யுக்ரேன் போர்தான் புதினின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
- பதவி, ரஷ்ய சேவை ஆசிரியர்
மூன்று ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் கேட்ட ஒரு விஷயம் குறித்து நான் தொடர்ந்து சிந்திருக்கிறேன்.
அந்த நேரத்தில் புதினை அடுத்த 16 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிக்கும்படி ரஷ்யர்கள் வலியுறுத்தப்பட்டனர்.
மக்களை வலியுறுத்துவதற்காக, அந்த செய்தித்தொகுப்பாளர், உலக அமைதியின்மைக்கு மத்தியில் ரஷ்யா எனும் கப்பலை சிறப்பாக செலுத்திவரும் சிறந்த மாலுமியாக புதினை சித்தரித்தார்.
'
’ரஷ்யாவில் ஸ்திரத்தன்மை உள்ளது, ரஷ்யா பாதுகாப்பான துறைமுகம், புதின் இல்லாவிட்டால் நாம் என்னவாகியிருப்போம்’’ என்று அவர் கேட்டார்.
ஆனால், 2022, பிப்ரவரி 24ஆம் தேதி, அந்த ரஷ்ய மாலுமி தான் உருவாக்கிய புயலில் பனிப்பாறையை நோக்கி கப்பலைச் செலுத்தினார்.
யுக்ரேன் மீதான புதினின் படையெடுப்பு ரஷ்யாவின் அண்டை நாடுகளுக்கு அழிவையும் மரணத்தையும் கொண்டுவந்துள்ளது. மேலும், ரஷ்யாவிற்கு பெரிய அளவில் ராணுவ இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துள்ளதாக சிலர் மதிப்பிட்டுள்ளனர்.
யுக்ரேனில் போரிடுவதற்காக லட்சக்கணக்கான ரஷ்ய மக்களும், சிறைக்கைதிகளும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, உலகம் முழுவதும் ஆற்றல் மற்றும் உணவு விலையில் இந்தப் போர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் போர் ஐரோப்பிய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை அச்சுறுத்துகிறது.
அதிபர் புதின் யுக்ரேனைக் கைப்பற்ற ஏன் போர் தொடுக்க நினைத்தார்?
’’இதன் பின்னணியில் 2024 ரஷ்ய அதிபர் தேர்தல் இருந்ததாகக் கூறுகிறார்" அரசியல் ஆய்வாளர் எகடெரினா ஷுல்மேன்.
'’அந்தத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவிற்கு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. 2022இல் தங்கள் இலக்கை அடைந்து, 2023இல் மக்கள் மனதில் சிக்கலான தண்ணீரில் மட்டுமல்ல புதிய மற்றும் வளம் நிறைந்த துறைமுகத்திற்கு கப்பலை அழைத்துவந்துள்ள இப்படியொரு மாலுமியைப் பெற நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தினால் 2024இல் மக்கள் மீண்டும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள் என்று நினைத்தனர்’’ என்கிறார் அவர்.
இதில் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறதா?, உங்கள் திட்டம் தவறான புரிதல்கள் மற்றும் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தால் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

பட மூலாதாரம், EPA
தன்னுடைய சிறப்பு ராணுவ நடவடிக்கை மின்னல் வேகத்தில் இருக்கும் என ரஷ்யா எதிர்பார்த்தது. மேலும், சில வாரங்களுக்கு உள்ளாகவே யுக்ரேன் தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு வரும் என்றும் நினைத்தது. யுக்ரேனின் போராடும் திறனையும், யுக்ரேனை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளின் உறுதியையும் அதிபர் புதின் குறைத்து மதிப்பிட்டார்.
யுக்ரேன் மீது படையெடுத்து தான் தவறு செய்ததாக அதிபர் புதின் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.
புதின் ஒரு வருட நிலைமையை எவ்வாறு பார்க்கிறார்? யுக்ரேனில் அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்ற இரு முக்கிய கேள்விகள் எனக்கு எழுகின்றன.
இந்த வாரம் அவர் நமக்கு சில குறிப்புகள் கொடுத்துள்ளார்.
அவரது தேச உரை மேற்கத்திய எதிர்ப்பால் நிரம்பியுள்ளது. யுக்ரேனில் நடந்த போருக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோவை அவர் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார். மேலும் ரஷ்யாவை அப்பாவியாக சித்தரிக்கிறார். ரஷ்யா, அமெரிக்கா இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை புறக்கணிப்பதற்கான முடிவு, யுக்ரேனிலிருந்து பின்வாங்கவோ அல்லது மேற்கு நாடுகளுடனான தனது நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரவோ புதினுக்கு எந்த எண்ணமும் இல்லை என்பதைக் காட்டுகிறது.
மறுநாள், ஒரு கால்பந்து மைதானத்தில் ரஷ்ய வீரர்களுடன் புதின் மேடையைப் பகிர்ந்து கொண்டார். அந்த ரஷ்ய ஆதரவுப் பேரணியில், "ரஷ்யாவின் வரலாற்று எல்லைகளில் தற்போது போர்கள் நடந்து வருகின்றன" என்று கூறிய புதின், ரஷ்யாவின் துணிச்சலான வீரர்களைப் பாராட்டினார்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ரஷ்யா பின்வாங்கப்போவதில்லை.
"அவர் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை என்றால் முடிந்தவரை செல்வார். புதினைத் தடுக்க ராணுவ எதிர்ப்பைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார்
புதினின் முன்னாள் பொருளாதார ஆலோசகரான ஆண்ட்ரி இல்லரியோனோவ்.

பட மூலாதாரம், Getty Images
புதினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா?
"யாருடனும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியம். புதினுடன் அமர்ந்து அவருடன் ஒப்பந்தங்கள் செய்த வரலாற்றுப் பதிவு எங்களிடம் உள்ளது’’ என்கிறார் ஆண்ட்ரி இல்லரியோனோவ்.
புதின் அனைத்து ஒப்பந்தங்களையும் மீறினார். காமன்வெல்த் சுதந்திர நாடுகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தம், ரஷ்யா யுக்ரேன் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம், ரஷ்யா மற்றும் யுக்ரேனின் எல்லை தொடர்பாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தம், ஐ.நா சாசனம், 1975இன் ஹெல்சின்கி சட்டம், புடாபெஸ்ட் மெமோராண்டம் மற்றும் பல. அவர் மீறாத எந்த ஆவணமும் இல்லை.
உடன்படிக்கைகளை மீறும் போது, மேற்குல நாடுகள் மீது பழிபோட நீண்ட வெறுப்பு பட்டியலை ரஷ்ய அதிகாரிகள் கொண்டுள்ளனர். 1990களில் நேட்டோ கூட்டணியை கிழக்கு நோக்கி விரிவுபடுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியை மேற்கு நாடுகள் மீறியதாக ரஷ்யா கூறும் குற்றச்சாட்டு அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஆரம்பக் காலங்களில் புதின் நேட்டோவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை. 2002ஆம் ஆண்டில் நேட்டோவில் இணைவது குறித்த யுக்ரேனின் நோக்கம் பற்றி கேட்ட போது, யுக்ரேன் இறையாண்மை கொண்ட நாடு, தன் சொந்த பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்வது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை யுக்ரேனுக்கு உள்ளது என்றார். மேலும், இது ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையேயான உறவைப் பாதிக்காது என்றும் கூறினார்.
ஆனால், 2023ஆம் ஆண்டு அவரது நிலைப்பாடு வேறாக உள்ளது. அவரது பேச்சுகள் மற்றும் ஏகாதிபத்திய ரஷ்ய ஆட்சியாளர்களான பீட்டர் தி கிரேட் மற்றும் கேத்தரின் தி கிரேட் பற்றிய கருத்துகள், ரஷ்ய சாம்ராஜ்யத்தை ஏதோ ஒரு வடிவத்தில் மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று புதின் நம்புவதாகத் தெரிகிறது.
இதற்கு ரஷ்யா என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும்? அதிபர் புதின் ஒரு காலத்தில் நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்ததற்காக பெரிதும் புகழ் பெற்றார். தற்போது அந்தப் புகழ், அதிகரிக்கும் ராணுவ உயிரிழப்புகள், அணிதிரட்டல் மற்றும் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் மறைந்துவிட்டது.
போர் தொடங்கியது முதல் பல லட்சம் ரஷ்யர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதில் பலர் இளைஞர்கள், திறமையானவர்கள் மற்றும் படித்தவர்கள்.
போரின் விளைவாக, யெவ்ஜெனி பிரிகோஜினின் வாக்னர் குழு மற்றும் பிராந்திய பட்டாலியன்கள் போல துப்பாக்கிகளுடன் ஏராளமான குழுக்கள் உள்ளன. வழக்கமான ஆயுதப் படைகளுடன் அவர்கள் உறவு இணக்கமாக இல்லை. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் வாக்னருக்கும் இடையிலான மோதல், மேல்மட்டத்தில் உள்ள உட்கட்சி மோதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
"அடுத்த தசாப்தத்தில் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் மாஸ்கோவிலிருந்து வெளியாகும் Nezavisimaya Gazeta என்ற நாளிதழின் ஆசிரியர் கான்ஸ்டான்டின் ரெம்செகோவ்.

"புதினுக்குப் பிறகு சரியான நபர் உடனடியாக ஆட்சிக்கு வந்தால் உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அவர் மேல்தட்டு வர்க்கத்தில் உள்ளவர்கள் மீது அதிகாரம் கொண்டவராகவும், சூழலைப் பயன்படுத்தி சுரண்ட நினைப்பவர்களை தனிமைப்படுத்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.
ரஷ்யாவின் மேல்தட்டு வர்க்கத்தினர் யார் சரியான தேர்வாக இருக்கும் என்று தங்களுக்குள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்களா என்று கான்ஸ்டான்டினிடம் நான் கேட்டேன்.
’’அமைதியாக திரைமறைவில் விவாதிக்கிறார்கள்’’ என்றார் கான்ஸ்டான்டின்.
இந்த விவாதம் நடப்பது புதினுக்குத் தெரியுமா என்று கேட்ட போது, அவருக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறேன் என்றார்.
'’புதின் இருக்கும் வரை ரஷ்யா இருக்கும்’’ என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவை சபாநாயகர் இந்த வாரம் கூறினார்.
இது விசுவாசத்தின் அடிப்படையிலான கருத்தேயொழிய, உண்மை அடிப்படையிலானதல்ல. பல நூற்றாண்டுகளாக இருக்கும் ரஷ்யா தொடர்ந்து இருக்கும். ஆனால், அதிபர் புதினின் தலைவிதி தற்போது யுக்ரேனில் நடக்கும் போரின் முடிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












