18 பேர் பலி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? அந்த '15 நிமிடங்களில்' என்ன நடந்தது?

புது டெல்லி, ரயில் நிலையம், விபத்து, பிரயாக்ராஜ், கும்பமேளா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சனிக்கிழமை இரவு, பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு செல்வதற்காக புது டெல்லி ரயில் நிலையத்தில் கூடிய மக்கள் கூட்டம்
    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சனிக்கிழமை இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பெண்களும் குழந்தைகளும் கூட இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வேயின் கூற்றுப்படி, பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவுக்கு பங்கேற்க சென்ற பெருங்கூட்டத்தால் இந்த நெரிசல் ஏற்பட்டது.

கும்பமேளாவுக்காக தொடர்ச்சியாக சிறப்பு ரயில்களை இயக்குவதாகவும், கண்காணிப்பு அறை அமைத்து, கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ரயில்வே துறை கூறிவரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

சனிக்கிழமை (பிப்ரவரி 15) அன்று புது டெல்லி ரயில் நிலையத்தில் என்ன நடந்தது? புது டெல்லி ரயில் நிலையத்தில் விபத்து நடந்த அந்த 15 நிமிடங்கள் குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'ரயில்வே எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை'

ரயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறுகையில், "இந்த விஷயத்தில் முற்றிலும் ஒருங்கிணைப்பு இல்லை. ரயில்வே பாதுகாப்புப் படை எப்போதும் கூட்டத்தைக் கண்காணித்து தேவையான தகவல்களை அனுப்புகிறது." என்றார்.

"ரயில் நிலையத்தின் ஒரு நடைமேடையில் கூட்டம் அதிகம் இருந்தால், அதற்கு அடுத்த ரயில் வேறு ஏதாவது நடைமேடைக்கு வரவைக்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து ரயில்களையும் ஒரே இடத்தைச் சுற்றி நிறுத்தி வைத்திருந்தது பெரிய தவறு. 'சத்' பூஜையின் போது (இந்து மத பூஜை) அதிக கூட்டத்தைத் தடுக்க தனி இடங்களை உருவாக்கியிருப்போம். இம்முறை, கும்பமேளாவின் போது புது டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே துறை இதுபோன்ற எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை." என அவர் தெரிவித்தார்.

முன்பே கண்டுபிடித்திருக்க வேண்டிய ஒரு தவறு, புது டெல்லி ரயில் நிலையத்தில் நடந்திருப்பதாக அருண்குமார் நம்புகிறார்.

ரயில்வே தரப்பில் தவறு நடந்திருப்பதாகவும், அவர்களால் மாலை 6 மணி முதல் 10 மணி வரை அதிகரித்த கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார் அவர்.

இதற்கிடையில், இரவு 9:30 மணிக்கு 9:45 மணிக்கு இடையே, அந்த இரண்டு நடைமேடைகளிலும் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. மக்கள் ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு ஓடிக்கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழத் தொடங்கினர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

புது டெல்லி, ரயில் நிலையம், விபத்து, பிரயாக்ராஜ், கும்பமேளா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சனிக்கிழமை, கிழக்கு இந்தியாவை நோக்கிச் செல்லும் பல ரயில்கள் குறுகிய நேரத்துக்குள் நடைமேடையின் ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றன

ஒரே திசையில் செல்லும் ஏராளமான ரயில்கள்

சனிக்கிழமை இரவு சுமார் 7 மணிக்கு, புது டெல்லி ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த ரயில் நிலையத்தின் 12ஆம் எண் நடைமேடையிலிருந்து சிவகங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

இதற்குள், பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் கூட ரயில்களில் ஏறமுடியாத அளவுக்கு ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது.

அதே 12ஆம் எண் நடைமேடையில் இரவு 9:45 மணிக்கு, புது டெல்லியிலிருந்து சுபேதார்கஞ்ச்-க்கு (பிரயாக்ராஜ்) 04404 என்ற எண்ணுள்ள சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த ரயில் வந்த சற்று நேரத்தில் பயணிகள் கற்பனை செய்திராத ஒன்று ரயில் நிலையத்தில் நடைபெற்றது. பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில், நடைமேடை எண் 14-ல் சுமார் 9:30 மணிக்கு நிறுத்தப்பட்டது. அது 10:15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அதாவது அதன் பயணிகள் அந்த நடைமேடையில் இருந்தனர்.

அதற்கு முன் பிகாரை நோக்கிச் செல்லும் மகத் எக்ஸ்பிரஸுக்கு ஒரு பெரிய கூட்டம் காத்திருந்தது. பிகாரை நோக்கிச் செல்லும் ஸ்வதந்திரா செனானி எக்ஸ்பிரஸின் பயணிகள் 13ஆம் எண் நடைமேடையில் காத்திருந்தனர். அது மூன்று மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக நள்ளிரவைத் தாண்டி புறப்பட்டது.

அதாவது, அதிக தேவையிருந்த பல ரயில்கள் ஒரு குறுகிய இடைவெளியில் புது டெல்லியிலிருந்து கிழக்கு இந்திய மாநிலங்களை நோக்கிப் புறப்பட்டன. அவை 12, 13 மற்றும் 14ஆம் எண் நடைமேடைகளிலிருந்து புறப்பட்டுச் சென்றன.

நெரிசல் ஏற்பட்டது இந்த நேரத்தில்தான். ஆனால், விபத்து ஏற்பட்ட நேரம் மற்றும் விபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ள விசாரணை முடிவதற்காக ரயில்வே அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

'சிறப்பு ரயில் வந்தவுடன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது'

புது டெல்லி, ரயில் நிலையம், விபத்து, பிரயாக்ராஜ், கும்பமேளா
படக்குறிப்பு, வடக்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் ஹிமான்ஷு உபாத்யாயின் கூற்றுப்படி, பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் சிறப்பு ரயில் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே விபத்து ஏற்பட்டது

கும்பமேளாவுக்கு 12ஆம் நடைமேடையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ஒரு பெரிய கூட்டம் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக 12ஆம் எண் நடைமேடையில் காத்திருந்தது.

பிரயாக்ராஜ் விரைவு ரயில் என்பது ஒரு வழக்கமான ரயில். புது டெல்லியிலிருந்து பிரயாக்ராஜுக்கு செல்வதற்கு மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு ரயில்.

"பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் 14ஆம் எண் நடைமேடைக்கு வரவிருந்தது. மக்கள் அதற்காக காத்திருந்தனர். இதற்கிடையில் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு ஒரு சிறப்பு ரயில் நடைமேடை 12-ல் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் 14ஆம் எண் நடைமேடையிலிருந்து 12ஆம் எண் நடைமேடைக்கு நகர்ந்தனர்," என வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஹிமான்ஷு உபாத்யாய் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இதில் மக்கள் ஒருவரை ஒருவர் கடக்கத் தொடங்கினர், யாரோ தடுமாற, யாரோ விழ, இந்த பரிதாப நிகழ்வு நிகழ்ந்தது."

இரவு சுமார் 9:30 மணியளவில் கூட்டம் மிகவும் அதிகரித்திருந்தது. ஆனால் நெரிசல் தொடங்கவில்லை என, அந்த நேரத்தில் ரயில் நிலையத்தில் இருந்த நேரடி சாட்சி ஒருவர் தெரிவித்தார். மக்களின் கூட்டம் இருந்த அளவுக்கு பாதுகாப்பு காவல்துறையினர் இருக்கவில்லை என அவர் கூறினார்.

புது டெல்லி, ரயில் நிலையம், விபத்து, பிரயாக்ராஜ், கும்பமேளா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடைமேடை மாற்றப்பட்டதால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டதாக சில பயணிகளும் நேரில் பார்த்த சாட்சிகளும் கூறுகின்றனர்

சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், என்ன செய்வதென தெரியாமல் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்ததாக, ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத சிலர் தெரிவித்தனர். பயணிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன.

12ஆம் நடைமேடையில் இருந்தவர்கள் 14ஆம் எண் நடைமேடையை நோக்கியும், 14ஆம் எண் நடைமேடையில் இருந்தவர்கள் 12ஆம் எண் நடைமேடையை நோக்கியும் ஓட ஆரம்பித்தனர். இதில்தான் நெரிசல் நேர்ந்தது.

இரண்டு ரயில்களுக்கான அறிவிப்பும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டதால், எந்த ரயிலுக்கு செல்வது என மக்களால் முடிவு செய்ய முடியாமல் போய்விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மக்கள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு ஓடத்தொடங்கியதுதான் நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது. இது நடைமேடை14-லும் அதற்கு அருகே இருந்த நடை மேம்பாலத்திலும் நடைபெற்றது. இந்த சம்பவம் இரவு 9:30 முதல் 10:45 மணிக்குள் நடைபெற்றது.

ரயில் குறித்த அறிவிப்பு செய்யப்பட்ட பின்னர்தான் நடைமேடையில் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்த பலர் தெரிவித்தனர். வழக்கமான ரயில்களின் நடைமேடைகள் எதுவும் மாற்றப்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், நடைமேடை மாற்றப்பட்டதால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டதாக சில பயணிகளும் நேரில் பார்த்த சாட்சிகளும் கூறுகின்றனர்.

ஆனால் இதுவரை விசாரித்ததில், ரயிலின் நடைமேடை குறித்த மாற்றத்தை கடைசி நிமிடத்தில் ரயில்வே அறிவித்ததாக எந்த தகவலையும் பிபிசி கண்டுபிடிக்கவில்லை.

ரயில்வே துறை வழக்கமாக ஒவ்வொரு ரயிலின் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பான தகவல்களை அதன் இணையதளத்தில் புதுப்பிக்கிறது. இந்த இணையதளத்துக்குச் சென்று '04404 கும்பமேளா சிறப்பு' ரயில் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முயன்றபோது, சனிக்கிழமை இரவு 31 நிமிடங்கள் தாமதமாக இந்த ரயில் புறப்பட்டது குறித்தத் தகவல் மட்டுமே அங்கே வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு ரயில் தொடர்பான நடைமேடை குறித்தத் தகவல்கள் என்.டி.இ.எஸ்-இல் வழங்கப்படவில்லை, இது மற்ற ரயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை, விபத்து நடந்த நேரத்தில் நடைமேடை எண் 16-இன் நிலை என்ன? இங்கு எந்த ரயிலும் நிற்கவில்லை என்றால், இந்த நடைமேடைக்கு ஏன் சிறப்பு ரயிலை முன்கூட்டியே கொண்டு வரவில்லை?

இந்த விபத்துக்குப் பிறகு, புது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து கும்பமேளா சிறப்பு ரயில்கள் நடைமேடை எண் 16இலிருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அஜ்மீரி நுழைவுவாயிலில் இருந்து இந்த முதல் நடைமேடையை அடைய படிக்கட்டுகளில் ஏற வேண்டிய அவசியம் கிடையாது.

புது டெல்லி, ரயில் நிலையம், விபத்து, பிரயாக்ராஜ், கும்பமேளா
படக்குறிப்பு, சம்பவப் பகுதியை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்

ரயில்கள் தாமதமானது தான் முக்கிய காரணமா?

ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமானதற்கு சில ரயில்கள் தாமதமானதும் ஒரு காரணம் என நம்பப்படுகிறது.

இவற்றில் ஒன்றுதான் 12562 ஸ்வதந்திரா செனானி எக்ஸ்பிரஸ் ரயில். அது செல்லவேண்டிய இரவு 9:15 மணிக்குப் பதில் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயில் நடைமேடை எண் 13-ல் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் இந்த நடைமேடையில் அந்த நேரத்தில் ஏராளமானவர்கள் காத்திருந்தனர்.

"ஒன்றிரண்டு ரயில்கள் தாமதமான போது, அவை புறப்படும் நடைமேடையை மாற்றி மக்களை தொலைவில் உள்ள நடைமேடைகளுக்கு அனுப்புவதன் மூலம் கூட்டத்தைக் குறைத்திருக்க முடியும்," என்கிறார் அருண்குமார் .

இந்த விபத்து குறித்து விசாரிக்க ரயில்வே ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இதில் ஆர்.பி.எஃப் அதிகாரி பங்கஜ் கங்வாரும் இடம்பெற்றுள்ளார். பங்கஜ் கங்வார் முதன்மை பாதுகாப்பு ஆணையராக உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பங்கஜ் கங்வார் புது டெல்லி ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

நாம் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தோம். கூட்டத்தைக் கருத்தில் கொள்ளும்போது பாதுகாப்புப் படையினர் எவ்வளவு பேர் ரயில் நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டனர்? விசாரணை நடைபெறுவதற்கு முன்பாகவே அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டது, விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்துக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும்?

இந்த ஒவ்வொரு கேள்விக்கும் விசாரணை முடியும் வரை காத்திருக்கும்படி அவர் தெரிவித்தார்.

ஒருபுறம் ரயில்வே அதிகாரிகள், சனிக்கிழமை வந்த கூட்டம் எதிர்பாராதது என்கிறார்கள், மறுபுறம், உத்தரப் பிரதேச அரசு பிரயாக்ராஜில் வரலாறு காணாத அளவு பக்தர்களின் வருகை குறித்து பேசிக்கொண்டிருக்கிறது.

புது டெல்லி, ரயில் நிலையம், விபத்து, பிரயாக்ராஜ், கும்பமேளா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதன்மை பாதுகாப்பு ஆணையர் பங்கஜ் கங்வார், சம்பவ இடத்தை ஞாயிற்றுகிழமை காலை பார்வையிட்டார்

பிரயாக்ராஜுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை

பொதுவாக, 'சத்' போன்ற விழாக்களின்போது ரயில்வே மிகப்பெரிய முன்னேற்பாடுகளை செய்யும். கூட்டத்தை சமாளித்து சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மக்களை அனுப்பும் வகையில் கூட்டம் வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்படும்.

பிரயாக்ராஜ் சாலைகள் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏராளமான மக்கள் கூட்டம் இருப்பது குறித்தும், போக்குவரத்து நெரிசல், ரயில் நிலையங்களில் கூட்டம் குறித்தும் சில நாட்களாகவே செய்திகள் வெளியாகின்றன. ரயில்வேயும் புது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து பிரயாக்ராஜுக்கு இரண்டு சிறப்பு ரயில்களை சனிக்கிழமை மாலை இயக்கியது.

"மாலையில் ஏரளமான கூட்டம் இருந்தது, நடைமேடை 14 மற்றும் 15-ல் பலர் இருந்தனர். அதற்கு முன் எல்லாம் சரியாக இருந்தது. நாங்கள் சில சிறப்பு ரயில்களையும் இயக்கினோம். அது சீராக சென்றது." என ரயில்வே அமைச்சகத்தின் செயல் இயக்குநர் (செய்தி விளம்பரம்) திலீப் குமார் தெரிவித்தார்.

"இரவு நேரம் என்பதால் இதுவே கடைசி ரயிலாக இருக்கலாம் என மக்கள் நினைத்திருக்கலாம். இதனால் தள்ளுமுள்ளு அல்லது நெரிசல் ஏற்பட்டிருக்கலாம். பலர் படிக்கட்டில் தவறி விழுந்தனர். அதனால் இந்த சம்பவம் நடந்தது." என்கிறார் அவர்.

நடைமேடைகளிலும், நடைமேம்பாலங்களிலும், படிக்கட்டுகளிலும் அமர்ந்து மக்கள் ரயிலுக்காக காத்திருப்பதை ரயில் நிலையங்களில் அடிக்கடி பார்க்கலாம்.

இந்த மக்கள், ரயிலை பார்த்த பின்னர் அந்த குறிப்பிட்ட நடைமேடையை நோக்கி நடக்கத் தொடங்குவர். தங்களது சுமைகளை சுமந்துகொண்டு அதிக தூரம் நடக்க வேண்டாம் அல்லது படிகளில் ஏறவேண்டாம் என்பதுதான் இதன் நோக்கம்.

சனிக்கிழமை இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் இதேபோன்றதொரு சூழ்நிலைதான் நிலவியது.

புது டெல்லி, ரயில் நிலையம், விபத்து, பிரயாக்ராஜ், கும்பமேளா
படக்குறிப்பு, சிறப்பு ரயில் குறித்த அறிவிப்புக்கு பிறகே பிரயாக்ராஜுக்கு செல்ல எந்த ரயிலில் ஏறவேண்டும் என்பது குறித்து மக்கள் குழப்பமடைந்ததாக ரயில் நிலையத்தில் பணிபுரியும் பலரும் நம்புகின்றனர்

"இந்த கூட்டத்தை முறையாக கையாளாமல் ரயில்வே தவறு செய்துள்ளது. கடைசி நிமிடத்தில் ஒரு பெருங்கூட்டத்தின் முன் அறிவிப்பை வெளியிட்டதால் இது நடந்துள்ளது. இதைபோன்ற ஏற்பாடுகள் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் இருக்க மக்களின் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் அங்கும் இங்கும் அமரக்கூடாது என்பதை மக்களும் உணரவேண்டும்," என்கிறார் அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஷிவ் கோபால் மிஷ்ரா.

பிரயாக்ராஜுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு வார இறுதி நாட்களில் புது டெல்லியிலிருந்து ஃபாஃபாமாவ் (Phaphamau) ரயில் நிலையத்துக்கு மாலை 5:20 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

அதே பாதையில் இரண்டாவது சிறப்பு ரயில் இரவு 7:15 மணிக்கு இயக்கப்பட்டது. கூட்டத்தைக் கருத்தில் கொண்டு கடைசி நிமிடத்தில் இயக்கப்படும் இது போன்ற ரயில்கள் 'தேவைக்கேற்ப ரயில்கள்' என அழைக்கப்படுகின்றன.

சனிக்கிழமை கூட்டத்தைக் கருத்தில் கொண்டு புது டெல்லியிருந்து ஃபாஃபாமாவுக்கு (பிரயாக்ராஜ்) முதல் ரயில் 5:20 மணிக்கு இயக்கப்பட்டது. பெரும் கூட்டம் இருந்தும், அடுத்த சிறப்பு ரயில் இரவு 10 மணிக்கு பிறகுதான் அனுப்பப்பட்டது.

இந்த நேரத்தில், ரயில் நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. இது பற்றிய பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் அளிக்கப்படாமல் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)