்வத்துடன் பேசினார். வழக்கு தொடர்வது என்னுடைய நோக்கம் அல்ல என்பதை நான் பொறுமையாக எடுத்துக்கூறியும் அவர் எனக்கு சரியாக பதிலளிக்கவில்லை.
அதேபோல் எழுத்தாளர் எஸ்.ராவையும் நான் அப்போதே தொடர்புகொண்டு என்னுடைய சந்தேகத்தை முன்வைத்தேன்.
அதற்கு அவர், `பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே சினிமாவுக்கென பிரத்யேகமாக நான் உருவாக்கிய கதை இது` என்று கூறினார். அப்படியென்றால் எப்போது எழுதினீர்கள்? அந்த ஒரிஜினல் காப்பியை நான் பார்க்கலாமா என்று கேட்டதற்கு, "சினிமாவுக்காக நான் உருவாக்கும் கதைகளை எழுதி வைக்கும் பழக்கம் எனக்கில்லை" என்று அவர் கூறினார்.
அதிலிருந்தே அவருடைய தடுமாற்றத்தை என்னால் உணர முடிந்தது.

பட மூலாதாரம், FACEBOOK
இப்போது படம் வெளியான பிறகு, நான் அந்த படத்தை சென்று பார்த்தேன். என்னுடைய கதையிலிருந்த சில கதாபாத்திரங்களை எடுத்து அப்படியே இந்த படத்திற்கான சில கதாபாத்திரங்களாக வடிவமைத்திருக்கிறார்கள். அது தவிர படத்தில் உள்ள நான்கு காட்சிகள் என்னுடைய கதையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன.
"இப்போதுதான் எனக்கு மற்றொரு விஷயமும் தெரிய வந்துள்ளது. என்னுடைய கதையிலிருந்து 20 சதவீதமும், எழுத்தாளர் மாதவராஜின் கதையிலிருந்து 70 சதவீதமும் எடுத்து, அயோத்தி திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற படைப்பாளர்களின் கதைகளை திருடுவது எஸ்.ராவுக்கு புதிதல்ல. அவர் பல ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகளை செய்து வருகிறார். எனவே அவரை இப்போதாவது நிச்சயம் அம்பலப்படுத்த வேண்டும்,” என்கிறார் நரன்.
"ஆதரங்கள் உள்ளன"

பட மூலாதாரம், FACEBOOK
படத்தில் எழுத்து, இயக்கம் என மந்திர மூர்த்தியின் பெயர் மட்டுமே வருகிறது. ஆனால் இந்த படத்திற்கான முழு திரைக்கதையை எழுதியது நான்தான் என்கிறார் சங்கர் தாஸ்.
இது குறித்து அவர் பிபிசியிடம் பேசுகையில், "2018ல் அக்கறை புரடக்ஷன்ஸ், என்னும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதுவதற்காக என்னை தொடர்பு கொண்டார்கள். அந்த படத்திற்கு இயக்குநராக மந்திர மூர்த்தி அறிமுகமானார்.
அப்போதுதான் ‘திருநாள்’ என்ற தலைப்பில் எஸ்.ரா.வின் கதை ஒன்றை என்னிடம் கொடுத்து, அதன் அடிப்படையில் திரைக்கதை எழுதுமாறு கூறினார். பாட்னாவிலிருந்து தமிழகம் வரும் ஒரு இந்து குடும்பம், மதுரையிலிருந்து கார் மூலமாக ராமேஸ்வரம் செல்கிறது. அப்போது ஏற்படும் விபத்தில் ஒருவர் உயிரிழக்க, அவர்களை நம்மூரைச் சேர்ந்த இருவர் காப்பாற்றி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, மீண்டும் அந்த குடும்பத்தினரை அவர்களது ஊருக்கே அனுப்பி வைப்பதுதான் அந்த கதை.
இந்த கதையில் 'பாட்னா' என்று வருவதை 'அயோத்தி' என மாற்றியதே நான்தான். கிட்டதட்ட 8 மாதங்களாக நான் அந்த படத்திற்காக வேலை செய்து முழு திரைக்கதையையும் தயார் செய்து இயக்குநரிடம் கொடுத்தேன். திரைக்கதை எழுதியதற்காக வெறும் ஐம்பாதியிரம் ரூபாய் மட்டும் எனக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் Facebook வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Facebook குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Facebook பதிவின் முடிவு, 1
அதன்பின், சில காரணங்களால் அக்கறை புரொடக்ஷன்ஸ் இந்த படத்திலிருந்து விலகியதால், நானும் வேறொரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டேன். அதன்பின் இந்த படம் என்ன ஆனது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. தற்போது நான் எழுதிய திரைக்கதையை அப்படியே பயன்படுத்தி இந்த படம் வெளியாகியுள்ளது. ஆனால் அதில் எனக்கான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. எனது பெயர் படத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த படத்தின் இயக்குநர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்கிறார் சங்கர் தாஸ்.
இந்த படம் மாதவராஜின் கதை என எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து அவர் பேசுகையில், “ மாதவராஜின் `அழுவதற்கு கூட திராணியற்றவர்கள்` என்ற கதையை முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். அதை படித்தபோது, முதன்முதலில் எஸ்.ராவின் கதையென கூறி என்னிடம் கொடுக்கப்பட்ட கதையும், மாதவராஜின் கதையும் ஒரே மாதிரியாக இருப்பது தெரிந்தது. கதைகள் ஒரேபோன்று இருப்பது கூட இங்கு பிரச்னை அல்ல. ஆனால் மாதவராஜின் கதையும், என்னிடம் கொடுக்கப்பட்ட எஸ்.ராவின் கதையும் வரிக்கு வரி ஒரேபோல் இருந்தன. 70 சதவீதம் இரண்டு கதைகளும் ஒரேபோல ஒத்துப்போகின்றன” என்று கூறுகிறார்.
"தேவை அங்கீகாரம் மட்டுமே"

பட மூலாதாரம், FACEBOOK
“2011 ஆம் ஆண்டு பிகாரைச் சேர்ந்த ஒரு குடும்பம் ராமேஸ்வரத்தில் விபத்தில் சிக்கியதாக எனக்கு தகவல் வந்தது. நான் கிராம வங்கியில் பணியாற்றுகிறேன். விபத்தில் சிக்கியவரும் பிகார் கிராம வங்கியில் பணியாற்றுபவர். எனவே அதன்மூலமாக பிகார் கிராம வங்கியில் பணியாற்றும் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, சம்பவங்களை விளக்கி அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். நான் அப்போது வெளியூரில் இருந்ததால், எங்களது சங்கத்தை சேர்ந்த தோழர்கள் சாமுவேல் ஜோதிகுமார் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோரிடம் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டு அங்கு அனுப்பி வைத்தேன்.
ஊர், பேர் தெரியாத இடத்திற்கு வந்து, விபத்தில் சிக்கி, யாரிடமும் சொல்லி அழுவதற்கு கூட வழி இல்லாத நிலையில் அந்த குடும்பத்தினர் இருந்தனர். எனவேதான் ‘அழக்கூட திராணியற்றவர்கள்’ என்ற தலைப்பில் இந்த சிறுகதையை எழுதி, சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களிலேயே எனது வலைப்பக்கத்தில் பதிவேற்றினேன்” என்று பிபிசியிடம் பேசத் துவங்குகிறார் எழுத்தாளர் மாதவராஜ்.
இந்தக் கட்டுரையில் Facebook வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Facebook குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Facebook பதிவின் முடிவு, 2

பட மூலாதாரம், FACEBOOK
அயோத்தி படத்தின் கதை குறித்து பேசும்போது, “ எனக்கு முதலில் இந்த படம் குறித்து எதுவும் தெரியாது. நண்பர்கள்தான் இது உங்களது கதை போல தெரிகிறது என்று கூறினார்கள். ஊடக விமர்சனங்களையும், சமூக வலைதளத்தில் இந்த படம் குறித்த விமர்சனங்களையும் பார்த்தபோது எனது கதை போலவே தோன்றினாலும் நான் யாரையும் சந்தேகப்படவில்லை. ஆனால் நண்பர்கள் இந்த படத்தை பார்க்க சொன்னதால், படத்தைச் சென்று பார்த்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இது என்னுடைய கதை. இதை எஸ்.ரா எழுதியதாக கேள்விப்பட்டதும் கூடுதல் அதிர்ச்சியானது.
நண்பர் சாமுவேல் ராஜ் அயோத்தி படம் குறித்து எஸ்.ராவிடம் பேச முற்பட்டபோது, அவரிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறார் எஸ்.ரா. அதன்பின் நானும் அவரிடம் பேச முயன்றேன். எனக்கும் அவர் பதிலளிக்கவில்லை. அப்போதுதான் எனக்கு கோபம் வரத் தொடங்கியது. இத்தனைக்கும் அவரும், நானும் ஒரே ஊர்காரர்கள். எனது கதையை எடுத்திருந்தால் கூட, என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது. எஸ்.ராவின் இதுபோன்ற செயல்பாடுகள்தான் அவர் மேல் ஏதோ தவறு இருக்கிறது, அவர் பக்கம் நேர்மை இல்லை என்பதை உறுதி செய்கிறது” என்கிறார் மாதவராஜ்.
”நாங்கள் பணத்திற்காக குரல் எழுப்பவில்லை. எங்களுக்கான அங்கீகாரத்தைதான் கேட்கிறோம்” என்கிறார் அவர்.
குற்றச்சாட்டுகளை மறுக்கும் எஸ்.ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம், FACEBOOK
”நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கதையை நான் உருவாக்கினேன். படத்திலும் இந்த கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று போடுகிறார்கள். எனவே எனது அயோத்தி திரைப்படக் கதையின் மீது எவர் உரிமை கோரினாலும் அதை நான் உறுதியாக மறுக்கிறேன்” என பிபிசி தமிழிடம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அயோத்தி பட கதை சர்ச்சை குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசிய எஸ்.ரா, "ஒரு வட இந்திய குடும்பம் விபத்தில் சிக்கிய போது உதவி செய்த தகவல்களை எனக்கு தந்தார் மதுரையைச் சேர்ந்த நண்பர் ஒருவர். அவர் கொடுத்த விரிவான தகவல்களைக் கொண்டே இக்கதையை எழுதினேன். அயோத்தி படத்தில் அவருக்கு முறையாக நன்றி சொல்லியிருக்கிறார்கள். படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் திரைக்கு ஏற்றபடி மாற்றம் செய்ய விரும்பிய போது கதையில் நிறைய மாற்றங்கள் செய்து கொடுத்திருக்கிறேன். அதன் இறுதி வடிவமே இன்றுள்ள திரைப்படம். வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தை வைத்து தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, என் நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கத்துடன் அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
"செய்தி வேறு, கதை வேறு. கதையில் உண்மையுடன் கற்பனை கதாபாத்திரங்கள் இணைந்து படைப்பாளியின் கலைத்திறனால் புனைவாகிறது. இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு போல சாலை விபத்து மற்றும் குற்ற செய்திகளுக்கு யாரோ உரிமை கோரினால் எந்தப் படைப்பாளராலும் எதையும் எழுத முடியாது” என்றும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
அயோத்தி பட சர்ச்சை குறித்து கருத்து கேட்பதற்காக அப்படத்தின் இயக்குநர் மந்திர மூர்த்தியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, ”இது குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை. ஒரு வாரத்திற்கு பின் நானே முன்வந்து நடந்த விஷயங்களை ஊடகங்களிடம் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












