அமெரிக்க வங்கிகள் வீழ்வது இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்குமா? ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் சிலிக்கன் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி என வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கு என்ன காரணம், இது உலகப் பொருளாதாரத்தை பாதிக்குமா, இந்தியாவில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்தெல்லாம் பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸனிடம் பேசினார் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
பேட்டியிலிருந்து:
கே. அமெரிக்க வங்கிகள் சில அடுத்தடுத்து திவாலாகியிருக்கின்றன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?
ப. இவையெல்லாம் அமெரிக்காவில் உள்ள பிராந்திய வங்கிகள். அமெரிக்காவில் இரண்டு விதமான வங்கிகள் உள்ளன. ஒன்று தேசிய அளவிலான வங்கிகள். அவை ஃபெடரல் ரிசர்வ் கட்டுப்பாட்டில் வரும். மற்றொன்று பிராந்திய அளவிலான வங்கிகள். இவை மாகாணங்களின் கட்டுப்பாட்டில் வரும். தற்போது பிரச்சனைக்குள்ளாகியிருப்பவை எல்லாமே, பிராந்திய அளவிலான வங்கிகள்தான்.
இந்த விவகாரம் இந்த அளவுக்குப் பேசப்படுவதற்கு முக்கியமான காரணம், தற்போது பிரச்சனையில் சிக்கியிருக்கும் சிலிக்கான் வேலி வங்கியில்தான் பல Start - up நிறுவனங்களும் இடர்நிதி நிறுவனங்களும் தங்கள் நிதியை முதலீடு செய்து வைத்திருந்தன. இந்த வங்கி அமெரிக்காவில் 16வது பெரிய வங்கி. ஆகவேதான் இவ்வளவு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
நியூயார்க்கில் உள்ள சிக்னேச்சர் வங்கி என்ற வங்கியும் திவாலாகியுள்ளது. இதுவும் எதிர்பார்க்கப்பட்டதுதான். இன்னும் 6 வங்கிகள் சிக்கலில் உள்ளதாக Moody's தெரிவித்துள்ளது.
கே. இந்த வங்கிகள் திவாலாவதற்குக்கான காரணம், அந்த வங்கிகள் தொடர்புடையதா அல்லது பொதுவாக அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்புடையதா?
ப. இரண்டும்தான் காரணம். பொதுவாக வங்கிகளைப் பொறுத்தவரை, வங்கியைத் துவங்குபவர்கள் 10 ரூபாய் முதலீடு செய்தால், அதேபோல 300 மடங்கு கடன் வாங்கி முதலீடு செய்வார்கள். வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளும் இதில் அடக்கம். ஆகவேதான், வங்கிகளில் மிகக் குறைந்த அளவு இழப்பு ஏற்பட்டாலும், அது முதலீட்டாளர்களின் பங்கைக் காலிசெய்துவிடும். ஆகவே, அந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்ட உடனேயே அந்த வங்கிகளில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை வெளியில் எடுக்க முயல்வார்கள். இது ஒரே நேரத்தில் நடக்கும். ஆனால், அப்படி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் பணத்தைக் கொடுக்கும் அளவுக்கு வங்கியில் நிதி இருக்காது.
தற்போது திவாலான வங்கியைப் பொறுத்தவரை, 1.6 சதவீத வட்டி அளிக்கும் அரசின் கடன் பத்திரங்களில் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு அதைச் செய்தார்கள். அப்போது அமெரிக்காவில் வட்டிவிகிதம் பூஜ்யமாக இருந்தது. ஆகவே 1.6 சதவீத வட்டி என்பது நல்ல வட்டி விகிதம். ஆகவே இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தார்கள்.
ஆனால், அமெரிக்காவில் இந்த அளவுக்கு பணவீக்கம் ஏற்படும் என யாரும் கருதவில்லை. பணவீக்கம் ஏற்பட்டவுடன் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ், கடன் வட்டி விகிதத்தை 5 சதவீதமாக உயர்த்தியது. ஆகவே, 1.6 சதவீத வட்டி கிடைக்குமென்ற ரீதியில் முதலீடு செய்யப்பட்டிருந்த கடன் பத்திரங்களின் மதிப்பு வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக, முதலீட்டு மதிப்பு குறைந்தது. ஆகவே பலரும் தங்கள் பணத்தை எடுக்க முயன்றார்கள். இதன் காரணமாக வங்கி திவாலானது.
இந்த இரு வங்கிகளுமே, அமெரிக்காவில் இவ்வளவு பெரிய அளவில் வட்டிவிகிதம் உயரும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கே. தற்போது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அனைத்து வங்கிகளுமே கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவையா?
ப. ஆம். அரசின் கடன் பத்திரங்களில் முதலீடுசெய்தவைதான்.
கே. இந்த வங்கிகள் திவாலாவது அமெரிக்கப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ப. அமெரிக்கப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லாப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இங்குள்ள துவக்கநிலை நிறுவனங்கள், பிரதமர் குறிப்பிட்ட Tech Decade போன்ற எல்லாமே அமெரிக்காவிலிருந்து வரும் நிதியை நம்பியவைதான். ஆகவே, நம் நாட்டில் புதிய நிறுவனங்கள் துவங்கப்படுவதை பாதிக்கும். இங்கே உள்ள பல புதிய நிறுவனங்கள் இன்னும் லாபகரமான நிறுவனங்களாக மாறவில்லை. இன்னமும் செலவுதான் வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்படிச் செலவுசெய்யும் பணம் அமெரிக்காவில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது. இப்போது பணம் வருவது நின்றுவிட்டது.
தற்போது திவாலாகியுள்ள எஸ்விபி வங்கி முன்பு பே டிஎம்மில் முதலீடு செய்திருந்தார்கள். பேடிஎம்மின் பங்குகளை இந்த வங்கி ஏற்கனவே விற்றுவிட்டதாக அதன் நிறுவனர் தெரிவித்திருக்கிறார்.
கே. இது போன்ற வங்கிகளில் முதலீடு செய்தவர்களின் பணத்திற்கான பாதுகாப்பு அமெரிக்காவில் எந்த அளவுக்கு இருக்கும்?
ப. அமெரிக்காவில் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கம்பனி என ஒரு நிறுவனம் உள்ளது. இந்தியாவில் ஒரு வங்கி திவாலானால், அதில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து லட்ச ரூபாய்வரை கிடைக்கும். அமெரிக்காவில் இரண்டரை லட்சம் டாலர்கள் கிடைக்கும். ஆகவே ஒரே வங்கியில் இரண்டரை லட்சம் டாலருக்கு மேல் இருந்தால், அதற்கு பாதுகாப்பில்லை என்பதுதான் அடிப்படையான விதி. ஆனால், இந்த சனி - ஞாயிற்றுக்கிழமைகளில் ஃபெடரல் ரிசர்வும் அமெரிக்க அரசும் பேசியதில், இந்த வங்கிகளில் யார் வைப்புத் தொகையாக வைத்திருந்தாலும் அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் எனக் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், பங்குகளிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள். இரண்டு வங்கிகளில் கடன் பத்திரங்களிலும் பங்குகளிலும் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கிடைக்காது. சிக்கலில் இருப்பதாகக் கருதப்படும் ஆறு வங்கிகளின் பங்குகளை வைத்திருப்போர் இப்போது அவற்றை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். வட்டி விகிதத்தை பூஜ்யத்திலிருந்து ஐந்து சதவீதம் அளவுக்கு குறுகிய காலத்தில் உயர்த்தினால், அது எங்காவது பிரச்சனையை ஏற்படுத்தும் என பலர் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
கே. மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும்போது, வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்களுக்கு ஆதாயம்தான். காரணம் அவர்களுக்கு கிடைக்கும் வட்டி அதிகரிக்கும் என்பது பொதுவான புரிதல். ஆனால், வட்டி விகிதம் அதிகரிக்கும்போது வங்கிகள் இப்படி ஒரு சிக்கலைச் சந்திப்பது ஏன்?
ப. அமெரிக்காவில் இந்தச் சிக்கல் ஏற்பட்டாலும் இந்தியாவில் ஏற்படாது. அமெரிக்காவிலும் பெரிய வங்கிகள் எல்லாம் இது போன்ற சிக்கலை சந்திக்காது. ஆனால், தற்போது சிக்கலைச் சந்திப்பவை சிறிய வங்கிகள். அமெரிக்காவில் இதுபோல 300 சிறிய வங்கிகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளன. கூட்டுறவு வங்கிகள் கூட ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
இந்தியாவில் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி என்ற வங்கி இருந்தது. அதில் இதுபோல பிரச்சனை ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினார்கள். காரணம் அது கூட்டுறவு வங்கி. ஆனால், எஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி போன்ற வங்கிகளில் பிரச்சனை ஏற்பட்டபோது, அதில் பணம் போட்டு வைத்திருந்தவர்களுக்கு பணம் திரும்பக் கொடுக்கப்பட்டது.
கே. இந்திய வங்கிகளும் இதுபோன்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கும். ஆகவே அவற்றுக்கும் பிரச்சனை வருமா?
ப. கட்டாயம் வரும். இந்த வங்கிகள் எல்லாம் அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருப்பார்கள். ஆனால், வங்கிகளும் அரசுக்குத்தான் சொந்தமானவை என்பதால் பணம் போட்டவர்களுக்கு நம்பிக்கை இருக்கும். ஆகவே, எல்லோரும் ஒரே நேரத்தில் வங்கிக்குச் சென்று பணத்தைத் திரும்பக் கேட்க மாட்டார்கள்.
இந்தியாவில் கடன் விகிதம் 6 சதவீதத்தில் இருந்து எட்டு சதவீதமாக உயர்த்தப்பட்டுவிட்டது. பணவீக்கம் 6.44ஆக உள்ளது. வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை இன்னும் .25 சதவீதம் முதல் .75 சதவீதம் வரை விகிதம் அதிகரிக்கும். ஆகவே அழுத்தம் அதிகரிக்கும். ஏற்கனவே இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன் வட்டியை 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆனால், அரசுதான் பொதுத் துறை வங்கிகளுக்கு உரிமையாளர்கள் என்பதால் பிரச்சனை வராது.

பட மூலாதாரம், Getty Images
கே. 2008ல் லேமன் பிரதர்ஸ் வீழ்ந்ததோடு, இப்போது நடப்பதை ஒப்பிடுகிறார்கள். அந்த ஒப்பீடு சரியா?
ப. அது தவறு. அந்த வங்கி மிகப் பெரிய வங்கி. தற்போது பிரச்சனைக்குள்ளாகியுள்ள ஆறு வங்கிகளும் சிறிய வங்கிகள். ஆனால், சிலிக்கன் வேலி வங்கி முக்கியமான துறைகளுக்கு கடன் கொடுத்துவந்ததால், அந்தத் துறைகள் பிரச்சனைகளைச் சந்திக்கும். நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பு போகும். குறிப்பாக Start up நிறுவனங்களில் இருப்பவர்கள் வேலை இழப்பார்கள்.
கே. லேமென் பிரதர்ஸ் வங்கி வீழ்ந்தபோது அது உலகப் பொருளாதார பெரு மந்தத்தை ஏற்படுத்தியது.. இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அதுபோன்ற உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துமா?
ப. இந்த வங்கிகள் வீழாவிட்டாலும்கூட, நாம் உலகப் பொருளாதார பெருமந்தத்தை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருக்கிறோம். நான்காவது மாதமாக நமது ஏற்றுமதி சரிந்திருக்கிறது. இறக்குமதி ஏறியிருக்கிறது. நாம் முழுமையாகத் தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். கச்சா பொருட்களை இறக்குமதி செய்கிறோம். நாம் தயாரித்த பொருட்களை நம்மால் கூடுதலாக ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்பதுதான் இதற்குப் பொருள்.
கே. இந்தியாவில் சாதாரணமாக ஒரு வங்கியில் பணத்தைப் போட்டுவைக்கும் ஒருவர் இந்த வீழ்ச்சி குறித்து கவலைப்பட வேண்டுமா?
ப. இந்தியாவில் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் எந்த ஒரு வங்கியில் பணத்தைப் போட்டுவைத்தாலும் பணம் பாதுகாப்பாகத்தான் இருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













