தனிமையில் இருக்கும் போது யாரோ உடனிருப்பது போன்ற உணர்வு மாயத் தோற்றமா? மன நோயின் அறிகுறியா?

பட மூலாதாரம், Getty Images
அதிக மனஅழுத்தம் அல்லது மலையேற்றம் போன்ற அதிதீவிர செயல்களில் இருக்கும்போது மனிதன் தன்னுடன் வேறு யாரோ இருப்பதை போல உணர்கிறான். இது மாயத்தோற்றம் இல்லையென்றால் உண்மையில் என்ன?
கடந்த 2015 இல், லூக் ராபர்ட்சன் அண்டார்டிகாவில் தனியாக பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது பரந்து விரிந்த அந்த பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனியும், பனிக்கட்டிகளுமாகவே காட்சி அளித்தன.
தென் துருவத்தை நோக்கிய 40 நாட்கள் தனிமைப் பயணத்தின் இரண்டாம் வாரத்தில் ராபர்ட்சன் சோர்வாக உணர்ந்ததுடன், மனஉளைச்சலுக்கும் ஆளானார்.
அப்போது அவர் வானத்தை அண்ணாந்து பார்த்த சில நொடிகளில் தமக்கு இடப்புறமாக திரும்பி பார்த்தபோது, அங்கு ஸ்கார்ட்லாந்தின் அபெர்டீன்சையர் பகுதியில் இருக்கும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான வயல்வெளி உள்ளதை போல் கண்ணுக்கு தென்பட்டது.
அத்துடன் அங்கு அவர் வளர்ந்த வீடும், விளையாடி மகிழ்ந்த தோட்டமும் கூட இருப்பது போல தெரிந்தது. இந்த காட்சிகள் அவருக்கு பயத்தையும், ஆறுதலையும் ஒருசேர அளித்தன.
பிபிசி வானொலியின் ‘ஆல் இன் தி மைண்ட்’ நிகழ்ச்சிக்காக ராபர்ட்சன் உடன் பேசியபோது, தன்னுடைய இந்த அனுபவத்தை அவர் விசித்திரமானது என்று கூறினார். ஆனால் தொடர்ந்து அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் இன்னும் விசித்திரமாக இருந்தன. இசையை ரசிப்பதற்காக அவர் கொண்டு சென்ற கருவி அங்கு வேலை செய்யவில்லை. பனிச்சறுக்கு விளையாட்டின்போது எழுந்த சப்தமும், காற்றின் ஓசையுமே அவருக்கு கேட்டது. அதேநேரம், ஃபிளின்ஸ்டோன் அனிமேஷன் டிவி தொடரின் இசையும் அவரது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அத்துடன் ஃபிளின்ஸ்டோன் கார்ட்டூன் தொடரில் வரும் கதாபாத்திரங்களின் உருவம் அவருக்கு அடிவானத்தில் தென்பட்டன.
நாட்கள் செல்ல செல்ல அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் இன்னும் விநோதமாக இருந்தன. அவரது பெயரை சொல்லி யாரோ அழைப்பது போலவும், அவரை யாரோ பின்தொடர்வது போலவும் உணர்ந்தார்.
உண்மையில் அப்படி யாரும் அவரை பின்தொடரவில்லை என்பதை அவர் உறுதி செய்து கொண்டாலும், தென் துருவத்தை அடையும் வரை தம்முடன் வேறு யாரோ இருப்பதை போன்ற உணர்வில் இருந்து அவரால் முழுமையாக விடுபட முடியவில்லை.

பட மூலாதாரம், Luke Robertson
ஒலித்த பெண் குரல்
இந்த உணர்வுகளுக்கு இடையே மிகவும் சோர்வாக உணர்ந்த ராபர்ட்சன், தனது ஸ்லெட்ஜிங் (பனிச்சறுக்கு விளையாட்டு உபகரணம்) மீது அமர்ந்து சில வினாடிகள் லேசாக கண் அயர்ந்தார். அப்போது மற்றொரு குரல் கேட்டது. இந்த முறை ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்.
‘இப்படி உறங்குவது உனக்கு ஆபத்தாக அமையலாம். எனவே உறக்கத்தில் இருந்து உடனே விழித்தெழு’ என்று அந்த குரல் அவரை எச்சரித்தது. அந்த குரல் பயணத்தில் தம்மை முன்னோக்கி அழைத்து செல்வதை போலவும், ஏதோ ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றியதை போலவும் ராபர்ட்சன் உணர்ந்தார். ஆனால், அந்த குரலுக்கு சொந்தக்காரி யார் என்று அவர் ஆவலுடன் பார்த்தபோது மீண்டும் அங்கு யாரும் இல்லை.
ராபர்ட்சனுக்கு நேர்ந்ததை போன்ற இந்த வினோத அனுபவம், வேறு சில பயண ஆய்வாளர்களுக்கும், மலையேற்றம் மேற்கொள்ளும் சாகச வீரர்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.
எர்னஸ்ட் ஷேக்லெட்டன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, 1916 இல் தெற்கு ஜார்ஜியா பகுதி முழுவதிலும் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தது. தங்களது சாகச பயணத்தின் இறுதி கட்டத்தில் மூன்று பேருடன் நான்காவதாக ஒரு நபர் தங்களுடன் பயணித்ததை போன்று உணர்ந்தேன் என்று எர்னஸ்ட் ஷேக்லெட்டன் கூறியுள்ளார். இவரைப் போன்றே எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிலருக்கும் இதுபோன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
சாகச பயணம் மேற்கொள்வோரை காக்கும் தேவதைகள் போல் செயல்படும் இந்த மாயத்தோற்றம், ‘மூன்றாவது மனித காரணி’ என்று அழைக்கப்படுகிறது.
யாருக்கெல்லாம் இந்த உணர்வு ஏற்படும்?
இந்த அனுபவத்தை ‘யாரோ உடன் இருப்பதை போல் உணர்தல்’ (Felt Presence) என்கிறது உளவியல் மருத்துவ உலகம். பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை இணைப் பேராசிரியரான பென் ஆல்டர்சன் -டே ‘Presence: The Strange Science and True Stories of the Unseen Other’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் இந்த அனுபவம் குறித்து அவர் விவரித்துள்ளார்.
மலையேறும் சாகச வீரர்கள், தென் துருவத்தை நோக்கி பயணம் மேற்கொள்பவர்கள் போன்றவர்களுக்கு மட்டும் இந்த உணர்வு ஏற்படவில்லை என்பதை அவர் கண்டறிந்தார்.
ஒருவர் தனது வீட்டு ஓய்வறையில் இருக்கும்போது ஏதோ ஒரு தருணத்தில் அவருடன் வேறு யாரோ ஒருவர் இருப்பதை போன்று உணரலாம்.
கையறு நிலையில் உள்ள ஒருவருக்கோ அல்லது மனநோயாளிக்கோ கூட இந்த அனுபவம் ஏற்படலாம். பார்கின்சன் நோய்க்கு ஆளாவோரில் 25 சதவீதம் பேருக்கு இந்த அனுபவம் நிகழ்கிறது. நீங்கள் உறக்கத்தில் இருந்து விழிக்கும் போதோ, ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லும்போதோ இந்த அனுபவம் நேரிடலாம் என்கிறார் பென் ஆல்டர்சன் -டே.
சிலருக்கு தூக்க முடக்குவாதத்தின் ஒரு பகுதியாக இந்த அனுபவம் நிகழலாம். அப்போது அவர்களால் எழ முடியுமே தவிர, படுக்கையில் இருந்து நகர முடியாது. அப்போது அவர்களுடன் அறையில் யாரோ உடன் இருக்கிறார்கள் என்ற உணர்வோ, அவர்கள் தங்களது மார்பில் அமர்ந்து கொண்டு கீழ்நோக்கி இழுக்கிறார்கள் என்ற அச்சமோ மேலோங்கி இருக்கும் என்கிறார் டே. தூக்க முடக்கம் தொடர்பான இந்த அனுபவம் திகில் நிறைந்தது என்கிறார் அவர்.
ஒருவர் உணரும் இந்த அனுபவத்தில் அவர் எதனை கண்டார் என்பதை குறிப்பிட்டு சொல்வது கடினம். அதேபோன்று, இந்த விசித்திரமான அனுபவத்தை ஒருவர் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களால் உணர முடியாது. அதற்காக இதனை மாயத்தோற்றம் என்று சொல்லிவிட முடியாது. உணரப்படும் தருணத்தில் உண்மையாக உள்ளதால் இது கிட்டதட்ட ஆறாம் அறிவை போன்றது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images
‘உடன் இருத்தல் உணர்வு’ உண்டாக என்ன காரணம்?
மலையேறுபவர்கள் மற்றும் பயண ஆய்வாளர்களுக்கு அவர்களின் இருப்பிடம் காரணமாக மூளைக்கு செல்லும் ஆக்சிஜனில் பற்றாக்குறை ஏற்படலாம். உடல்ரீதியான இந்த மாற்றம், ‘உடன் இருத்தல் உணர்வை’ தூண்டுவதில் பங்கு வகிக்கலாம் என்று அறியப்படுகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவது போன்ற தருணங்களை எதிர்கொள்பவர்களின் உயிர் வாழ்தலை கருத்தில் கொண்டு, அவருக்கு எப்படியாவது உதவ ஒரு இருப்பை மனம் உருவாக்குகிறதா? என்ற உளவியல்ரீதியான கேள்வியும் இதில் அடங்கி உள்ளது. சுருங்க சொன்னால், யாரோ ஒருவர் உடன் இருப்பது போன்ற உணர்வு, ஒருவரின் உடல் மற்றும் உளவியல்ரீதியான தொடர்பை கொண்டது என்கிறார் பேராசிரியர் ஆல்டர்சன் டே.
மலையேற்றம் போன்ற கடினமான பயணங்களின்போது ஒருவருக்கு எழும் தனிமை உணர்வில் இருந்து அவரை மீட்க, அவரது வீடு உள்ளிட்ட காட்சிகளை மூளை மனக்கண் முன் கொண்டு வருகிறது. இதேபோன்று, இந்த பயணங்களில் ஒருவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டால், அவரை உற்சாகப்படுத்த யாரோ ஒருவரின் குரலை மூளை ஒலிக்க செய்கிறது என்று தமது சொந்த அனுபவத்தில் இருந்து கூறுகிறார் ராபர்ட்சன்.
யாரோ உடன் இருப்பதை போன்று உணரும் அனுபவம், சிலருக்கு அதிகம் வாய்க்க பெறும். ராபர்ட்சன் மற்றும் அவரது குழுவினர் தங்களது சில ஆய்வுகளில், யாரோ பெண்களின் இருப்பை உணரும் வாய்ப்பு இருந்ததை கண்டறிந்தனர். இளம் வயதினருக்கு இந்த உணர்தல் அனுபவம் மிகவும் பொதுவானது என்கின்றனர் நிபுணர்கள்.
ஜெனீவாவில் உள்ள ஓர் ஆய்வகத்தில் ஒரு ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதனின் மூளையை ஏமாற்றி, அவர்களுக்கு பின்னால் யாரோ இருப்பதாக உணர செய்ய இயலும். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக இந்த அனுபவத்திற்கு ஆளாகின்றனர்.
மனித மூளையின் அசாதாரண செயல்பாட்டின் உடல்ரீதியான கட்டமைப்பு கண்டறியப்பட்டது, ‘யாரோ ஒருவர் உடன் இருப்பது போன்ற உணர்வு’ ஏற்படக்கூடிய சூழ்நிலைகளின் வரம்பை ஆல்டர்சன் டே அனுமானிக்க வழி வகுத்தது.

பட மூலாதாரம், Luke Robertson
மேகத்தில் தோன்றும் உருவம்
மனநோய், பார்கின்சன் போன்ற நோய்களின் தாக்கத்தின் விளைவாக நம் புலன்கள் மூலம் நமக்கு சில தகவல்கள் கிடைக்கப் பெறுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், இந்த தகவல்களே யாரோ நம்முடன் இருப்பதை போன்ற வினோதமான உணர்வை ஏற்படுத்தலாம் என்கின்றனர் அவர்கள்.
இதேபோன்று, புலன்கள் மூலம் கிடைக்கப் பெறும் தகவல்களில் ஏதேனும் தமக்கு புரியாதபோது, அதனால் ஏற்படும் இடைவெளியை யூகத்தின் அடிப்படையில் மூளை நிரப்பி கொள்கிறது என்ற புரிதலும் உள்ளது. இந்தபடியே, மேகங்களில் ஏதேனும் முகங்கள் அல்லது உருவங்களை பார்ப்பது போன்று, ஒருவர் இல்லாதபோதும் அவரை காண்பதை போன்ற உணர்வு மனிதனுக்கு ஏற்படுகிறது.
இந்த உணர்வை அனுபவிக்கும் விதம், ஒருவரது தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் நம்பிக்கையை பொறுத்தது. ராபர்ட்சனுக்கு இருந்ததைப் போலவே அது ஒருவருக்கு ஆறுதலாக இருக்கலாம் அல்லது தீங்கிழைக்க கூடியதாக அமையலாம். இந்த அனுபவத்தை அவர் எப்படி புரிந்து கொள்கிறார் என்பதை பொறுத்தே அவருடன் ஓர் தேவதையோ, யாரோ ஒரு நபரோ உதவிக்கு இருப்பது போல் உணரலாம் அல்லது தன்னுடன் பேய் இருப்பது போன்ற உணர்வுக்கும் அவர் ஆளாகலாம்.
உடல் மற்றும் மனதை ஆய்வு செய்வதன் மூலம், ‘யாரோ உடன் இருப்பதை போல் உணர்தல்’ குறித்த இந்த பொதுவான அனுபவத்தை உண்மையாக புரிந்து கொள்ள முடியும் என்று ஆல்டர்சன் டே நம்புகிறார்.
இதனிடையே, மனநோயாளிகளிடம் யாரோ பேசுவது போன்ற ஒலி உங்கள் காதுகளில் அவ்வபோது கேட்டு கொண்டே இருக்கிறதா எனக் கேட்கும் மனோதத்துவ மருத்துவர்கள், அவர்களிடம் ‘யாரோ உடன் இருப்பதை போல் உணரும் அனுபவம்’ குறித்து மிகவும் அரிதாகவே கேட்கின்றனர் என்று சுட்டிக்காட்டுகிறார் ஆல்டர்சன் டே.
ஆனால் இதுகுறித்தும் மருத்துவர்கள் மனநோயாளிகளிடம் கேட்டறிந்து ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தும் டே, அப்போது தான் இந்த சிக்கலை கையாள்வதற்கான வழிமுறைகள் கிடைக்கப் பெறும் என்கிறார்.
ராபர்ட்சன் இறுதியில் தென் துவருத்தை அடைந்தார். இருப்பினும் இந்த சாகச பயணத்தின்போது அவருக்கு நேர்ந்த விசித்திரமான அனுபவங்களால், ஆராய்ச்சி நிலையத்தை முதலில் பார்த்தபோது அவர் அதை நம்பவில்லை. ஆனால் உண்மையில் அவர் தனது இலக்கை அடைந்திருந்தார்.
தம்மை போன்ற ஆய்வாளர்களுக்கு இதுபோன்ற பயணங்களின்போது என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும், தங்களின் பணியில் கவனம் செலுத்த உதவும் வகையிலும், ‘யாரோ உடன் இருப்பதை போல் உணர்தல்’ (Felt Presence) அனுபவம் குறித்து மருத்துவ உலகம் மேலும் ஆராய வேண்டும் என்று விரும்புகிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












