யூடியூபர் எம்.பியை பதவி நீக்க முடிவெடுத்த ஜப்பான் - ஒரு முறை கூட நாடாளுமன்றம் வராததால் நடவடிக்கை

அவைக்கு வராத எம்.பி. பதவிநீக்கம்

பட மூலாதாரம், GAASYY/YOUTUBE

படக்குறிப்பு, யோஷிகாஜூ ஹிகாஷித்தானி
    • எழுதியவர், ஷாய்மா கலில்
    • பதவி, டொக்கியோ செய்தியாளர்

ஜப்பானில் கிசுகிசு யூடியூபராக இருந்து எம்.பி.யாக தேர்வானவர் ஒருமுறை கூட நாடாளுமன்றத்திற்குச் செல்லாததால் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். ஜப்பானில் இந்த அடிப்படையில் பதவியிழக்கும் முதல் எம்.பி. இவர்தான்.

யோஷிகாஜூ ஹிகாஷித்தானி எனும் அந்த எம்.பியை ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் அவை வெளியேற்றியுள்ளது.

ஏழு மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு தேர்வான அவர், ஒரு நாள் கூட அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவே இல்லை.

அவைக்கு தொடர்ந்து வராமல் இருந்த அவரது எம்.பி பதவியை பறித்து நாடாளுமன்ற ஒழுங்குமுறை கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

யோஷிகாஜூ ஹிகாஷித்தானியை கடந்த ஜூலை மாதம் மேலவைக்கு வாக்காளர்கள் தேர்வு செய்தனர். யூடியூபில் காஸி என்ற பெயரில் அறியப்பட்ட அவர், பிரபலங்கள் குறித்த கிசுகிசுக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார்.

ஜப்பான் நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை, வெளியேற்றுதல் என்ற முடிவு மிகக் கடுமையான தண்டனையாக பார்க்கப்படுகிறது.

1950ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற நிகழ்வு 2 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. தொடர்ச்சியாக அவைக்கு வருகை தராததால் எம்.பி. ஒருவர் வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை.

நாடாளுமன்ற ஒழுங்குமுறை கமிட்டியின் முடிவை இவ்வார இறுதியில் ஜப்பான் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவுள்ளது.

'அவைக்கு வராத எம்.பி.' என்று அழைக்கப்படும் யோஷிகாஜூ ஹிகாஷித்தானி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

மோசடி குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்படலாம் அல்லது பிரபலங்களால் அவதூறு வழக்குகள் தொடரப்படலாம் என்ற அச்சத்தின் பேரில் அவர் நாடாளுமன்றத்திற்குச் செல்ல மறுத்து விட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.

அவைக்கு வராத எம்.பி. பதவிநீக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானிய நாடாளுமன்றம்

செய்ஜிகா ஜோஷி 48 என்ற ஜப்பானிய எதிர்க்கட்சி சார்பில் தேர்வான 2 எம்.பி.க்களில் இவரும் ஒருவர். முன்பு என்.எச்.கே. என்ற பெயரில் அறியப்பட்ட இந்த கட்சியின் ஒரே கோரிக்கை ஜப்பானின் பொதுத்துறை ஒளிபரப்பு அமைப்பை சீர்திருத்த வேண்டும் என்பதே.

விளம்பர நோக்கில் இந்த கட்சி அதன் பெயரை தொடர்ந்து மாற்றி வருவதாக அசாஹி ஷிம்புன் பத்திரிகை கூறுகிறது.

தொடர்ச்சியாக வருகை தராமைக்காக அவைக்கு நேரடியாக வந்து மன்னிப்பு கேட்குமாறு யோஷிகாஜூ ஹிகாஷித்தானிக்கு ஜப்பான் நாடாளுமன்றம் உத்தரவிட்டது. எம்.பி பதவியை தக்க வைத்துக் கொள்ள அதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று அவை உறுப்பினர்கள் எச்சரித்திருந்தனர்.

ஆனால், யோஷிகாஜூ ஹிகாஷித்தானி அதைச் செய்யத் தவறிவிட்டார்.

அதற்குப் பதிலாக, துருக்கி சென்று, அங்கு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக தனது ஊதியத்தை அளிக்கப் போவதாக யூடியூப் சேனலில் அவர் அறிவித்தார்.

அவரது புறக்கணிப்பு செனட் அவையை கோபமடையச் செய்யவே, அவரை வெளியேற்றி அதன் உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர்.

அவைக்கு வராததற்காக யோஷிகாஜூ ஹிகாஷித்தானியை வெளியேற்றுவது சட்ட விரோதம் என்று அவரது கட்சியைச் சேர்ந்த ஒரே ஒரு சக எம்.பி ஆன ஹமடா சத்தோஷி வாதிட்டார். ஆனாலும், யோஷிகாஜூ ஹிகாஷித்தானியை வெளியேற்றும் தீர்மானம் மீது நாடாளுமன்ற ஒழுங்குமுறை கமிட்டி ஒருமனதாக வாக்களித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: