ஸ்காட்லாந்தில் 1,200 மான்களை கொல்ல வாக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன்?

மான்கள்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் சுமார் 1200 செந்நிற மான்கள் கொல்லப்பட வேண்டுமா என வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.

93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரவியுள்ள சவுத் உயிஸ்ட் எஸ்டேட்டில் வாழும் சிலர் மான்களில் உன்னிப் பூச்சிகள் கடித்து ஏற்பட்ட காயத்திலிருந்து லைம் என்ற நோய் பருவும் என்பதால் அவற்றை கொல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த எஸ்டேட்டை சேர்ந்த 200 பேர் அங்குள்ள மான்களை கொல்ல வேண்டும் என்று ஏற்கனவே கையொப்பமிட்ட நிலையில் அடுத்த வாரம் மேலும் 870 பேரிடம் ஒப்புதல் கேட்கப்படவுள்ளது.

இந்த நோய் குறித்து மட்டுமல்ல, அதிக மேய்ச்சல், மான்களால் சொத்துக்கள் சேதமாதல், தோட்டத்தை நாசப்படுத்துதல் போன்ற புகார்களும் எழுந்துள்ளன.

ஸ்டோரஸ் உபிஷிட் என்ற நிறுவனம்தான் இந்த எஸ்டேட்டை நிர்வகித்து வருகிறது.

இந்த நிறுவனம் அந்த பகுதியில் அதிக எண்ணிக்கையில் மான்கள் இருப்பதாகவும், இந்த பிரச்னையை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “இந்த விலங்குகளை கொல்வது தேவையற்றது. இது எஸ்டேட்டுக்கு மட்டுமல்ல பரந்த சமூகத்திற்கே தீங்கு விளைவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

லைம் நோய்

லைம் நோய் குறித்தான கவலை பல வருடங்களாக இருந்து வருகிறது. பாக்டீரியாவால் ஏற்படும் இந்த தொற்று, நரம்பியல் பிரச்னைகளை ஏற்படுத்தும். மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் மூட்டு வலி அதிகரிக்கக் கூடும்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை உட்பட பல்வேறு அமைப்பால் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில், ஸ்காட்லாந்தில் வேறு எங்கும் இல்லாத அளவு அந்த பகுதியில் லைம் நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த பகுதியை சேர்ந்த டாம்மி மெக் டொனால்ட், உன்னிப் பூச்சிகளின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் அது அங்குள்ள மக்களுக்கு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.

“நாங்கள் இளம் வயதில் இருக்கும் போது மேய்கும் ஆடுகள் அல்லது மலைகளில் மட்டுமே அந்த பூச்சிகளை பார்ப்போம். ஆனால் சமீப வருடங்களில் மக்களின் தோட்டங்களிலும் கூட அதை பார்க்க முடிகிறது.”

மான்கள்

பட மூலாதாரம், Getty Images

உள்ளூர் விலங்குகள் நல மருத்துவரான டேவிட் பக்லாண்ட், "இந்த விலங்குகளை அதிக எண்ணிக்கையில் கொல்வதற்கான தேவையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார். மேலும், இந்த எஸ்டேட் மக்களுக்கு லைம் நோயால் அதிக பாதிப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த மான்களை கொல்ல வேண்டாம் என்று விவாதிப்பவர்களில் இந்த லைம் நோயால் பாதிக்கப்பட்ட அலாடயிர் மோஃபட்டும் ஒருவர். இந்த தொற்று இவரின் இதயத்தை பாதித்ததால் இவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் மானை நிர்வகிக்கும் பணி உருவாக்கப்பட்டு அதில் நிறைய பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்தது என்றும் மொஃபட் தெரிவிக்கிறார்.

இந்த எஸ்டேட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஸ்டோரஸ் யுய்பிஷ்ட், இந்த பிரச்னையை சரியாக கையாளவில்லை என்றும் தெரிவிக்கிறார்.

பல்வேறு செயற்பாட்டு அமைப்புகளும் மான்களை கொல்ல வேண்டாம் என குரல் கொடுத்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: