ரஷ்யாவிற்கு எதிராக யுக்ரேனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் என்னென்ன? படங்களுடன் விரிவான பட்டியல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டேவிட் பிரவுன், ஜேக் ஹார்டன் & டுரல் அஹ்மத்ஸேட்
- பதவி, பிபிசி நியூஸ்
யுக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கு டாங்கிகள் அனுப்ப உள்ளதை ஜெர்மனியும் அமெரிக்காவும் உறுதிசெய்துள்ளன. வரவிருக்கும் மாதங்களில் 31 ஆப்ராம்ஸ் வகை டாங்கிகளை யுக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், 14 லெப்பர்ட்-2 வகை டாங்கிகளை தாங்கள் வழங்குவதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. தங்களது சொந்த தயாரிப்பான லெப்பர்ட்-2 வகை டாங்கிகளை யுக்ரேனுக்கு வழங்க விரும்பும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் விருப்பத்திற்கும் ஜெர்மனி சம்மதம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 14 டாங்கிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ள பிரிட்டன், இந்த முடிவை வரவேற்றுள்ளது. கடந்த பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் யுக்ரேனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கியுள்ளன.
டாங்கிகள்
தங்கள் நிலத்தைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றவும் தங்களுக்கு அவசரமாக மேற்குநாடுகளின் டாங்கிகள் தேவை என யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். தற்போது ரஷ்ய படைகள் பலமிழந்து இருப்பதாகக் கருதும் மேற்குநாடுகளைச் சேர்ந்த சில அதிகாரிகள், உயர்தர டாங்கிகள் ரஷ்ய படைகளை பின்னோக்கி நகர்த்த யுக்ரேனுக்கு உதவும் என நம்புகின்றனர். பல ஐரோப்பிய நாடுகளால் பயன்படுத்தப்படும் லெப்பர்ட்-2 வகை டாங்கி மற்ற வகை டாங்கிகளோடு ஒப்பிடும் போது பராமரிக்க எளிதானது மற்றும் குறைந்த எரிபொருள் செலவு கொண்டது.

ரஷ்ய படையெடுப்பை அடுத்து, மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு நேட்டோ தரநிலை ஆயுதங்களைவிட வார்சா ஒப்பந்த தர ஆயுதங்களை வழங்கவே ஆர்வமாக இருந்தன. ஏனெனில் யுக்ரேனின் ஆயுதப்படைகள் பயிற்சி பெற்ற வீரர்கள், தேவையான உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு திறன்களுடன் தயார் நிலையில் இருந்தன. நேட்டோ தர ஆயுதங்களுக்கு அதிக அளவிலான தளவாட உதவி தேவைப்படும். அந்த வசதி யுக்ரேனிடம் இல்லை. ஆனால், தங்களுடைய படைகள் தற்போது நோட்டோ தர ஆயுதங்களைப் பயன்படுத்த தயார் நிலையில் இருப்பதாக யுக்ரேன் நம்புகிறது. பதினான்கு சேலஞ்சர் 2 வகை டாங்கிகளை யுக்ரேனுக்கு வழங்குவதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வகை டாங்கிகள் பிரிட்டன் ராணுவத்தில் பிரதானமாக பயன்படுத்தப்படும் டாங்கிகள்.

சேலஞ்சர் 2 வகை டாங்கிகள் 1990களில் உருவாக்கப்பட்டவை. ஆனால், யுக்ரேன் படைகளிடம் உள்ள பல டாங்கிகளைவிட உயர்தரமானவை. படையெடுப்பிற்கு முன்னதாக வார்சா ஒப்பந்த தர T-42 டாங்கிகளை யுக்ரேன் பயன்படுத்தியது. 2022 பிப்ரவரி படையெடுப்பிற்குப் பிறகு 200க்கும் மேலான T-42S ரக டாங்கிகளை போலந்து மற்றும் செக் குடியரசிடமிருந்து பெற்றது.

31 ஆப்ராம்ஸ் வகை டாங்கிகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்ட போது, இதை உலகின் மிகவும் திறன்வாய்ந்த டாங்கி வகை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார். இதைப் பயன்படுத்துவது குறித்து யுக்ரேன் வீரர்களுக்கு அமெரிக்க உடனடியாக பயிற்சி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், டாங்கிகள் வழங்கப்படுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

போர் வாகனங்கள்
போர்க்களத்தில் வெற்றிபெற, பரந்த அளவிலான ஆயுதங்கள், ஒருங்கிணைப்போடு அவை குவிக்கப்படுதல் மற்றும் போதுமான தளவாட உதவி ஆகியவை தேவை என ராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர். யுக்ரேனுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பல கவச வாகனங்களில் ஸ்ட்ரைக்கரும் ஒன்று. 90 ஸ்ட்ரைக்கர்கள் விரைவில் யுக்ரேனுக்கு அனுப்பப்படும் என்று அமெரிக்கா சமீபத்தில் உறுதியளித்தது.

சமீபத்தில் அமெரிக்கா வழங்கிய மற்ற வாகனங்களில் பிராட்லி காலாட்படை போர் வாகனங்கள் 59 அடங்கும். இவை ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

வான் பாதுகாப்பு
கடந்த டிசம்பரில் பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை யுக்ரேனுக்கு அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த அதிநவீன அமைப்பு பயன்படுத்தப்படும் ஏவுகணை வகையைப் பொறுத்து 62 மைல்கள், அதாவது 100 கிமீவரை பாயும் வரம்பு கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்த யுக்ரேனிய வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது. இது ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு பேட்ரியாட் ஏவுகணை மூன்று மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளது என்பதால் இந்த அமைப்பு செயல்படுத்துவதற்கு மிகவும் செலவு வாய்ந்தது.

மோதல் தொடங்கியது முதல் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக சோவியத் கால S-300 என்ற தரையிலிருந்து வான்நோக்கி பாயும் வான்வழி அமைப்புகளை யுக்ரேன் பயன்படுத்துகிறது. பிப்ரவரியில் மோதல் தொடங்குவதற்கு முன், யுக்ரேனிடம் சுமார் 250 S-300s இருந்தன.

யுக்ரேனுக்கு அமெரிக்காவும் 'Nasams` (National Advanced Surface-to-Air Missile System) ஏவுகணை அமைப்பை வழங்கியுள்ளது. முதல் 'Nasams`கடந்த நவம்பர் மாதம் யுக்ரேனுக்கு வந்தடைந்தது. கூடுதலாக, பிரிட்டனும் பல வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது. அதில், தாழ்வான உயரத்தில் பறக்கும் விமானங்களை குறுகிய தூரத்தில் வீழ்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்டார்ஸ்டிரீக்கும் அடங்கும்.

20 கிமீ உயரத்தில் உள்ள ஏவுகணைகளை தாக்கக்கூடிய IRIS-T வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட பல வான் பாதுகாப்பு அமைப்புகளை ஜெர்மனியும் வழங்கியுள்ளது.
தொலைதூர ராக்கெட்டுகள்
அமெரிக்கா யுக்ரைனுக்கு அனுப்பபிய தொலைதூர ராக்கெட் லாஞ்சர்களில் எம்142 ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் அமைப்பு அல்லது ஹிமார்ஸும் அடங்கும். பல ஐரோப்பிய நாடுகளும் இதே மாதிரியான அமைப்புகளை யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன. தெற்கு யுக்ரேனில், குறிப்பாக கெர்சன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ரஷ்யப் படைகளை பின்வாங்கச் செய்ததில் ஹிமார்கள் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.

ஹிமார்களின் வரம்பு மற்றும் அதன் அமைப்புகள் அதில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளைப் பொறுத்து மாறுபடும். மேற்கத்திய நாடுகள் அதிக திறன்வாய்ந்த வெடிமருந்துகளை வழங்கவில்லை என்று நம்பப்படுகிறது. யுக்ரேனுக்கு வழங்கப்பட்டதாகக் கருதப்படும் வெடிமருந்து அமைப்புகள் சுமார் 50 மைல்கள், அதாவது 80 கிமீ வரம்பைக் கொண்டுள்ளன. இது ரஷ்ய தரப்பில் உள்ள ஸ்மெர்ச் அமைப்பை விட அதிகம். ஹிமார்ஸ் அமைப்புகள் ரஷ்யாவிடம் உள்ள இணையான அமைப்புகளை விட மிகவும் துல்லியமானவை.


ஹோவிட்சர்ஸ்
கிவ்வில் இருந்து ரஷ்யா பின்வாங்கிய பிறகு, போரின் பெரும்பகுதி நாட்டின் கிழக்கில் நடந்தது. அங்கு யுக்ரேனுக்கான பீரங்கிகளின் தேவை அதிகமாக இருந்தது. திறன்வாய்ந்த M777 ஹோவிட்சர்கள் மற்றும் வெடிமருந்துகளை யுக்ரேனுக்கு அனுப்பிய பல நாடுகளில் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகியவையும் அடங்கும். M777இன் வரம்பு ரஷ்யாவின் Giatsint-B ஹோவிட்ஸரைப் போன்றது. இது ரஷ்யாவின் D-30 ரக துப்பாக்கியை விட மிகவும் நீளமானது.

டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள்
ஒரே தாக்குதலில் டாங்கிகளை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான Nlaw ஆயுதங்களும் யுக்ரேனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

படையெடுப்பு தொடங்கிய அடுத்த சில மணிநேரங்கள் மற்றும் நாட்களில் தலைநகர் கீவில் ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தை நிறுத்தியதில் இந்த ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.
ட்ரோன்கள்
தற்போது வரையிலான போரில் ட்ரோன்கள் முக்கிய இடம்பெற்றுள்ளன. கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன. Bayraktar TB2 என்ற ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை துருக்கி சமீபத்திய மாதங்களில் யுக்ரேனிடம் விற்றுள்ளது. அதே நேரத்தில், இந்த ட்ரோன்களின் துருக்கிய உற்பத்தியாளர் யுக்ரேனுக்கு ஆதரவாக கூட்டு நிதி திரட்டல் மூலம் இந்த ட்ரோன்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பேய்ரக்டார் TB2s மிகவும் திறன்வாய்ந்த ட்ரோன் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது ரஷ்ய இலக்குகளைத் தாக்க தரையிரங்குவதற்கு முன்பாக சுமார் 25,000 அடி உயரத்தில் பறக்கக் கூடியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












