'1500 படங்களுக்கு பிறகு சொல்கிறேன்...' - வெற்றி மாறன் பற்றி இளையராஜா கூறியது என்ன?

பட மூலாதாரம், RS Infortainment
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.
பொதுவாக வெற்றி மாறன் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். விடுதலை படத்தில் இதுவரை நகைச்சுவை நடிகராக நடித்த சூரி காவலர் வேடத்தில் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ராஜீவ் மேனன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் பேசிய இளையராஜா, "1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன், வெற்றிமாறன் திரையுலகத்திற்கு கிடைத்த ஒரு நல்ல இயக்குநர்.
இதுவரை திரையுலகம் சந்திக்காத களத்தில் இந்த படம் அமைந்துள்ளது" என்று பேசினார்.
இளையராஜா பேசிக் கொண்டிருக்கும் போதே ரசிகர்கள் அதிகமாக சத்தம் எழுப்பியதால், “இப்படி சத்தம் போட்டால் நான் மைக்கை கொடுத்துவிட்டு போய்விடுவேன்” என்றார்.
“எந்தவித கதாபாத்திரத்திலும் நடிப்பேன்”
“நிறைய பட விழாக்களுக்கு சென்றுள்ளேன் அங்கெல்லாம் கைத்தட்டல் கேட்கும்போது ஆசையாக இருக்கும். என்னை நம்பி படம் எடுத்திருக்கிறார்கள் எனக்கு நாலு பேர் கைத்தட்டினால் நல்லாயிருக்கும் என நாலு பேரை இந்த விழாவிற்கு வர சொன்னேன். ஆனால் தயாரிப்பாளரை பேசவிடாமல் செய்யும் அளவு உங்களை யார் கைத்தட்ட சொன்னது,” என நகைச்சுவையாக தனது பேச்சை தொடங்கிய சூரி,
"நகைச்சுவை நடிகராக பல மேடைகள் ஏறியுள்ளேன். ஆனால் முதல் முறையாக ஒரு கதையின் நாயகனாக இந்த மேடையில் ஏறியுள்ளேன்.
விடுதலைப் படத்தில் நடித்த பிறகு சூரி இனி நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டார். வெற்றிமாறன் படத்தில் எல்லாம் நடித்துவிட்டார் என்று பேசுகிறார்கள். ஆனால் தொடர்ந்து நான் எந்தவித கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன்.
இன்றைக்கும் ஷூட்டிங் நடந்தது. நாளைக்கும் ஷூட்டிங் இருக்கும் அதனால் சீக்கிரம் செல்ல வேண்டும்." என்றார்.

பட மூலாதாரம், RS Infotainment/Twitter
வட சென்னை – 2 எப்போது?
பின்னர் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, "என்னை எட்டு நாள் என்று கூட்டி கொண்டு போய் ஏமாத்தியவர்தான் வெற்றிமாறன். என்னை பொறுத்தவரையில் நான் வட சென்னையில் நடிப்பதை தவற விட்டுவிட்டேன்." என்றார்.
அப்போது கூட்டத்திலிருந்து ரசிகர்கள் வட சென்னை 2 எப்போது வரும் என கேட்டனர். அதற்கு, "வெற்றிமாறன் கதை எழுதிக் கொண்டிருக்கிறார் விரைவில் வரும்," என்றார்.
பின்பு மேடையில் அமர்ந்திருந்த வெற்றிமாறனை பார்த்து, "யூட்யூபில் யார் யாரோ ஏதேதோ சொல்கிறார்கள் நானும் சொல்கிறேன்," என்றார்.
"வட சென்னை படத்தை தவறவிட்டதற்கு நான் மிகவும் வருந்தி இருக்கிறேன். அதனால் அந்தப் படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை." என்றார்.
"எட்டு நாள் என்னை அழைத்துச் சென்று வெற்றி மாறன் ஆடிஷன் செய்தார்." என்றார்.

பட மூலாதாரம், RS Infotainment/Twitter
“எட்டுநாள் என்றுதான் விஜய் சேதுபதியிடம் சொன்னேன்”
விஜய் சேதுபதிக்கு பிறகு பேசிய வெற்றிமாறன்,
"அசுரனுக்கு பிறகு ஒரு எளிதான படத்தை எடுக்க வேண்டும் என்று எண்ணிதான் விடுதலை படத்தை தொடங்கினேன். அந்த எளிதான படத்தில் சூரி மாதிரியான நபர் இருந்தால் எந்த பதற்றமும் இல்லாமல் நாம் படம் எடுத்துவிடலாம் என்றுதான் தொடங்கினேன்." என்றார்
பிறகு விஜய் சேதுபதி எட்டு நாள் குறித்து பேசியதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், "நான் உண்மையில் எட்டு நாள் என்று நம்பினேன். முதலில் அந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது மலை மீது ஏறிச் சென்று சற்று சிரமப்பட்டு நடிக்க வேண்டும் என்று புரிந்தது. அதன் பிறகு எனக்கு விஜய் சேதுபதிதான் மனதில் வந்தார். பின்பு அவரிடம் பேசும்போது எட்டுநாள் என்றுதான் சொன்னேன். ஆனால் அந்த நிலப்பரப்பில் எப்படி படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ளவே 15 நாட்கள் சென்றுவிட்டது. அது எனக்குமே ஆடிஷன் மாதிரிதான் தெரிந்தது.
அதன்பிறகு 8 நாளில் தொடங்கி 65 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தினோம்.
முதல் பாதியில் விஜய் சேதுபதி குறைவாகதான் வருவார். ஆனால் இரண்டாம் பாதி அவர் பெரும்பாலான காட்சிகளில் வருவார்." என்றார்
பின்பு வடசென்னை படம் எப்போது வரும் என்று வெற்றிமாறனிடம் கேட்டதற்கு, "வாடி வாசல் படத்தை முடித்துவிட்டு தொடங்கிறோம்", என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












