தென் கொரியா- ஜப்பான் தலைவர்கள் சந்திப்பு ஏன் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது?

தென் கொரியா- ஜப்பான் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தென் கொரிய அதிபர் யூன் மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா (ஜோ பிடனின் இடது மற்றும் வலதுபுறத்தில் அமர்ந்துள்ளனர்) கடந்த ஜூன் மாதம் நேட்டோ மாட்ரிட் பேச்சுவார்த்தை போன்ற உச்சிமாநாட்டில் சந்தித்தனர்.
    • எழுதியவர், ஜீன் மெக்கன்சி - சியோலில் இருந்து
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தென் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்கள் வியாழனன்று டோக்கியோவில் சந்தித்து பேசியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் இந்த சந்திப்பு ஒரு புதிய மைல்கல் என்று பாராட்டப்படுகிறது. வட கொரியா கடந்த ஒரு வாரத்தில் நான்காவது சுற்று ஏவுகணைகளை ஏவியதற்கு மத்தியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

2011-க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த முதல் சந்திப்பில் என்னென்ன பங்கு வகிக்கின்ற என்பதை பிபிசி நிருபர்கள் ஆராய்கின்றனர்.

முதல் அடியை எடுத்துவைத்த சியோல்

இந்த உச்சிமாநாட்டை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளை எடுத்தவர் தென்கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல்.

கடந்த 12 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு மாநாட்டிற்காக தென் கொரியத் தலைவர் ஒருவர் ஜப்பானுக்கு அழைக்கப்படுவது இதுவே முதன்முறை. இந்த இரு அண்டைநாடுகளுக்கும் இடையேயான உறவு அவர்களின் கடந்தகால வரலாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா 1910 முதல் இரண்டாம் உலக போரின் இறுதிவரை ஜப்பானின் காலனிய நாடாக இருந்தது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கொரிய மக்களை தங்களின் சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் பணியாற்ற ஜப்பானிய ராணுவ வீரர்கள் கட்டாயப்படுத்தினர். பெண்கள், பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

இந்த வடு கொரிய மக்களால் மறக்க முடியாததாகவும் மன்னிக்க முடியாததாகவும் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம், ஜப்பான் அதன் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிபர் யூன் கைவிட்டார். அதற்கு பதிலாக, இந்த நிதியை தென் கொரியாவே திரட்டவும் அவர் ஒப்புக்கொண்டார். இவ்வாறு செய்வதன் மூலம், வடகிழக்கு ஆசியாவின் பாதுகாப்பிற்காக கடந்த கால கசப்புகளை ஒதுக்கி வைக்க அவர் முயன்றார்.

இந்த ஒப்பந்தத்தை மிகப்பெரிய அவமானம் என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். ஆனால், அதிபர் யூனின் முயற்சிதான் தற்போது அவர் டோக்கியோ செல்வதற்கான பாதையை ஏற்படுத்தி தந்துள்ளது. தென் கொரியாவில் உள்ள ராஜ்ஜிய உறவுகளுக்கான பிரதிநிதிகள் ஆச்சரியத்துடனும் ஈர்ப்புடனும் இதனை பார்க்கிறார்கள். வெளியுறவுக் கொள்கை தொடர்பான அனுபவம் இல்லாத, குறிப்பாக அரசியலில் புதியவர் ஒருவரின் துணிச்சலான , புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அவர்கள் இதைப் பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு வரை யூன் வழக்கறிஞராக இருந்தவர்.

அவர் பதவியேற்றதிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான முறிந்த உறவை சரிசெய்வதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக ஆக்கியுள்ளார். அணு ஆயுதம் ஏந்திய வட கொரியா மிகவும் ஆபத்தானதாக மாறி வருவதால், சியோல் டோக்கியோவுடன் உளவுத்துறையைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், அவர்களின் ராணுவத்தினர் இணைந்து செயல்படுவதன் மூலமும் பயனடைய முடியும்.

சீனாவின் எழுச்சியை எதிர்த்துப் போராட அதன் கூட்டாளிகளை நெருக்கமாக இழுக்க தீவிரமாக முயற்சிக்கும் தனது நட்பு நாடான அமெரிக்காவையும் அவர் மகிழ்விக்க விரும்புகிறார். யூனின் ஜப்பான் ஒப்பந்தத்தை `ஒரு புதிய அத்தியாயம்` என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டியுள்ளார். மேலும், அரசுமுறை பயணமாக வெள்ளை மாளிகைக்கு வரவும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தென் கொரியா- ஜப்பான் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச அளவில் தென்கொரியாவின் இடம் குறித்த ஒரு புதிய அத்தியாயத்தை இது குறிக்கிறது. வட கொரியா குறித்த தங்களது குறுகிய பார்வையை முடிவுக்கு கொண்டுவர அவர் விரும்புகிறார். அதற்கு பதிலாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா ஆற்றக்கூடிய பெரிய பங்கு குறித்து அவர் சிந்திக்கிறார். ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கான ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பு, இந்த பணியை நிறைவேற்றக்கூடும்.

பொருளாதாரப் பலன்களும் இந்த சந்திப்பில் உள்ளன. 2019ல் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு கடினமாக இருந்த காலக்கட்டத்தின்போது, சியோல் அதன் செமி-கண்டக்டர்களை உருவாக்க தேவைப்பட்ட ரசாயனங்களின் ஏற்றுமதிக்கு ஜப்பான் தடை விதித்தது. இந்த தடையை அகற்றுவது தொடர்பான பேச்சு, இந்த சந்திப்பில் முதன்மையாக இருக்கும் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக உடைந்துபோன நம்பிக்கையை மீண்டும் சரி செய்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி தருகிறது. தற்போதுவரை சியோல் டோக்கியோவை விட அதிகமாக விட்டுக் கொடுத்துள்ளது. ஒரு மூத்த ராஜ்ஜிய உறவுகளுக்கான பிரதிநிதி என்னிடம் கூறியதுபோல், தென் கொரியா நடன மேடைக்கு சென்று விளக்குகளை எரியவிட்டு அனைவரும் பார்க்க தனது அண்டை வீட்டாரை நடனத்துக்கு அழைத்துள்ளது. ஜப்பான் நடனமாட ஒப்புகொண்டுள்ளது. ஆனால், தென் கொரியா இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறது.

ஜப்பானுக்கும் மூலோபாய வெற்றி

தென் கொரிய தலைவர் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணம் தொடர்பாக பல உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். ஆனால் யூன் சுக் யோல் அவருக்குப் பிடித்தமான உணவுகளில் ஒன்றான `ஓமுரிஸ்` சையும்(ஆம்லேட்டுடன் கூடிய ஃபிரைட் ரைஸ்) உண்ணுவார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உச்சி மாநாட்டிற்கு பின்னர் புகழ்பெற்ற உணவகமான ரெங்கடேய்க்கு தென் கொரிய அதிபர் யூனை அழைத்துசெல்ல ஃபுமியோ கிஷிடா திட்டமிட்டுள்ளதாக யோமெரி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

`கூடுதல் தொலைவுக்கு செல்வது என்று ஒருசில ஊடகங்கள் இதனை விவரித்தன. அதேவேளையில், சமூக ஊடகங்களில் சிலர் இதனை ஓமரிஸ் ராஜதந்திரம் என்று அழைத்தனர்.

வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவார்கள் என்று ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெருக்கமான உறவு மூலம் இரு நாடுகளுமே பலனடையும் என்பதில் சந்தேகம் இல்லை. அனால், ஜப்பானுக்கு இதுவொரு மூலோபாய மற்றும் ராஜதந்திர ரீதியிலான வெற்றியாகும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான் ஹிரோஷிமாவில் மே மாதம் ஜி7 மாநாட்டை நடத்த தயாராகி வருகிறது. சீனா, வட கொரியா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல் குறித்த பேச்சு இந்த சந்திப்பில் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தென் கொரியாவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது மூலம் இந்த அச்சுறுத்தலை எப்படி கையாள்வது என்பது தொடர்பான மிகவும் உறுதியான நிலைப்பாடு ஜப்பானுக்கு கிட்டும்.

தென் கொரியா- ஜப்பான் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், EPA

இந்த சந்திப்பு அமெரிக்காவுக்கும் ஒரு முக்கிய செய்தியை அனுப்புகிறது. தற்போதும் தங்களது முக்கிய கூட்டாளியாக ஜப்பானை அமெரிக்கா நம்பலாம் என்பதை உறுதியளிக்க ஜப்பான் விரும்புகிறது. மேலும், பதற்றம் நிறைந்த, நிலையற்ற தன்மை அதிகரித்து வரும் பகுதியில் தாங்கள் சக்திவாய்ந்த நபராக இருப்பதாகவும் ஜப்பான் காட்டிக்கொள்ள விரும்புகிறது.

கொரிய தீபகற்பத்தில் ஜப்பானின் காலனித்துவ ஆட்சியின் போது கட்டாய தொழிலாளர் தகராறு காரணமாக டோக்கியோவிற்கும் சியோலுக்கும் இடையிலான உறவுகள் வீழ்ச்சியடைந்த 2019 க்குப் பிறகு ஜப்பானுக்கு வரும் முதல் தென் கொரிய அதிபர் யூன்.

தொலைக்காட்சி திரைகள், ஸ்மார்ட்போன் திரைகள் மற்றும் செமி கண்டக்டர்கள் ஆகியவற்றின் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயானங்களை தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஜப்பான் தடைவிதித்த பின்னர், இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்தது.

தென் கொரியா இந்த மாத தொடக்கத்தில் நீண்டகால சர்ச்சையைத் தீர்ப்பதற்கான திட்டத்தை அறிவித்தபோது, ​​ராஜ்ஜிய உறவுகளுக்கான பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு புதிய தொடக்கத்திற்கான உற்சாக உணர்வு இருந்தது .

ஜப்பான் பிரதமர் கிஷிடா இந்த நடவடிக்கையை பாராட்டினார். வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி "ஆரோக்கியமான நிலைக்கு உறவுகளை திரும்பப் பெறுவதற்கான" முயற்சியை வரவேற்றார், அதே நேரத்தில் இரு தரப்பினரும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட வர்த்தக தடைகளை திரும்பப் பெறுவது குறித்த பேச்சுவார்த்தைகளை அறிவித்தனர்.

இதைவிட முக்கியமான நேரத்தில் இந்த நல்லுறவு ஏற்படமுடியாது. ஜப்பான், தென் கொரியா மட்டுமல்லாது அவர்களுக்கு பொதுவான கூட்டாளியாக உள்ள அமெரிக்காவுக்கும் இந்த நல்லுறவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஜோ பிடன் வெளியிட்ட அறிக்கையில், இது "அமெரிக்காவின் இரண்டு நெருங்கிய நட்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு , கூட்டாண்மையின் ஒரு புதிய அத்தியாயம்" என்று கூறினார்.

"முழுமையாக உணரப்பட்டால், பொதுவான, திறந்த இந்தோ-பசிபிக்கிற்கான எங்கள் பகிரப்பட்ட பார்வையை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உதவும்," என்றும் அவர் கூறினார்.

ஆனால், இரு தலைவர்களுக்குமே இது மிகவும் எளிதானதாக இருக்காது. இரு நாடுகளின் அரசியல்வாதிகள் மத்தியில் இன்னும் ஒரு பெரிய வரலாற்று பதற்றம், அவநம்பிக்கை உள்ளது.

தற்போதைய சூழலில், பொதுவான மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை இந்த இரு நாடுகளுமே எதிர்கொண்டுள்ளன. வட கொரியா குறைந்தபட்சம் இரண்டு குறுகிய தொலைவு ஏவுகணைகளை ஜப்பான் கடலை நோக்கி செலுத்தி சோதனை செய்ய திட்டமிட்டுள்ள அதேவாரத்தில் இவர்களின் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

தென் கொரியா- ஜப்பான் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்

பியோங்யாங் வலிமையான, மேம்பட்ட ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது - மேலும் அது விரைவில் அணு ஆயுதங்களை சோதிக்கும் என்ற கவலையும் உள்ளது.

சீனா அப்பகுதியில் ஆக்ரோஷமாக விரிவடைந்து வருகிறது. சாலமன் தீவுகளில் அதன் ராணுவத் தளத்தின் சந்தேகத்திற்குரிய திட்டம் ( இந்த திட்டத்தை பெய்ஜிங் மறுக்கிறது) வாஷிங்டனையும் ஆசிய-பசிபிக்கில் உள்ள அதன் கூட்டாளிகளையும் கவலையடையச் செய்துள்ளது.

கடந்த மாதம், சீன உளவு பலூன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பின்னர், ஜப்பான் அரசாங்கம், 2019 முதல் நாட்டின் நிலப்பரப்பில் காணப்பட்ட மூன்று அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் சீன உளவு பலூன்களாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறியது.

எதிர்காலத்தில் வெளிநாட்டு பலூன் மூலம் நாட்டின் வான்வெளியில் ஏதேனும் மீறல்கள் நடந்தால் அது தொடர்பாக பலத்தை பயன்படுத்துவது குறித்த அதன் விதிகளை மறுபரிசீலனை செய்வதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற வெளிநாட்டு பலூன்களை சுட்டு வீழ்த்துவதை அரசாங்கம் நிராகரிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா முன்னதாக சுட்டிக்காட்டினார்.

தைவானை நோக்கி சீன ஆக்கிரமிப்பு ஏற்படக்கூடும் என்று ஜப்பான் தொடர்ந்து கவலைப்படுகிறது. யுக்ரேனில் நடந்து வரும் போரில் பெய்ஜிங் மாஸ்கோவை நோக்கிச் சாய்வதைத் தொடர்ந்து அந்த கவலைகள் ஆழமாகின்றன.

ஜப்பானும் தென் கொரியாவும் இடையே இன்னல் நிறைந்த கடந்த கால வரலாறு உள்ளது. ஆனால் இரு நாடுகளும் இப்போது பதற்றமான நிகழ்காலத்தையும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக நிச்சயமற்ற எதிர்காலத்தையும் எதிர்கொள்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: