குஜராத் தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியடைய காரணமான ஸ்மார்ட் தேர்தல் பிரசாரம்

குஜராத் தேர்தல்
    • எழுதியவர், ஜூபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர் ஆமதாபாத்

குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான 'ஸ்ரீ கமலம்', டிசம்பர் 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாகவே, கட்சியின் வெற்றி உறுதி என்பது போலவும் முடிவுகளுக்கான காத்திருப்பு ஒரு சம்பிரதாயம்தான் என்பது போலவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அம்மாநிலத்தில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸ், தனது கட்சிக்கு 130 இடங்களுக்கும் மேல் கிடைக்கும் என்று புன்னகையுடன் கூறினார். கட்சியின் அறிவிக்கப்பட்ட இலக்கான 150 இடங்களைப் பெறுவது பற்றியும் அவர் பேசினார். ஆனால் கட்சியின் செயல்பாடு எல்லா தலைவர்களின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி மிகவும் சிறப்பாக இருந்தது.

27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருந்த பிறகு, கட்சியின் இந்த உறுதியான நம்பிக்கை புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது. ஆனால் அதன் போட்டிக் கட்சியான காங்கிரஸ் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்தும், இந்தத் தேர்தலின்போது காட்டிய வெற்று தன்னம்பிக்கை, புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.

காங்கிரஸ் ஆமதாபாத்தில் உள்ள தன் பிராந்திய தலைமையகத்திற்கு வெளியே ஒரு நேரலை மின்னணு பலகையைக் காட்சிப்படுத்தியிருந்தது. இது பாஜகவின் அதிகாரம் முடிவடையும் நேரத்தைச் சுட்டிக்காட்டுவதாக அது கூறியிருந்தது. டிசம்பர் 7ஆம் தேதி மாலை 4 மணியளவில் நான் அங்கு சென்றபோது, பாஜக ஆட்சிக்கு இன்னும் 21 மணிநேரம் 45 நிமிடங்கள் மட்டுமே மீதம் உள்ளது என்று மின்னணு பலகை காட்டியது.

ஆனால், பாஜகவின் சமீபத்திய வரலாற்று மகத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியானது, பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் மாநிலத்தில் பாஜகவை இப்போதைக்கு தோற்கடிக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களை வென்ற பாஜக, இந்தமுறை கடைப்பிடித்த தேர்தல் உத்தியால், 1985இல் காங்கிரஸ் பெற்ற 149 இடங்களையும் தாண்டிவிட்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இம்முறை ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது சக்தியாக பாஜகவுக்கு சவால் விடுத்தாலும், பாஜகவின் வெற்றியில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

குஜராத்தில் பா.ஜ.க.வின் அரசியல் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் திலீப் படேல், அக்கட்சியின் மகத்தான வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று நரேந்திர மோதி எனக் கூறுகிறார். ஆனால் வேறு பல காரணங்களும் உள்ளன என்று அவர் தெரிவிக்கிறார்.

கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் மிகவும் தீவிரமாகப் போராடுகிறது என்றும் தன் முழு ஆற்றலையும் அதில் செலுத்துகிறது என்றும் திலீப் படேல் குறிப்பிட்டார்.

பிபிசி குஜராத்தியின் செய்தியாளர் ரோக்ஸி காக்டேகர், பல ஆண்டுகளாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடர்பான செய்திகளை வழங்கி வருகிறார். தேர்தல் அருகில் உள்ளதோ இல்லையோ, பாஜக எப்போதும் தேர்தல் தயார் நிலையில் இருப்பதை நான் பார்க்கிறேன் என்கிறார் அவர்.

“இன்று ஒரு தேர்தல் முடிவடைகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் அடுத்த தேர்தலுக்கு இன்றிலிருந்தே பாஜக ஏற்பாடுகளை ஆரம்பித்துவிடுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் விழித்துக்கொள்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

குஜராத் தேர்தல்

ஸ்மார்ட் தேர்தல் பிரசாரம்

கோவிட்-19 தொற்றுநோய் பேரிடைக் கையாண்டதில் மாநில அரசின் தோல்வியை பாஜக தலைமை ஒருபோதும் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் இது தொடர்பான மக்களின் அதிருப்தியை அது அறிந்திருந்தது. அக்கட்சியின் செயல் உத்தி வகுப்பாளர்கள், மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான அலையைச் சமாளிக்க முதல்வர் உட்பட பல அமைச்சர்களை நீக்கி தங்கள் அரசில் புதிய முகங்களைக் கொண்டு வந்தனர்.

மேலும் பொது வாக்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு அக்கட்சி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே தனது தொண்டர்களை தொகுதிகளுக்கு அனுப்புகிறது. இம்முறை குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலிலும் அந்தக் கட்சி எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியின் உத்தி மாறியது. கிராமப்புறங்களில் மேஜிக் ஷோக்கள், 'ஸ்மார்ட்' தேர்தல் பிரசாரம் எனத் தொடங்கி மக்களை கட்சியுடன் இணைக்கத் தொடங்கியது.

குஜராத் தேர்தல்

மோதியின் பேரணிகள்

இந்த முறை பிரதமர் நரேந்திர மோதியின் பேரணிகள் எவ்வாறு தேர்தல் பிரசாரத்தின் மையப்புள்ளியாக இருந்தது என்பதை கட்சியின் மாநில பிரிவு தலைவர்கள் பிபிசி இந்தியுடன் பகிர்ந்து கொண்டனர். பிரதமர் 31 பேரணிகளை நடத்தினார். இவற்றில் பெரும்பாலானவை, கட்சி பலவீனமாக இருந்த பகுதிகளில் நடத்தப்பட்டன.

கிராமப்புறங்களில் கட்சி பலவீனமாகக் காணப்பட்டது. கிராமப்புற வாக்காளர்களைச் சென்றடைய கட்சி பல தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டது.

"கட்சி 3,500 க்கும் மேற்பட்ட இடங்களில் மேஜிக் ஷோக்களையும் 4,000 இடங்களில் தெரு நாடகங்களையும் 1,400 இடங்களில் நேரலை காட்சிகளையும், ’விகாஸ் கா கர்பா’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளையும் நடத்தியது" என்று கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் கூறினார்.

மாநிலத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் இம்முறை கட்சி பல இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ஆட்சிக்கு எதிரான அலையை எதிர்கொண்டிருந்த நிலையில் இது சாதகமான விளைவை ஏற்படுத்தியது. இது தவிர மாநில அரசியலில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்கப் போவதாக குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, பாஜகவினர் கவலைப்படத் தொடங்கினர்.

முந்தைய தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 77 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதை பாஜகவின் தேர்தல் உத்தி வகுப்போர் புறக்கணிக்கவில்லை. பாஜகவின் இடங்கள் அப்போது 99 ஆகக் குறைந்தது. மேலும் 2017இல் 33க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இடையிலான வெற்றி வித்தியாசம் 2,000 வாக்குகள் அல்லது அதற்கும் குறைவாக இருந்தது.

2017இல் 1.49 கோடி வாக்குகளைப் பெற்ற பாஜக, 2019 மக்களவைத் தேர்தலில் 1.85 கோடி வாக்குகளைப் பெற்றது. இம்முறை கட்சி இரண்டு கோடி வாக்குகள் என்ற இலக்கை தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்டது. அதை அக்கட்சி சாதித்துவிட்டது.

குஜராத் தேர்தல்

இந்துத்துவ துருப்புச்சீட்டு

இந்துத்துவ துருப்புச்சீட்டை பயன்படுத்தி, இந்துத்துவ மொழியைப் பேசக்கூடிய ஒரு கட்சியின் எதிர்ப்பை இம்முறை பாஜக சந்திக்க வேண்டியிருந்தது. அதனால்தான் இம்முறை அக்கட்சி வகுப்புவாத கருத்துகளைக் குறைந்த அளவிலேயே வெளியிட்டது. தேர்தல் பேரணிகளில் பிரதமர் மோதி, கேஜ்ரிவாலையோ அல்லது ஆம் ஆத்மி கட்சியையோ அதிகம் குறிப்பிடக்கூடாது என்பதில் பாஜக இந்த முறை கவனமாக இருந்தது.

மறுபுறம் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாகச் செயல்பட்டதால், அக்கட்சி பாஜகவுக்கு கடும் போட்டியை அளிக்க முடியும் என மக்கள் நினைக்கத் தொடங்கினர். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் அக்கட்சியின் பல எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்ததால் கட்சி பலவீனமடைந்தது. காங்கிரஸின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி கட்சி பறித்துவிட்டதாகப் பலரும் கருதுகின்றனர்.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சுமார் 13 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஐந்து இடங்களில் மட்டுமே வென்றாலும், இப்போது தேசியக் கட்சியாக மாறியிருப்பதால் அக்கட்சி மகிழ்ச்சியில் உள்ளது. காங்கிரஸுக்கு இழப்பை ஏற்படுத்தி ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வெற்றி காங்கிரஸை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தனது வலிமைமிக்க கோட்டையான குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காலூன்றிவிட்டால் அது வருங்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று பா.ஜ.க.வினர் கலக்கமடையக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காணொளிக் குறிப்பு, குஜராத்தில் படுதோல்வி ஹிமாச்சலில் வெற்றி – என்ன சொல்கிறது காங்கிரஸ்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: