"வடிவேலுவை வலையில் சிக்க வைத்தது எப்படி?" - போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக கைதான ஹரிஷ் வாக்குமூலம்

அண்ணா பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், Twitter/iachrc

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில், இந்த விழாவை நடத்திய அமைப்பைச் சேர்ந்த இருவரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த மோசடியை எப்படித் திட்டமிட்டு நடத்தினர் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.

பேச்சுப் போட்டியில் வென்றதற்காகத் தனக்குப் பரிசு வழங்கப்பட்டதை வைத்தே கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் முடிவுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளதாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் கைது செய்யப்பட்ட ஹரிஷ்.

எப்படி கைது செய்யப்பட்டனர்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதாக 'சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்' என்ற அமைப்பின் மீதும் அதன் நிறுவனர் மீதும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது.

இதுபோல முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் தரப்பிலும் தனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக ஒரு புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் இந்த அமைப்பின் நிறுவனர் ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளி குட்டி ராஜா ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

ஹரிஷ் தலைமறைவாக இருந்த நிலையில், டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், "மத்திய அரசின் அனுமதியோடு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்வேன்" எனப் பேசியிருந்தார்.

காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் எனக் குறிப்பிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவரைக் கைது செய்யும் முனைப்பில் காவல்துறை தீவிரமாக இறங்கியது.

ஹரிஷ் வெளியிட்ட வீடியோவின் ஐ.பி. முகவரி மற்றும் அது பதிவான செல்போன் டவர் அடிப்படையில் அவரின் இருப்பிடம் குறித்த தகவலை காவல்துறையினர் அறிந்து கொண்டனர்.

பின்னர் ஆம்பூர் அருகே குட்டி ராஜாவின் உறவினர் வீட்டில் இருந்தபோது, கோட்டூர்புரம் காவல்துறையினர் ஹரிஷ் மற்றும் அவருடைய கூட்டாளி மகராஜன் என்ற குட்டி ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

காவல்துறை தீவிர விசாரணை

அண்ணா பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், Twitter/iachrc

காவல்துறையினரின் விசாரணையில் இருக்கும் ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பொறியியல் பட்டதாரியான ஹரிஷ், சென்னை பல்லாவரத்தில் உள்ள கல்லூரியில் கடந்த 2020ஆம் ஆண்டு படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரி நாட்களில் சிறந்த மேடை பேச்சாளராக இருந்த ஹரிஷ், ஒரே நேரத்தில் 100 தலைப்புகளின் கீழ் வேகமாகப் பேசக்கூடிய ஆற்றல் மிக்க நபராக இருந்துள்ளார்.

இதற்காக தனியார் நிறுவனம் ஒன்று இவருக்குச் சிறந்த பேச்சாளருக்கான பட்டத்தை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் ஹரிஷ் தானும் இது போன்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பட்டங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக பலரிடம் விசாரித்து, இணையத்தில் இருந்து கிடைத்த தகவல்களை மூலமாக வைத்து 'சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்' (international Anti-Corruption and Human Rights Council) என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். இதற்காக சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஒர் அலுவலகத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்த அமைப்பின் மூலமாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் திட்டமிட்டுள்ளார் ஹரிஷ். தனது அமைப்பின் மீது நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலும் தனது அமைப்பின் பெயரில் கணக்குகளைத் தொடங்கி, அதில் மத்திய அரசின் இலச்சினை, பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் படங்களைப் பகிர்ந்து வந்தார்.

இந்த அமைப்பைத் தொடங்கிய பின்னாளில், தனியார் தொலைக்காட்சியின் PRO (செய்தித் தொடர்பாளர்) ஆக வேலை பார்த்து வந்த மகாராஜன் என்ற குட்டி ராஜா என்ற நபரின் நட்பு ஹரிஷுக்கு கிடைத்தது. இவரின் உதவியுடன் சினிமா வட்டாரத்தில் உள்ள பிரபலங்களைத் தொடர்புகொண்டு கௌரவ டாக்டர் பட்டம் குறித்துக் கூறியுள்ளார் ஹரிஷ்.

தொடக்கத்தில் சினிமா துணை நடிகர்களை அழைத்து வந்து பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து சாதாரண மக்களுக்கும் பட்டங்களை இவர் வழங்கியிருக்கிறார். 2021ஆம் ஆண்டு இரண்டு முறையும் 2022ஆம் ஆண்டு இரண்டு முறையும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் போலவே கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியை இவரது அமைப்பு நடத்தியுள்ளது. இதன்மூலமாக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை கௌரவ டாக்டர் பட்டத்தை இந்த அமைப்பு வழங்கியுள்ளதாக காவல்துறையிடம் இருவரும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு இவரின் அமைப்பு வழங்கிய போலி கௌரவ டாக்டர் பட்டத்தை இசையமைப்பாளர் இமான், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோரும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சினிமா பிரபலங்களுக்கு டாக்டர் பட்டத்தை பணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் வழங்கிவிட்டு, புகழுக்காக டாக்டர் பட்டம் பெற விரும்பும் நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்தப் பட்டத்தை வழங்கி வந்துள்ளதாக காவல்துறை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். பட்டங்களைப் பெற சினிமா பிரபலங்கள் வருவதால் இவர் மீதும், அந்த பட்டத்தின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

சாதாரண நபர்களுக்கு போலி டாக்டர் பட்டத்தை வழங்க 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை ஹரிஷ் பெற்றுக் கொண்டு பட்டங்களை வழங்கியுள்ளதாக காவல்துறையின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக நடத்திய நிகழ்ச்சிக்கு டாக்டர் பட்டங்களை வழங்க, மூன்று லட்சம் வசூல் செய்து அதில் இரண்டு லட்சம் செலவு செய்து நிகழ்ச்சியை நடத்தியாக ஹரிஷ் கூறியுள்ளார் என காவல்துறை தெரிவித்தது.

போலி பதக்கம், சான்றிதழ்

அண்ணா பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், iachrc

காவல்துறை நடத்திய தொடர் விசாரணையின் மூலம், ஹரிஷின் அலுவலகத்தில் இருந்து ஒரு கம்ப்யூட்டர், ஏராளமான கௌரவ டாக்டர் பட்டங்கள், பரிசு கேடயங்கள், 96 பதக்கங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இன்டர்நெட்டில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களின் உதவியுடன் தனது அமைப்பு கொடுக்கும் பட்டங்களை அவர் வடிவமைத்தாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த ஓய்வுப் பெற்ற நீதிபதியின் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி அனுமதி பெற்றுள்ளார் என்பதும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வேறு ஒரு நபருக்கு வழங்கிய வாழ்த்து மடலில் இருந்து, அவரது கையெழுத்தை தனியாக பிரித்தெடுத்து அதை பயன்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிபதியே இடம் வழங்க அனுமதி கோருவது போல கடிதத்தை அனுப்பி இருக்கிறார்.

ஓய்வுப் பெற்ற நீதிபதி என்ற அடிப்படையில் அந்த கடிதத்தை ஏற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

இது போன்ற போலி கௌரவ டாக்டர் பட்டத்தை தான் மட்டுமல்லாது, பல அமைப்புகளும் வழங்கி வருவதாகவும் காவல்துறையினரிடம் ஹரிஷ் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது வரை ஹரிஷ் பணம் பெற்றுக் கொண்டு போலி டாக்டர் பட்டம் கொடுத்து ஏமாற்றியதாக யாரும் புகார் அளிக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பின்னணி என்ன?

அண்ணா பல்கலைக்கழகம்

பிப்ரவரி 26ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, தொலைக்காட்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், யுடியூப் பிரபலங்களான கோபி-சுதாகர் உள்ளிட்ட பலருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் விருது வழங்கப்பட்டது. இதனால் அண்ணா பல்கலைக்கழகமே இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியதுபோன்ற பிம்பத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியது.

ஆனால் இந்த நிகழ்ச்சியை 'சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், தங்களுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தது அண்ணா பல்கலைக்கழகம்.

இந்thap புகாரில் அடிப்படையிலேயே காவல்துறை ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளியை தற்போது கைது செய்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: