பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்? விசாரணைக் குழு கண்டறிந்தது என்ன?

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரிஜ் பூஷன் சரண் சிங்
    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவரும், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பு காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தபோது அவர் கைது செய்வது உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது.

ஏனென்றால் போலீஸுக்கு அளிக்கப்பட்ட புகாரில் பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததான குற்றச்சாட்டுடன் கூடவே ஒரு பதின்பருவ மல்யுத்த வீரருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் அடங்கும்.

பிரிஜ் பூஷன் சிங் எல்லா குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை விட சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மிகவும் தீவிரமானது என்று இந்திய சட்டம் கருதுகிறது.

அதனால்தான் இதுபோன்ற வழக்குகளுக்காக 2012-ம் ஆண்டு பிரத்யேகமான POCSO சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தில் மைனருக்கு பாதுகாப்பு அளிப்பது, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரிப்பது போன்ற விதிகள் உள்ளன.

2019 ஆம் ஆண்டில் இதன் கீழ் தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன மற்றும் அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையிலிருந்து மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டது.

பிரிஜ் பூஷன் சிங் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி போராடிய மல்யுத்த வீரர்களை போலீஸார் ஞாயிறன்று போராட்டக்களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக காவலில் எடுத்த போது பிரிஜ் பூஷன், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தார்.

மல்யுத்த வீராங்கனைகள் விஷயத்தில் POCSO சட்டம் என்ன சொல்கிறது?

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம், ANI

புகார்தாரர்களின் அடையாளத்தை மறைக்கவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர், பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எஃப்ஐஆரில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரிவுகள் 354, 354A, 354D தவிர, போக்ஸோ சட்டத்தின் பிரிவு (10) 'தீவிரமான பாலியல் துன்புறுத்தல்' குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று பிபிசிக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற மிகக் கடுமையான குற்றங்களில் காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆனால் 'தீவிர பாலியல் துன்புறுத்தல்' அந்த வகையில் வராது.

இப்பிரிவில் குறைந்தபட்சம் ஐந்து மற்றும் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.

”POCSO வின் பிரிவு 10, ஜாமீன் வழங்குவதற்கான வழியைக் கொண்டுள்ளது. எஃப்ஐஆர் பதிவு செய்த பிறகும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீனும் பெற முடியும்,” என்று குழந்தை உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ஹக்' இன் வழக்கறிஞர் குமார் ஷைலப் கருத்துப்படி,

"இந்தப் பிரிவில் கைது செய்ய வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு இல்லை. விசாரணைக்கு இடையூறு ஏற்படும் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓடிவிடுவார்கள் என்று காவல்துறை கருதினால் அவர்கள் அதன் அடிப்படையில் கைது செய்யப்படலாம்,” என்று பிபிசி யிடம் அவர் தெரிவித்தார்.

ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தர் நடைபாதையில் இரவும் பகலும் கழித்த மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம், @SAKSHIMALIK

படக்குறிப்பு, ஜந்தர் மந்தர் போராட்ட தளத்தில் இருந்து சாக்ஷி மல்லிக்கை போலீசார் தூக்கிச்செல்கின்றனர்.

பூஷனை கைது செய்ய கோருவது ஏன்?

பிரிஜ் பூஷன் ஷரண் சிங்குக்கு எதிரான எஃப்ஐஆர் அத்தனை எளிதில் செய்யப்படவில்லை. காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாததால், மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்த பின்னரே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

மைனரின் பிறப்புறுப்பை பாலியல் நோக்கத்துடன் தொடுவது அல்லது தன் பிறப்புறுப்பைத் தொடும்படி கட்டாயப்படுத்துவது ' பாலியல் துன்புறுத்தல்' என்ற வரையறையின் கீழ் வருகிறது.

இப்படி நடந்துகொள்பவர் சக்தி வாய்ந்தவராகவும், பதவி, வேலை போன்றவற்றின் காரணமாக அவர் சிறார்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தினால், அது 'தீவிர பாலியல் துன்புறுத்தல்' என்று கருதப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது பலம் மற்றும் செல்வாக்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் மீது அழுத்தம் கொடுக்கலாம். எனவே அவரை கைது செய்வது அவசியம் என்று மல்யுத்த வீரர்கள் கருதுவதாக குமார் ஷைலப் கூறுகிறார்.

"இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காதது மிகவும் மோசமான செய்தியை அனுப்புகிறது. மேலும் POCSO சட்டத்தை உருவாக்குவதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் அது கேள்விகளை எழுப்புகிறது." என்று அவர் மேலும் கூறினார்.

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம், MINISTRY OF YOUTH AFFAIRS AND SPORTS

பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு கண்டறிந்தது என்ன?

இந்த ஆண்டு ஜனவரியில் வினேஷ் போகட், சாக்ஷி மல்லிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஒன்றாக வந்து பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முதன்முதலில் ஊடகங்களிடம் முன்வைத்தனர்.

அந்த நேரத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தீர்ப்பதற்கும் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பில் 'உள் குழு' இருக்கவில்லை.

பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013ன் கீழ், ஒவ்வொரு பெரிய பணியிடமும் இதுபோன்ற குழுவை அமைப்பது அவசியம். இதனால் பணியிடம் பாதுகாப்பாக இருக்கும் என்று இதுபோன்ற பல

குழுக்களில் உறுப்பினராக இருந்த மூத்த செய்தியாளர் லட்சுமி மூர்த்தி கூறினார்.

"புகார்கள் வந்த பிறகு மட்டுமே குழு அமைக்கப்பட்டால், அது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. அதில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது, புகார்தாரர்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் யார் மீது சுமத்தப்படுகிறது, என்பதை பொருத்தும் அமையக்கூடும். குழுவின் சுயாட்சி குறித்தும் கேள்விகள் எழக்கூடும்,” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

ஜனவரியில் போராட்டக்காரர்களின் புகார்களை கருத்தில் எடுத்துக்கொண்ட, 'இந்திய ஒலிம்பிக் சங்கம்' ஒரு 'மேற்பார்வைக் குழுவை' அமைத்தது, அதன் அறிக்கையின் ஒரு சிறிய பகுதி ஏப்ரல் மாதம் பகிரங்கப்படுத்தப்பட்டது.

குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், சில முதற்கட்ட விவரங்கள் வெளியாகி உள்ளதாகவும் இதுகுறித்து விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ”பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தீர்ப்பதற்கும் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பில் 'உள் குழு' இருக்கவில்லை. கூட்டமைப்பு மற்றும் வீரர்களுக்கு இடையே சிறந்த பேச்சுவார்த்தையும், உரையாடலில் வெளிப்படைத்தன்மையையும் இருக்கவேண்டியது அவசியம்.”

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம், ANI

முடிவு வரும் வரை வீராங்கனைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?

இந்த குழு செயல்படும் விதம் ஏற்கனவே மல்யுத்த வீரர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இதில் ஒருவருக்கொருவர் தொடர்பு உள்ளது. குழுவில் வெளியில் இருந்து உறுப்பினர்கள் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று லட்சுமி மூர்த்தி கூறினார்.

மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவது தற்போதைய சூழலில் கூட்டமைப்பிற்கும் வீரர்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013ன் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தண்டனையாக பதவியில் இருந்து நீக்குவது அல்லது இடைநீக்கம் செய்வது போன்ற விதிகள் உள்ளன.

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம், IOA

பிரிஜ் பூஷன் சிங் இப்போதும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருக்கிறார்.

குற்றச்சாட்டுகள் எழுந்ததிலிருந்து, மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட வேலைகளை ஒரு 'மேற்பார்வைக் குழு' கவனித்து வந்தது. இப்போது இரண்டு பேர் கொண்ட 'அட்-ஹாக் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த 'அட்-ஹாக் கமிட்டி' மல்யுத்த சம்மேளனத்தின் வரவிருக்கும் தேர்தலையும் ஏற்பாடு செய்யும் என்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவிக்கிறது..

பிரிஜ் பூஷன் சிங் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்து வருவதால் விதிகளின்படி, அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது.

இருந்தபோதிலும் மல்யுத்த வீரர்கள் அவரது ஆதிக்கம் மற்றும் குறைவான செயல்திறன் காரணமாக தங்கள் விளையாட்டு வாழ்க்கை சீரழிந்துவிடுமோ என்ற அச்சத்தைப் பற்றி பலமுறை பேசியுள்ளனர்.

'மேற்பார்வைக் குழு'வின் சீல் வைக்கப்பட்ட அறிக்கை, தில்லி காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பகிரங்கப்படுத்தப்படும் வரை குற்றச்சாட்டுகளை சரிபார்க்க முடியாது மற்றும் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: