அயோத்தி - மதம் கடந்து மனிதத்தை உயர்த்திப் பேசும் திரைக்கதை வெற்றி பெற்றதா?

அயோத்தி திரை விமர்சனம்

பட மூலாதாரம், M.Sasikumar/Twitter

அயோத்தி, அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம். இயக்குநர் சசிகுமார் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் படம் அவருடைய பெயர் சொல்லும் அளவுக்கு உள்ளதா?

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், போஸ் வெங்கட், பிரீத்தி அஸ்ராணி, அஞ்சு அஸ்ராணி, யஷ்பால் ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

அயோத்தியில் இருந்து தீவிரமான இந்து குடும்பம் ஒன்று ராமேஸ்வரத்திற்கு தீபாவளியை ஒட்டி புனித யாத்திரைக்கு வருகிறது. வந்த இடத்தில் ஏற்படும் திடீர் விபத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழக்கிறார்.

ஊர் பேர் தெரியாத இடத்தில் தவிக்கும் அவர்கள் இறந்தவரின் சடலத்துடன் எப்படி மீண்டும் அயோத்தி திரும்பினார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தப் படம் குறித்து ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தி என்றதும் என்னென்ன நினைவுக்கு வரக்கூடுமோ அவற்றை ஒட்டியே, ஆனால் மாறாக அற்புதமான கதை ஒன்றைக் கட்டியெழுப்பியுள்ளார்கள் என்று தினமணி நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது.

மிக மோசமானவராகவும் மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கும் ஒருவரை, ஒரு பயணம் எப்படி மாற்றுகிறது என்பதே ‘அயோத்தி’ திரைப்படத்தின் ஒரு வரிக் கதை.

அயோத்தியில் வசிக்கும் பல்ராமுடைய குடும்பம் மிகுந்த மத நம்பிக்கைகளைக் கொண்டது. பல்ராமாக யஷ்பால் ஷர்மா நடித்துள்ளார். அவர் மிகுந்த மத நம்பிக்கை கொண்டவராகவும் குடும்பத்தினர் மீது பாசமே இல்லாமல் மோசமாக நடந்து கொள்வதுமாக இருக்கிறார்.

இவர் தன்னுடைய மனைவி, மகள், மகனுடன் புனித யாத்திரையாக ராமேஸ்வரம் கிளம்பிச் செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு விபத்திற்குப் பிறகு இந்தப் பயணத்தில் சசிகுமாரும் புகழும் இணைந்துகொள்ளும் நிலைமை ஏற்படுகிறது.

அதற்குப் பிறகு அதில் என்ன நடக்கிறது, இதில் சசிகுமாரும் புகழும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன, பல்ராம் தனது தவறுகளை உணர்ந்தாரா என்பதுதான் அயோத்தி திரைப்படத்தின் மீதிக் கதை.

“ஒரு குடும்பம் மேற்கொள்ளும் பயணம், அதில் முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள் இணைவது என்ற இந்தக் களத்தின் மூலம் ஒரு சின்ன மெசேஜ் என்று மிக எளிமையான ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மந்திரமூர்த்தி.

ஒரே நாளில் எப்படி இவ்வளவும் செய்ய முடியும் என்று நம்மை யோசிக்கவிடாத அளவுக்கு, உணர்ச்சிகரமான காட்சிகளை வைத்து கதையை நகர்த்தியிருந்த விதம் சிறப்பு,” என்று புதிய தலைமுறை இணையதளம், அயோத்தி படம் குறித்து குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரக்கணக்கான கதைகள் வந்துள்ளன. ஆனால், இந்த மாதிரியான ஒரு கதை இதுவரை வந்ததில்லை என்று தாராளமாகச் சொல்லலாம்,” என்று தினமலர் விமர்சனம் வழங்கியுள்ளது.

மேலும், ஊர் விட்டு ஊர் வந்து விபத்தில் உயிரிழக்கும் பெண்ணின் உடலை, அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி மிகுந்த சிரமங்களுக்கு இடையே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஓர் உதவிகரமான மனிதனின் கதைதான் ‘அயோத்தி’ என்றும் தினமலர் தெரிவித்துள்ளது.

அயோத்தி சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், M.Sasikumar/Twitter

முரட்டுத்தனமான, பாசமற்ற மனிதராக ஆரம்பத்தில் வரும் யஷ்பால் ஷர்மா செய்த பிரச்னையால் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் அவர்கள் செல்லும் கார் விபத்திற்கு உள்ளாகிறது. கார் டிரைவரின் நண்பராக வரும் சசிகுமார், இறந்த பெண்ணின் உடலை அனுப்பி வைக்க களத்தில் இறங்குகிறார். அதற்காகப் பல சிக்கல்களை அவர் சந்திக்க வேண்டியிருக்கிறது.

“தனது மனைவியின் மரணத்தால் பாசமற்ற, முரட்டுத்தனமான, கோபக்காரரான யஷ்பால் ஷர்மா எப்படி மாறுகிறார் என்பதும் ஒரு மனிதன் மதங்களைக் கடந்து எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய முடியும் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள இரண்டு அருமையான பாடங்கள். இயக்குநர் ஒரு நெகிழ்வான, இன்றைய சமூகத்திற்குத் தேவையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்,” என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது.

“அறிமுக இயக்குநரான மந்திரமூர்த்தி, படம் பார்ப்பவர்களை இறுதி வரை காட்சிகளுக்குள் இறுக்கமாகப் பிடித்து வைக்கும் சக்தி வாய்ந்த கைவண்ணம் கொண்டுள்ளார்,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பாராட்டியுள்ளது

நடிப்பைப் பொருத்தவரை ஷிவானி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ப்ரீத்தி அஸ்ராணி கவனம் ஈர்ப்பதாக புதிய தலைமுறை இணையதளம் பாராட்டியுள்ளது. படம் முழுக்க சீரியஸான கதாபாத்திரம், பல இடங்களில் கண் கலங்கியபடி அவர் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு படத்திற்கு வலு சேர்ப்பதாகத் தனது விமர்சனத்தில் புதிய தலைமுறை தெரிவித்துள்ளது.

அயோத்தி திரை விமர்சனம்

பட மூலாதாரம், Manthira Moorthy/Twitter

“இயக்குநர் படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு மோசமான, கொடூரமான கதாபாத்திரத்தைக் காட்டுகிறார் என்றால் அந்தக் கதாபாத்திரம் இறுதியில் ஒரு மாற்றத்தை எதிர்கொள்ளப் போகிறது என்பது வெளிப்படை. ஆனால், அந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதுதான் கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதை மந்திரமூர்த்தி மிக அழகாகக் காட்டியுள்ளார்,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், எதேச்சையாக உதவி செய்யப்போய் அதன் பிறகு தொடங்கும் சிக்கல்கள் எனக் கதையாகக் கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் ஒரு படமாகப் பார்க்கும்போது சில காட்சிகள் தொலைக்காட்சி சீரியலை பார்ப்பதைப் போல் அயர்ச்சியைக் கொடுப்பதாக புதிய தலைமுறை இணையதளம் விமர்சித்துள்ளது.

அதற்கு என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசையும் ஒரு காரணம் எனக் குறிப்பிடும் அதன் சினிமா விமர்சனம், அவரது இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும், பின்னணி இசை பல இடங்களில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே ஒலிப்பதாக விமர்சித்துள்ளது.

“படத்தில் சில நம்ப முடியாத காட்சிகள் இருக்கின்றன. லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. காவல் நிலையத்தில் வரும் பாடலைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல் சசிகுமாரின் பிளாஷ்பேக் காட்சிகளும் திரைக்கதைக்கு அவசியப்பட்டதாகத் தெரியவில்லை,” என்று தினமணி தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

அயோத்தி திரை விமர்சனம்

பட மூலாதாரம், N.R.Raghunanthan/Twitter

“தமிழ் படத்தில் இந்தி பேசும் சில கதாபாத்திரங்களை படம் முழுவதும் வைத்து, அதை தமிழ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் இயக்குநர். தமிழ் சினிமாவில் வட இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தின் உணர்ச்சிமிகுந்த காட்சிகள் வைக்கப்பட்டிருப்பது அரிதான ஒன்று,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

யஷ்பால் ஷர்மா நடித்துள்ள பல்ராம்தான் படத்தின் மைய கதாபாத்திரம். ஆனால், அவரது செயற்கையான நடிப்பு படம் முழுக்க நிறைந்துள்ளதாக புதிய தலைமுறை இணையதளம் விமர்சித்துள்ளது. மேலும், “இது கதாபாத்திரம் எழுதப்பட்டதில் இருந்த போதாமையா, நடிப்பில் உள்ள சிக்கலா எனத் தெரியவில்லை. இதனாலேயே படத்தில் பல முக்கியமான காட்சிகள் சரியான வகையில் பார்வையாளர்களான நமக்கு வந்து சேரவில்லை,” என்று எழுதியுள்ளது.

அதோடு, “படத்தில் பல காட்சிகளில் இந்தி வசனங்கள் வருகின்றன. அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் சப்டைடிலில் நிறைய பிழைகள். அது படத்தைப் பார்க்கும்போது பெரிய தொந்தரவாக இருந்தது” என்றும் புதிய தலைமுறை குறிப்பிட்டுள்ளது.

மொத்தத்தில் மனிதம்தான் முக்கியம், நாம் கட்டி வைத்திருக்கும் விதிகளும் மதங்களும் அதைத் தொக்கிக்கொண்டு வரும் அனைத்தும் அதற்குப் பிறகுதான் என்று அயோத்தி திரைப்படம் கூறுவதாக தினமணி கூறுகிறது.

ஆனால், அந்த மெசேஜை சொல்ல விரும்பியதைப் போல, அதே மெனக்கெடலுடன் படத்தின் மேக்கிங்கிலும் ஈடுபட்டிருந்தால், படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று புதிய தலைமுறை விமர்சனம் கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: