டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி வெற்றியின் முக்கியத்துவம் என்ன?

அபினவ் கோயல் பிபிசி செய்தியாளர்

ஆம் ஆத்மி வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கைப்பற்றியது

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட டெல்லி எம்சிடியின் அதிகாரத்தை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. 15 ஆண்டுகளாக நிர்வாகப் பொறுப்பில் இருந்த பாஜக தேர்தலில் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றி, ஆம் ஆத்மி கட்சி கட்சிக்கு பல வாய்ப்புகளையும் வழிகளையும் திறந்து வைத்துள்ளது. அதே சமயம் சில சவால்களையும் அது சந்தித்தாக வேண்டும்.

இந்த சவால்கள் என்ன? அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இந்த வெற்றியின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும்? டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆட்சியில் இருந்து அகற்றுவது இப்போது கடினமாகிவிட்டதா?

2024 மக்களவைத்தேர்தலில் அக்கட்சியால் பா.ஜ.கவை எதிர்க்க முடியுமா? அவரால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமா?

போராட்டங்கள், மோதல்கள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியுமா? இந்தக் கேள்விகளுடன் கூடவே பாஜகவுக்கு இந்தத் தோல்வி எவ்வளவு பெரியது என்பதைப் பற்றியும் நாம் பேசுவோம்.

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள்

டெல்லி எம்சிடி ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. முன்னதாக இது வடக்கு டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு டெல்லி மாநகராட்சி என மூன்று பகுதிகளாக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம், டெல்லி எம்சிடியை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆம் ஆத்மி வெற்றி
படக்குறிப்பு, டெல்லி மாநகராட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள்

ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு, வார்டுகளின் எண்ணிக்கை 272ல் இருந்து 250 ஆக குறைக்கப்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 இடங்களும், பாஜக 104 இடங்களும், காங்கிரசுக்கு 9 இடங்களும் கிடைத்துள்ளன.

அரவிந்த் கேஜ்ரிவாலின் வெற்றிக்கான ஐந்து காரணிகள்

2017 டெல்லி எம்சிடி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 48 இடங்களை மட்டுமே பெற்றது. MCD தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி உள்ளூர் பிரச்சனைகளை முன்வைக்க முயன்றது. இதற்காக அசுத்தத்தை மிகப்பெரிய பிரச்னையாக ஆக்கியது.

"தேர்தலில் உள்ளூர் பிரச்னைகள் பற்றி பாஜக பேசவில்லை. அதனால் தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டது.

பாஜக தனது பிரசாரத்தில், சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் அளிக்கப்பட்ட வசதிகள், மதுபான ஊழல் மற்றும் மனீஷ் சிசோடியா குறித்துப் பேசியது,” என்று மூத்த பத்திரிக்கையாளர் ஹேமந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பாஜக 15 ஆண்டுகளாக டெல்லி எம்சிடியில் அதிகாரத்தில் இருந்தது. அது தனது சாதனைகளைச் சொல்லவில்லை. அவற்றை முன்வைக்கவில்லை. ஏனெனில் அவர்களின் பணி சிறப்பாக இருக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு அதன் பலன் கிடைத்தது."

மூத்த தொலைக்காட்சி செய்தியாளர் கிருஷ்ண மோகன் ஷர்மாவும் இதையே கூறுகிறார். பிபிசியிடம் பேசிய அவர், "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, ‘அசுத்தம்’ தொடர்பான விவகாரத்தை பெரிய அளவில் பிரச்சனையாக முன்வைத்தது,”என்றார்.

"மக்கள் ’அசுத்தம்’ பிரச்னை தொடர்பாக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு ஆதரவாகவும் வாக்களிக்க செல்லவில்லை. இதனால் பாஜகவுக்கு நஷ்டம் ஏற்பட்டது,”என்று அவர் குறிப்பிட்டார்.

"டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த முறை மக்கள் இதையும் மனதில் வைத்து வாக்களித்துள்ளனர்" என்று மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி தெரிவித்தார்.

ஆம் ஆத்மி வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி மாநகராட்சித் தேர்தல்

மக்களுடன் இணைந்திருப்பதும் அரவிந்த் கேஜ்ரிவாலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ​​

“பாஜக எம்பிக்கள் பிரவேஷ் வர்மா, ரமேஷ் பிதுரி, ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோரின் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி இடங்களில் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் எம்எல்ஏக்களும் மக்களுடன் நல்ல தொடர்பைக் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு வெற்றியை தந்தது,”என்று கிருஷ்ண மோகன் ஷர்மா குறிப்பிட்டார். டெல்லி எம்சிடி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லாமல் போனதற்கு ஆட்சிமாற்றத்தை விரும்பும் போக்கு மற்றும் ஊழல் ஒரு பெரிய காரணம் என்று கிருஷ்ண மோகன் ஷர்மா கருதுகிறார்.

ஆம் ஆத்மி கட்சி வெற்றியின் முக்கியத்துவம் என்ன?

டெல்லியில் மூன்று அதிகார மையங்கள் உள்ளன. எம்சிடி, டெல்லி அரசு மற்றும் மத்திய அரசு.

​​“2017 எம்சிடி தேர்தலில் பாஜக 39 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அது குறையவில்லை. ஆனால் இடங்கள் கண்டிப்பாகக் குறைந்துள்ளன. அதேசமயம் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 21 சதவிகித்தில் இருந்து சுமார் 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. காங்கிரஸ் இழந்த வாக்குகளை, ஆம் ஆத்மி கட்சி அறுவடை செய்துள்ளது,’ என்று மூத்த பத்திரிக்கையாளர் ஹேமந்த் அத்ரி கூறினார்.

டெல்லி எம்சிடி வெற்றி ஒரு பெரிய செய்தியாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை ஆம் ஆத்மி கட்சி காட்டியுள்ளதாக ஹேமந்த் அத்ரி கூறுகிறார்.

"ஆம் ஆத்மி கட்சி உறுதியுடன் தேர்தலை சந்தித்தால், பாஜகவை தோற்கடிக்க முடியும். ஆனால் அதற்காக அக்கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,"என்றார் அவர்.

ஆம் ஆத்மி வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியது

”கேஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராகிவிட்டார் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களவையில் ஒரு எம்.பி.கூட இல்லை. அப்படி இருக்கும்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு எப்படி வரும்?

பா.ஜ.க வின் முக்கிய போட்டியாளரான காங்கிரஸை ஆம் ஆத்மி கட்சி முடிக்கப் பார்க்கிறது. மக்கள் இதை அதீத உற்சாகத்தில் சொல்கிறார்கள். ஆனால் இதற்கு அர்த்தம் ஏதும் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

மூத்த பத்திரிக்கையாளர் சந்தீப் இதையே கூறுகிறார்.

”எம்சிடி தேர்தலுக்கும் மக்களவை தேர்தலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

”எம்சிடி தேர்தல் உள்ளுர் பிரச்னைகளை முன்வைத்து நடக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு மற்றும் மோதியின் செயல்பாடு மக்களவை தேர்தலில் பார்க்கப்படும். ஆகவே இவற்றை ஒப்பிடுவது சரியல்ல,” என்கிறார் அவர்.

பாஜக தனது உறுப்பினரை மேயராக்க முடியுமா?

டெல்லி MCD தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பிறகும், ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் மேயர் ஆவது குறித்து இன்னும் சந்தேகம் உள்ளது. "எம்சிடி மேயர், வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்பட்ட 250 கவுன்சிலர்களுடன் கூடவே மூன்று மாநிலங்களவை மற்றும் ஏழு மக்களவை எம்.பி.க்களும் வாக்களிப்பார்கள்.

இதற்குப் பிறகு, டெல்லியின் துணைநிலை ஆளுநர் 12 உறுப்பினர்களை நியமனம் செய்வார். அவர்களும் அதில் வாக்களிப்பார்கள்,”என்று மூத்த தொலைக்காட்சி செய்தியாளர் கிருஷ்ண மோகன் ஷர்மா தெரிவிக்கிறார்.

"டெல்லி MCD தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கட்சி உறுப்பினர்கள் அல்ல. எந்த ஒரு கவுன்சிலரும் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கலாம், கட்சித்தாவல் தடைச் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது. எம்சிடியில் ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று, வேறு கட்சி மேயரை நியமித்தது முன்பும் நடந்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

பாஜக பின்னடைவு
படக்குறிப்பு, மீனாட்சி லேகி தொகுதியில் பாஜக பின்னடைவு

இந்த பாஜக தலைவர்களுக்கு ஆபத்து

டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளும் பாஜக வசம் உள்ளன. ஆனால் எம்சிடி தேர்தல்களில் சிலரது தொகுதிகளில் பாஜகவின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. இதில் பிரவேஷ் வர்மா, ரமேஷ் பிதுரி, ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் அடங்குவார்கள்.

"புதுடெல்லியில் மீனாட்சி லேகியின் தொகுதியில் 25 இடங்கள் உள்ளன. அதில் பாஜக 5 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது, ஆம் ஆத்மி இங்கிருந்து 20 இடங்களை வென்றுள்ளது," என்று மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ண மோகன் ஷர்மா குறிப்பிட்டார்.

மேற்கு டெல்லியில் பிரவேஷ் வர்மாவின் தொகுதியிலும் இதே நிலைதான். இங்கு ஆம் ஆத்மி கட்சி 38 வார்டுகளில் 24 இடங்களை வென்றது, பாஜக 13 இடங்களை மட்டுமே பெற்றது.

இது தவிர, தெற்கு டெல்லியில் ரமேஷ் பிதுரியின் தொகுதியில் உள்ள 37 இடங்களில் பாஜக 13 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 23 இடங்களையும் பெற்றுள்ளது.

வடமேற்கு டெல்லியின் பாஜக எம்பி ஹன்ஸ்ராஜ் ஹன்ஸின் தொகுதி, 43 எம்சிடி வார்டுகளைக் கொண்டுள்ளது. இதில் பாஜக 14 இடங்களையும், ஆம் ஆத்மி 27 இடங்களையும் பெற்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: