உலகின் 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை - இதை சீனா எதிர்ப்பது ஏன்?

சீனாவுக்கு எதிராக ஆக்கஸ் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
    • எழுதியவர், கேத்தரின் ஆம்ஸ்ட்ராங், பிரான்சிஸ் மாவோ & டாம் ஹூஸ்டன்
    • பதவி, லண்டன், சிங்கப்பூர், சிட்னியில் இருந்து

இந்திய - பசிஃபிக் பிராந்தியத்தில் சீன செல்வாக்கை எதிர்கொள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் படையை உருவாக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. அது குறித்த விவரங்களையும் அந்நாடுகள் வெளியிட்டுள்ளன.

ஆக்கஸ் என அழைக்கப்படும் இந்த மூன்று நாடுகளின் ஒப்பந்தப்படி, ஆஸ்திரேலியா முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை பெறுகிறது. குறைந்தபட்சம் 3 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் உருவாக்கிய ரோல்ஸ்-ராய்ஸ் அணுஉலைகளை உள்ளடக்கிய அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் படையை உருவாக்க இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

"தவறான பாதையில் மூன்று நாடுகள்"

3 நாடுகளின் இந்த கடற்படை ஒப்பந்தத்தை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

"3 நாடுகளும் மேலும் மேலும் தவறான, ஆபத்தான பாதையில் அடியெடுத்து வைக்கின்றன" என்று சீன வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

அணுஆயுத பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கு நாடுகள் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக ஐ.நா.வுக்கான சீன தூதர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் அந்த பிராந்தியத்தில் அமைதியை பராமரிக்கும் நோக்கிலேயே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அணுசக்தியால் இயங்குபவையே தவிர, அணுஆயுதங்களைக் கொண்டவை அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கலிஃபோர்னியாவின் சான்டியாகோ நகரில் பிரிட்டன், ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்த பைடன், அணுசக்தி அல்லாத நாடாக நீடித்திருக்க வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் சீர்குலைக்காது என்றார்.

சீனாவுக்கு எதிராக ஆக்கஸ் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சான்டியாகோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ்

ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை, அதன் ராணுவ வலிமையை வலுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். பிரிட்டனுக்குப் பிறகு, அமெரிக்காவின் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெறும் இரண்டாவது நாடு ஆஸ்திரேலியாதான்.

ஆஸ்திரேலியாவிடம் தற்போதுள்ள டீசல் எஞ்சின் நீர்மூழ்கிக் கப்பல்களைக் காட்டிலும் அதிக தொலைவிலும், அதிவேகத்திலும் அந்நாட்டின் கப்பல் படை செயல்பட முடியும். இதன் மூலம் எதிரிகளின் நீண்ட தூர இலக்குகளையும் தாக்கும் வல்லமையை ஆஸ்திரேலியா முதன் முதலாகப் பெற்றிருக்கிறது.

இந்த ஒப்பந்தப்படி, ஆஸ்திரேலிய கப்பல் படை மாலுமிகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளங்களுக்கு இந்த ஆண்டு முதல் அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கே, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற பயிற்சியை அவர்கள் பெறுவார்கள்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அமெரிக்காவும், பிரிட்டனும் 2027-ம் ஆண்டு முதல் சிறிய அளவில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் படைத் தளத்தை பராமரிக்கும்.

2030களின் தொடக்கத்தில் அமெரிக்காவிடம் இருந்து 3 விர்ஜினியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்கும். தேவை மற்றும் விருப்பத்தைப் பொருத்து, அதே வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் மேலும் இரண்டை ஆஸ்திரேலியா வாங்கிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.

சீனாவுக்கு எதிராக ஆக்கஸ் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அணுசக்தியால் இயங்கும் விர்ஜினியா வகை நீர்மூழ்கிக் கப்பல்

அதன் பிறகு, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்காக முழுக்கமுழுக்க புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து, நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் எஸ்.எஸ்.என்.-ஆக்கஸ் என்று அழைக்கப்படும்.

இந்த தாக்குதல் வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷ் வடிவமைப்பின் அடிப்படையின் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் கட்டப்படும். 3 நாடுகளின் சிறந்த தொழில்நுட்பங்களும் அதில் பயன்படுத்தப்படும்.

இந்திய, பசிஃபிக் பிராந்தியம் சுதந்திரமான, திறந்த வெளியாக இருப்பதை உறுதி செய்ய 3 நாடுகளும் உறுதிபூண்டிருப்பதாக பைடன் தெரிவித்தார்.

"இந்த புதிய கூட்டணி மூலம், ஜனநாயக சக்திகள் சுய பாதுகாப்பையும், வளத்தையும் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்பதை நாங்கள் வெளிக்காட்டியுள்ளோம். இது நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்குமானது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் கட்டும் திறனை அதிகரிக்கவும், தற்போதுள்ள அணுசக்தியால் இயங்கும் விர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பல்களின் பராமரிப்பை மேம்படுத்தவும் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பேனிஸ் பேசுகையில், "இந்த திட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த 30 ஆண்டுகளில் 368 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு பிடிக்கும். ஆஸ்திரேலிய வரலாற்றில் அதன் பாதுகாப்புத் திறனை அதிகரிக்க ஒரே நேரத்தில் செய்யப்படும் மிகப்பெரிய முதலீடு இது" என்று கூறினார்.

ஆஸ்திரேலிய கப்பல் கட்டும் தளங்களில் நீர்மூழ்கிகளை கட்டுவது உள்நாட்டில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

இதேபோல், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சூனக்கும், இந்த நீர்மூழ்கிகளை கட்டும் பணிகள் நடக்கவுள்ள டெர்பி மற்றும் பரோ-இன்-ஃபர்னஸ் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார்.

ஆக்கஸ் கூட்டணி உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 18 மாதங்களில் உலகின் நிலைத்தன்மைக்கான சவால்கள் அதிகரித்திருப்பதாக ரிஷி சூனக் கூறினார்.

"யுக்ரேன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பு, அதிகரித்து வரும் சீனாவின் சீற்றம், இரான் மற்றும் வட கொரியாவின் மோசமான நடத்தை ஆகிய அனைத்துமே ஆபத்து, சீர்குலைவு, பிளவுபட்ட உலகை உருவாக்க அச்சுறுத்துகின்றன" என்கிறார் அவர்.

அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு பிரிட்டனின் பாதுகாப்பு செலவை அடுத்த 2 ஆண்டுகளில் 6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரிக்க ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.

2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் ராணுவக் கூட்டணி குறித்து சீனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் ஆயுதப் போட்டியை உருவாக்கும் ஆபத்து கொண்டது என்று சீன வெளியுறவுத்துறை கடந்த வாரமும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஆனால், இந்திய, பசிஃபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அந்த 3 மேற்கத்திய நாடுகளும் கூறுகின்றன.

மூன்று தலைவர்களுமே, இந்த ஒப்பந்தம் தங்களுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று வலியுறுத்திச் சொன்னாலும் கூட, இதற்கு அரசியல் எதிரொலி இல்லாமல் இல்லை.

இதற்காகவே, பிரான்சுடன் செய்து கொண்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள டீசல் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது. இது பிரான்சுடன் அரசியல் கருத்துவேறுபாடு உருவாகக் காரணமானது.

அத்துடன், ஆஸ்திரேலியா தனது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடன் கொண்டுள்ள உறவில் தர்மசங்கடத்தை எதிர்கொண்டுள்ளது. சீனாவுடன் வலுவான வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்ளும் அதேநேரத்தில், அமெரிக்காவுடனான ராணுவ உறவையும் தொடர்ந்து வலுப்படுத்த முடியுமா என்பதே ஆஸ்திரேலியா முன்புள்ள கேள்வி என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: